×

நாகதோஷம் போக்கும் நாகநாத ஈஸ்வரர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த நாகநாத ஈஸ்வரர் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் கருவறையினுள் அமைந்திருக்கும் சிவலிங்கம் 16 பட்டைகளோடு காட்சியளிக்கிறது. இது பல்லவர் காலத்தில் கட்டிய கோயில் ஆகும். கி.பி 7ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த லிங்கம் தாராலிங்கம் எனப் பெயர் பெற்றதாகும். 3 அடி உயரம் கொண்ட இது மிகப் பருமனாக, கருப்பு நிறம் கொண்ட கருங்கல்லினால் படைக்கப் பட்டிருக்கிறது. இப்பகுதி மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறுவக்கூர் என அழைக்கப்பட்டதாக திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.  
 
தனித்தனி சன்னதிகள்

இக்கோயிலில் விநாயகர், நால்வர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், கெஜலட்சுமி, பிரம்மா, துர்கை, சண்டிகேசுவரர், கோரக்கசித்தர், போகர், அகத்தியர், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன் ஆகிய சன்னதிகள் உண்டு. மற்ற கோயில்களில் பிரம்மாவுக்கு சிமெண்ட் சிலை இருக்கும். இக்கோயிலில் கருங்கல் சிலை உண்டு போகருக்கு பழனியில் சிலை இல்லை. இக்கோயிலில் கருங்கல் சிலை உண்டு. அதேபோல்  விநாயகர், சண்டிகேசுவரா் போன்ற சிற்பங்கள் பல்லவர் கால கலைப்படைப்பாகவும் மற்ற கருங்கற் சிலைகள் அனைத்தும் சோழா்கால கலைப்படைப்பாகவும் திகழ்கிறது.

3 அடி உயரம் உள்ள சூரியமூர்த்தி, பைரவர், மகாவிஷ்ணு போன்ற சிற்பங்களும் சிறப்பு மிக்கவை. ஆலயத்தின் மேற்கே பெரியகுளம் இருந்திருக்கின்றது. தற்போது இது அழிந்த நிலையில் காணப்படுகிறது. இந்த குளத்தை இப்பகுதி மக்கள் மங்கல காணிக்குளம் என அழைக்கின்றனர். இதை தவிர கொய்மா நிலைக்குளம் என திருவதிகை கல்வெட்டின் அளவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இங்கு மற்றோரு குளம் ஒன்று இருந்துள்ளதும் தெரியவருகிறது.

ஆலயத்தினுள் கல்வெட்டுகள், சின்னங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் பல்லவ மன்னர்களின் காலங்களில் இக்கோயில் சிறப்பாக இருந்தது. சோழர்களின் ஆட்சி காலங்களில் இங்கு திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. இதன் தொன்மையும் சிலைகளின் அமைப்பும் நன்கு உணர்த்துகிறது.

கோயிலின் சிறப்பு

காஞ்சி மகா பெரியவர் நாகதோஷம் நீங்குவதற்கு இக்கோயிலில் 1 மண்டலம் (48 நாட்கள்) தங்கி நாகதோஷ பூஜைகள் செய்து வந்தார். இதனால் இவருக்கு நாக தோஷம் நீங்கியது என்பது வரலாறு.

பலன்கள்

நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு சென்று நாகதோஷ பூஜைகள் செய்து வந்தால் நாக தோஷம் நீங்கி வாழ்க்கையில் பல பலன்களை பெறலாம். திருநாகேஸ்வரம் தலத்திற்கு முன்பே இந்த கோயில் தோன்றியதாக ஊர் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு மூலவராக நாகநாத ஈஸ்வரர் அருள்பாலிக்கிறார். அம்பாள் தருணேந்துகேசரி என அழைக்கப்படுகிறார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது.

செல்வது எப்படி?

பண்ருட்டி அருகே அங்குச்செட்டி பாளையத்தை அடுத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவத்தூர் நாகநாத ஈஸ்வரர் கோயில் உள்ளது.

Tags : Naganatha Ishwar ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்