×

வாட்ஸ்அப் மெசேஜில் முக்கிய பிரமுகரை கட்சியை விட்டு தூக்கிய தாமரையின் அட்ராசிட்டி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை கட்சி தமிழகத்தில் மலருதோ இல்லையோ சர்ச்சைகள் மட்டும் நாளுக்கு நாள் வளர்ந்து கிட்டே இருக்கு. முட்டைக்கு பேமசான மாவட்டத்தில் கூட லேட்டஸ்டா ஒரு கூத்து அரங்கேறியிருக்காமே.. என்ன விஷயம் அது..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இந்த மாவட்டத்தில் விவசாய அணி பொதுச் செயலாளராக இருப்பவர் வெப்படை பகுதியை சேர்ந்தவர். இவரு காவிரியாற்று உபரிநீரை தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு திருப்பி விடணும்ன்னு தொடர்ந்து கோரிக்கை வச்சுக்கிட்டே இருக்கார். இது தொடர்பா மாவட்ட தலைவரு தலைமையில், ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதி கேட்டுக்கிட்டே இருந்தார். ஆனா தலைவரிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் வரலை. இதனால் நொந்து நூடுல்ஸ் ஆன விவசாய அணி செயலாளரு, தனியா உண்ணாவிரதம் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதை முடிச்சதும், மாவட்ட தலைவரு கிட்ட நியாயம் கேட்டு கட்சி ஆபீசுக்கு போறேன் என்று தெரிவிச்சார். சொன்னபடியே உண்ணாவிரதத்தை முடிச்சவரு, மாவட்ட கட்சி ஆபீசை நோக்கி புறப்பட்டார். ஆனா பாதிவழியை விவசாயம் எட்டும் போதே, அவருக்கு மெசேஜ் ஒண்ணு வந்ததாம். உங்களை கட்சியை விட்டு நீக்கி ஒரு மணி நேரமாச்சு. அதனால நீங்க கட்சி ஆபீசுக்கு வரத்தேவையில்லை என்பதுதான் அந்த மெசேஜ். இதைப்பார்த்து அதிர்ந்து போன விவசாயம், அடுத்து என்ன பண்ணலாம் என்று ஆழ்ந்த யோசனையில் இருக்காராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குமரி மாவட்ட விவகாரம் என்ன..’’‘‘குட்டகுழி  அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆலன் மேஜர் என்பவரை, குமரி மாவட்டத்தில்  இருந்து நெல்லைக்கு இடமாற்றம் செய்து பொது சுகாதாரத்துறை இயக்குனர்  உத்தரவிட்டார். கலெக்டர் ஆய்வு கூட்ட அரங்கில், செல்போனை நோண்டி  கொண்டிருந்ததால் இந்த  இடமாற்ற உத்தரவு என கூறுகிறார்கள். இந்த இடமாற்ற  உத்தரவை கண்டித்து, அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் கன்னியாகுமரி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த  ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர்கள் சிலர், இடமாற்றம் செய்யப்பட்ட  விவகாரத்தை பற்றி பேசியதை விட, சம்பள உயர்வை கெடுத்தவர் இந்த கலெக்டர்தான்  என்று பேசினார்களாம். கலெக்டர் அரவிந்த், குமரி மாவட்டத்துக்கு வருவதற்கு  முன் நிதித்துறையில் இணை செயலாளர் பொறுப்பில் இருந்தார். அப்போது  டாக்டர்களின் சம்பள உயர்வு தொடர்பான கோப்புகள் சென்ற போது பல்வேறு கொக்கி  போட்டு, கோப்புகளை திருப்பி அனுப்பினாராம். இதனால் சம்பள உயர்வு இல்லாமல்  போனதாம். அந்த கோபத்தையும் சேர்த்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய சில  டாக்டர்கள், கலெக்டரை சற்று கடுமையாகவே விமர்சனம் செய்துள்ளனர்.  ஆர்ப்பாட்டம் திசை மாறி போகுதே என்று இதில் பங்கேற்ற டாக்டர்கள் சிலர்  காமெடியாக பேசிக் கொண்டனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பழைய பால் மந்திரிக்கு என்ன பிரச்னையாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தேர்தல்  ேதால்விக்கு பின் இலைக்கட்சியில் அமைதியான முறையில் காலம் தள்ளிய மாஜி  பால்வளம், தற்போது தனது குரலை மெல்ல உயர்த்த ஆரம்பித்திருக்கிறாராம்.  