×

அதிசயமானவர் அவதரித்தார்

உலக வரலாற்றில் கி.மு. என்று வரலாற்றை இரண்டாகப் பிரித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசு என்றால் மீட்பர் என்றும் கிறிஸ்து என்றால் நிறைவு என்றும் பொருள்படும். இதை புசிக்க வேண்டாம் என்று ஆண்டவர் கூறிய கனியை ஆதாம்-ஏவாள் இருவரும் சாப்பிட்டபடியால்  கீழ்ப்படியாமை மூலமாய் உலகில் பாவம் பிறந்தது. தாங்கள் நிர்வாணிகள் என்று உணரப்பட்டார்கள். தேவனோடு பேசும் உன்னத அன்பை, உறவை ஆதிபெற்றோர் இழந்து போனார்கள். ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் அவர்களின் நிர்வாணத்தை மூடுவதற்கான ஓர் ஆடு அடிக்கப்பட்டது. அவர்களுக்குத் தோல் உடையை ஆண்டவர் வழங்கினார்.

நண்பரே! ஆதாம்-ஏவாள் செய்த பாவத்திற்கு பரிகாரமாக ஒரு ஆடு அடிக்கப்பட்டதுபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சர்வலோகத்தின் பாவத்தைப்போக்க பரிகாரியாக இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார். உலக வரைபடத்தில் மத்திய பாகத்தில் ஆசியாக்கண்டத்தில் ஜெருசலேம் என்னும் ஊரில் யோசேப்பு, மரியாள் இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்த காலத்தில் கன்னிமரியாளிடம் தேவதூதன் தோன்றி “பயப்படாதே! நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெற்றெடுப்பாய். அவருக்கு ‘இயேசு’ என்று பெயரிடுவாயாக. அவர் பூமியில் உள்ள மக்களை மீட்பதற்காக மனித அவதாரமாக பிறப்பார்” என்று தேவதூதன் கூறினான்.

அதே வேளையில் யோசேப்பினிடத்தில் தேவதூதன் தோன்றி “உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள சந்தேகப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியான குழந்தை பரிசுத்தமுள்ளது” என்று தேவதூதன் கூறினார். யோசேப்பு கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார். ரோமர் ஆட்சி காலத்தில் மக்கள் கணக்கெடுப்பு நடந்த போது யோசேப்பு-மரியாள் தங்களுடைய சொந்த ஊராகிய பெத்லகேமிற்கு பதிவு செய்யும்படி புறப்பட்டுப் போனார்கள். அந்நேரத்தில் மரியாளுக்கு பிரசவ காலம் நேரிட்டது. சத்திரத்தில் இடம் இல்லாதபடியால் மரியாள் மாட்டு கொட்டகையின் முன்னணையில் தேவகுமாரனாகிய இயேசுவை பாலகனாக பெற்றெடுத்தாள். அவர் பிறப்பின் காலத்தில் விண்ணில் ஒரு நட்சத்திரம் தோன்றியது.

வான சாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தை குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த நட்சத்திரத்தை தேடி ஜெருசலேம் நகரத்திற்கு வந்தார்கள். ரோமப்பேரரசின் அரசன் ஏரோது ராஜா ஜெருசலேமிற்கு கிழக்கில் இருந்து வந்த வானசாஸ்திரிகள் யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? என்று விசாரித்தார்கள். (ஏனென்றால் யூதர்கள் அக்காலத்தில் ரோமப்பேரரசில் அடிமைகளாக வாழ்ந்து வந்தார்கள்.) ராஜா மிகவும் பயந்து ஒரு கடுமையான சட்டத்தை இயற்றினார். என்னவெனில் இரண்டு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளை கொன்றுபோட ஆணையிட்டார். ஆனால் இயேசு கிறிஸ்து பாலகனாக இருந்தபோது தேவனால் காப்பாற்றப்பட்டார்.

வயல்வெளியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு தேவதூதன் இரவில் தோன்றி பயப்படாதிருங்கள். இதோ! எல்லா ஜனத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊராகிய ஜெருசலேமில் பிறந்திருக்கிறார் என்று அறிவிக்க அந்த நேரமே மேய்ப்பர்கள் இயேசுவை கண்டு பணிந்துகொண்டார்கள். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தபடியால் மக்களின் துன்பங்களை போக்கவும், பாவத்தின் மூலமாய் வந்த சாபங்கள், நோய்களைப் போக்கவும் மனுகுலத்திற்கு மெய்யான வாழ்வும் சமாதானமும், ஆசீர்வாதமும் வழங்கிட தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டார்.

பைபிளில் கூறப்பட்டுள்ள ஏசாயா என்னும் தீர்க்கதரிசி கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக 650 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். ஏசாயா 9:6-ல் நமக்கு
ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர்,
ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்று எழுதி வைத்தார்.

கிறிஸ்து இந்த உலகத்தில் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன் அநேக தீர்க்கதரிசிகள் அவர் பிறப்பை எழுதி வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் நமக்கு வேதாகமத்தில் உண்மைகளை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துமஸ் நாட்களில் கிறிஸ்துமஸ் தாத்தா நமது வீடுகளுக்குத் தேடி வந்து பரிசுப் பொருட்களைக் கொடுத்து நம்மை மகிழ்ச்சியாக மாற்றுகிறார். அதுபோல கிறிஸ்துமஸ் காலங்களில் நாமும் ஆதரவற்றவர்கள், எளியோர்கள் மேல் அன்பு செலுத்தி அவர்களை நேசித்து அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது நமது உள்ளத்திலும் இல்லத்திலும் ஆசீர்வாதம் பெருகும். நமது ஆண்டவரும் நம்மைத் தேடி வந்து நமக்காக இலவசமான மகிழ்ச்சியை தந்திருக்கிறார்.

கிறிஸ்துமஸ் என்பது இறைவன் நம்மைத் தேடிவந்த நாள். நமது துன்பம் துயரங்களைப் போக்க பூலோக வாழ்வை நாம் அனுபவிக்கவே கிறிஸ்துமஸ் நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் காலங்களில் நம்முடைய வாழ்க்கையில் உள்ள பாவ சாபங்கள் நீங்கி சிலுவையில் இயேசு கிறிஸ்து மன்னிப்பை வழங்கினதைப்போல் நம்முடைய வாழ்க்கையில் மன்னிப்பை ஏற்றுக்கொண்டவர்களாக கிறிஸ்துமஸ் பண்டிகையை சந்தோஷமாகக் கொண்டாடுகிறோம்.

Tags :
× RELATED முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!