×

குடும்பம் தழைக்க வீர ஆஞ்சநேயர்

மிகச் சிறிய ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில். உள்ளே நுழைந்ததும் அழகிய துளசி மாடமும், அதற்குக் கீழே வரிசையாக இருக்கும் சில நாகதேவதைகள் நம்மை வரவேற்கின்றன. “இது என்ன சிறிய கோயிலாக இருக்கிறதே?’’ என்று மனதில் தவறாக கணக்கிட்டுக் கொண்டே உள்ளே சென்றோம். மிக அழகாக கோபிசந்தங்களை தரித்துக் கொண்டு, துளசி மற்றும் பூவினால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பூஜை செய்பவர், வீர ஆஞ்சநேயருக்கு மங்கள ஆரத்தி காட்டினார். அதைக் கண்டு தரிசித்ததும், பயண அலுப்புகள் குறைந்து, உடலும் உள்ளமும் வலுப்பெற்றன. பெயருக்கு ஏற்றாற் போல், வீர ஆஞ்சநேயரை கண்டவுடன் நமக்குள் கம்பீ(வீ)ரம் ஏற்பட்டது. அதனுடைய இந்த வீர ஆஞ்சநேயரை பற்றி அறிய கோயில் நிர்வாகி ராமராவிடம் கேட்டறிந்தோம். அவர் கூறியது அப்படியே…. முன்னொரு காலத்தில், ராமாராவின் மூதாதையரான காசியம்மா என்பவருக்கு திருமணமாகி நீண்ட ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. தினம் தினம் மனம் வெதும்பி தனது துவைத சம்பிரதாயத்தின் முக்கிய கடவுளான முக்யபிராணன் அதாவது அனுமாரை அனுதினமும் மனமுருகி குழந்தை வரம் வேண்டியுள்ளார்.

ஒரு நாள் இரவில், “ராமதூதனாகிய என்னை பிரதிஷ்டை செய்து வழிபட்டால், உனக்கு குழந்தை பாக்கியமுண்டாகும்’’ என காசியம்மா கனவில் சிறிய வடிவிலான அனுமார் வந்து சொல்ல, அதன்படியே கர்நாடக மாநிலம், கே.ஜி.ஃப் மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள பிரபல சிற்பியிடம் விஷயத்தை தெரிவித்து, தன் கனவில் வந்த அனுமாரை அப்படியே வடிவமைத்துள்ளார், காசியம்மா. அந்த காலகட்டத்தில், போக்குவரத்து வசதிகளெல்லாம் கிடையாது. மேலும், துவைத சம்பிரதாயத்தில், மடி (மடி என்பது, கடவுளை தொடும் போது, குளித்துவிட்டு ஈரத்துணியை உடுத்திக் கொள்ளுதல்) என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆதனால், வடிவமைத்த வீர ஆஞ்சநேயரை, குளித்து மடியுடன் தனது தலையின் மீது வைத்துக் கொண்டு, கர்நாடக மாநிலத்தில் இருந்து, வேலூர் அருகில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம், விண்ணமங்கலம் வரை பல நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டேவந்திருக்கிறார், காசியம்மா.
அதன் பின், வெறும் நான்கு சுவற்றை மட்டுமே எழுப்பி, வாயுபுத்திரனை பிரதிஷ்டை செய்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில், வீர ஆஞ்சநேயரை பூஜை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல் மிகவும் தடுமாறியிருக்கிறார்கள். வீர ஆஞ்சநேயரின் அனுக்கிரகத்தால், பூஜைகளை மேற்கொள்வதற்கு, சுப்பன்னா என்பவர் கிடைக்க, அன்று முதல் சுப்பன்னா காலத்திற்கு பிறகும், இன்று வரை தொடர்ந்து இடைவிடாமல் பூஜைகளை செய்துவருகின்றார்கள்.