கட்சியில் இவர் எந்த அணி என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில்,  சேலத்துக்காரர் தலைமையை ஏற்றுக்கொண்டதால், பால்வளத்திற்கு மாநில, மாவட்ட  அளவில், முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டன. தேனிக்காரர் தரப்பில்  சேலத்துக்காரர் தரப்பு நிர்வாகிகளை நீக்கி, ‘வழக்கம்போல’ தங்கள் பங்கிற்கு  மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஆனால்,  தேனிக்காரர் தரப்புக்கு ஆதரவு காட்டி வருபவர்களை சேலத்துக்காரர் தரப்பில்  நீக்கி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் ‘மெடல்’ மாவட்டத்தில்  தேனிக்காரர், சேலத்துக்காரர் என இரு அணியும் கூட்டணியா இல்லை… உள்குத்து  வேலை எதுவும் நடக்குதா என பரவலாக பேச்சு துவங்கி உள்ளதாம். மேலும் முன்னாள்  பால்வளம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதால், இலைக்கட்சியை இங்கு மீண்டும்  கட்டமைப்பதற்கான பணிகள் எதுவும் நடக்கவில்லையாம். ஏற்கனவே இம்மாவட்டத்தில்  கட்சிக்கு அடி மேல் அடி விழுவதால், இதன்பேரிலும் சேலத்துக்காரர் தரப்பு  கேள்வி எழுப்பியுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வசூலில் கலக்கும் கல்வித்துறை  அலுவலரு, ஓய்வூதியர்களையும் விட்டு வைக்குறதில்லையாமே…’’ என அடுத்த  கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர்  மாவட்டத்தில் பிரியாணிக்கு பெயர் போன 4 எழுத்து பெயர் கொண்ட ஊர் அறிந்தது.  அந்த ஊரில், வட்டார கல்வி அலுவலகத்துக்கு பணியிடமாற்றமாகி, கடந்த சில  நாட்களுக்கு முன்னாடி பெயரின் முடிவில் நிலவை கொண்ட அதிகாரி ஒருவர்  வந்தாராம். வந்த சில நாட்கள்லயே வசூல் வேட்டையை நடத்தி வர்றாராம். அவரோட  சொந்த கார்ல ஜி ஸ்டிக்கரை ஒட்டிக்கிட்டு வர்றாராம். நகர் ஆட்சிக்கு  சொந்தமான பள்ளி கட்டிடத்துல, அனுமதி இல்லாம ஏசி பொறுத்தி சொகுசு கேபினையும்  அமைச்சுகிட்டாராம். இதனால, கூடுதலாக வர்ற இபி பில் யார் கட்டுறதுன்னு  கேள்வி எழுந்திருக்குது. இவரு, குறும்புக்கார கடவுளின் பெயரை  தொடக்கத்திலும் முடிவில் கிரியையும் கொண்ட மாவட்டத்துல இருந்து, தினமும்  கார்ல வந்து போறாராம். இதனால தினமும் ஒவ்வொரு பள்ளி எச்எம்ஸ்ஐ எரிபொருள்  நிரப்ப கட்டாயப்படுத்துறாராம். அதுமட்டுமில்லாம, அந்த அலுவலகத்துக்கு  வர்றவங்க இவருக்கு பிரியாணி வாங்கிகொடுத்தே ஆகணுமாம். இல்லான்னா வாய்விட்டு  கேட்டு தொல்லை கொடுக்குறாங்களாம். இதனால அந்த அலுவலகத்துக்கு வர்றவங்க  தலைய பிச்சுக்குறாங்களாம். ஓய்வூதியருங்களையும் விட்டு வைக்கறதில்லையாம்.  ஓய்வூதியருங்க தங்களது பணி பலனை பெற, கோப்புகள்ல கையெழுத்து வாங்க வந்தால்,  டார்ச்சர் செஞ்சி வசூலிக்குறாராம், இப்படி 4 எழுத்து பிரியாணி நகர்ல  இருக்குற வட்டார கல்வித்துறையில புலம்பல் சத்தம் ஓவராக  கேட்கத்தொடங்கியிருக்குது. உண்மைய விசாரிச்சு சம்மந்தப்பட்ட உயர்  அதிகாரிங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்திருக்குது’’ என்றார்  விக்கியானந்தா. …

The post வாட்ஸ்அப் மெசேஜில் முக்கிய பிரமுகரை கட்சியை விட்டு தூக்கிய தாமரையின் அட்ராசிட்டி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Tamarai ,wiki ,Yananda ,Lotus Party ,Tamil Nadu ,
× RELATED மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால்...