வீர ஆஞ்சநேயர் சொன்னபடி, காசியம்மாவிற்கு குழந்தைப்பேறு கிடைத்தாகிவிட்டது. அவரின் வம்சம், கல்பவிருட்சம் போல் விருத்தியடைய தொடங்கின. இன்றளவும் காசியம்மாவின் வம்சாவளிகள், இந்த வீர ஆஞ்சநேயரின் அருளால், துன்பங்கள் இன்றி வாழ்ந்துவருகிறார்கள்.நாம் ஏற்கனவே கூறியதைப் போல், துவைத சம்பிரதாயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமார்களுக்கு, மடிமடியாக நித்ய பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இரவு நேர கோயில் நடை சாற்றப்படும் போதுக்கூட, பூஜை செய்யும் நபர், குளித்துவிட்டு மடியாகத்தான் மங்கள ஆரத்தியை அனுமாருக்கு காட்ட வேண்டும். இப்படியிருக்க, இந்த பூஜை முறைகளை வீர ஆஞ்சநேயருக்கு, சுப்பன்னா மட்டும்தான் செய்துவந்திருக்கிறார். இவருக்கு குழந்தை கிடையாது. மேலும், வயோதிகம் வேறு. அதனால், இனி தனக்கு பின் இந்த வீர ஆஞ்சநேய ஸ்வாமியை யார் கிரமத்தோடு பூஜைகளை செய்வார்? என்கின்ற கவலை சுப்பன்னாவிற்கு அடிக்கடி வரத் தொடங்கின. நாட்கள் செல்ல.. திடீரென சுப்பன்னாவிற்குள் அனுமார் சென்று, `இனி ராஜன்தான் (ராமராவின் தம்பி) எனக்கு பூஜைகளை செய்யவேண்டும் என்று கட்டளையிட்டு, சென்றுவிடுகிறார். ஆனால், ராஜனின் தந்தை இதற்கு அனுமதிக்கவில்லை. மேலும், பல நாட்கள் செல்ல…

ஒரு நாள், ராஜனின் அம்மாவான வெங்கம்மாவிற்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. எங்கெங்கோ சென்றும் வயிற்று வலி குணமாகியபாடில்லை. அதன்பின், வெங்கம்மாவின் கனவில் தோன்றிய வீர ஆஞ்சநேயர், `உனது மகனை கோயில் பூஜைக்கு தருகிறேன் என்று வேண்டிக் கொள், உடனே உனது வயிற்று வலி குணமாகும்’ என கூறுகிறார். ராஜனின் தந்தை, தான் செய்த தவறை உணர்ந்து, மகனை பூஜை செய்ய கோயிலுக்கு தருகிறேன் என்று வேண்டியவுடன், வெங்கம்மாவிற்கு வயிற்று வலி குணமாகியது.தனது மகன் ராஜனுக்கு “ஸ்ரீ ஹரி வாயுஸ்துதி’’ போன்ற வேத மந்திரங்களை கற்க, சுப்பன்னாவிடமே அனுப்புகிறார். மிக நேர்த்தியாக பயபக்தியோடு மந்திரங்களை கற்றுத் தேர்ந்தார், ராஜன். “இன்றளவும் ஒரு குறைகளையும் வீர ஆஞ்சநேயர் எங்களுக்கு வைத்ததில்லை’’ என்று ராமராவ் கூறும்போது, அவரின் குரல் தழுதழுத்தது. சிறிய இடைவெளிவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார். வருடாவருடம் மத்வ நவமி, அனுமன் ஜெயந்தி ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அது மட்டுமா.. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தைப்பேறு கேட்டால் உடனடியாக வீர ஆஞ்சநேயர் அருள்கிறார்.

நம் முன்னோர்கள் பிரதிஷ்டை செய்த கோயில் ஆயிற்றே! நாமும் இன்று அனுமாரால் நல்ல நிலைமையில் இருக்கிறோமே! என கருதி, இந்த கோயிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார். அதன்படி, கோபுரங்கள் அமைத்து, பாலாலயம் செய்து 6.2.1995ல், ஸ்ரீ பாதராஜ மடத்தின் அப்போதைய மடாதிபதிகளின் கையினால் வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மீண்டும் சில கோயில் வேலைப் பாடுகளை மேற்கொண்டு, 2010-ஆம் ஆண்டு, ஸ்ரீ பாதராஜ மடத்தின் மடாதிபதிகளான ஸ்ரீ விக்ஞானநிதி தீர்த்தர் மற்றும் ஸ்ரீ கேசவநிதி தீர்த்தர் ஸ்வாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது, கோயிலானது புனரமைக்கப்பட்டு, வரும் 28.6.2024 – வெள்ளிக்கிழமை அன்று, காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள், ஸ்ரீ பாதராஜ மடத்தின் ஸ்வாமிகள் ஸ்ரீ ஸுஜயநிதி தீர்த்தர் திருக்கரங்களால், கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது. கோயில் தொடர்புக்கு: 86109 63625. அனைவரும் கலந்துக் கொண்டு, வீர ஆஞ்சநேயரை வேண்டி அருள் பெறுக! திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுக்கா, விண்ணமங்கலம் மதுரா, அய்யனூர் கிராமத்தில் இந்த கோயில் அமைந்திருக்கிறது. ஆம்பூரில் இருந்து சுமார் 4கி.மீ., பயணித்தால் விண்ணமங்கலத்தை அடைந்துவிடலாம்.

 

The post குடும்பம் தழைக்க வீர ஆஞ்சநேயர் appeared first on Dinakaran.

Tags : Sri Veera Anjaneyar Temple ,Basil Mata ,Viera Anjaneyar ,
× RELATED இப்போது சத்தியத்தை காப்பதற்கு யாரும் இல்லை?