×

பள்ளி கொண்ட பரமன்

1. சுருட்டப்பள்ளியில் ஈசன் பள்ளிகொண்டு காட்சி தருகிறார். பொதுவாக விஷ்ணுதான் பள்ளி கொண்டிருப்பார். ஆனால் சிவபிரான் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருவதை சுருட்டப்பள்ளியில் மட்டுமே காணமுடியும்.
2. இவ்வாலயத்தில் மூன்று மூலஸ்தானங்கள் உள்ளன.
3. ஒன்று, வால்மீகேஸ்வரர் என்ற சுயம்பு லிங்க கருவறை. இந்த லிங்கம் வால்மீகி முனிவர் பூஜிப்பதற்காக உருவானது.
4. அடுத்த கருவறையில் இருப்பது ராம சந்திரமூர்த்தி பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கமான ராமலிங்கேஸ்வரர்.
5. மூன்றாவது, புடவையணிந்து, புன்னகை தவழ காட்சிதரும் மரகதாம்பிகையின் கருவறை.
6. வெளியே ஒரு நந்திகேஸ்வரரும் உள்ளே எதிரும் புதிருமாக உள்ள இரு லிங்கங்களுக்கிடையே ஒரு நந்திகேஸ்வரருமாக இரு நந்திகளை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
7. கற்சிலா ரூபமாக பள்ளி கொண்டு காட்சி தரும் ஈசன், பள்ளி கொண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இவரது தலையை பார்வதி தன் மடியில் இருத்திக் கொண்டிருக்கிறார்.
8. இந்தக் கோயிலில் குபேரனிடம் உள்ள சங்கநிதி, பாற்கடலில் தோன்றிய பத்மநிதி இருவரும் தத்தம் மனைவியரோடு தரிசனமளிக்கின்றனர்.
9. தட்சிணாமூர்த்தி தன் மனைவி தாராவுடன் தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார்.
10. கோயிலின் சனிப்பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். திருமணத் தடைகள் விலகும். தம்பதியர் ஒற்றுமை நிலவும்.
11. மரகதாம்பிகை சந்நதிக்கு இருபுறங்களிலும் துவாரபாலகியர்களுக்குப் பதிலாக காமதேனுவும் கற்பகவிருட்சமும் இடம் பெற்றுள்ளது வித்தியாசமானது.
12. விஷம் உண்ட களைப்பில் ஈசன் சுருண்டு படுத்து பள்ளி கொள்ள, அன்னை உமை அவர் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டாள். இதனாலேயே இந்த தலம் சுருட்டப்பள்ளி என்றானது; மூலவரும் பள்ளி கொண்டேஸ்வரர் ஆனார்.
13. இந்த ஈசனிடம் பிரார்த்தனை செய்து நிறைவேறியவர்கள் பிரதோஷத்தன்று வில்லமாலையை ஈசனுக்கு சமர்ப்பித்து தமது நன்றியினைத் தெரிவிக்கின்றனர்.
14. ஆலய பிராகாரத்தில் பூரண-புஷ்கலா சமேத சாஸ்தா, பிரம்மா-விஷ்ணு-சிவன் மூவரும் ஒன்றாகிக் காட்சியளிக்கும் ஏக பாத மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், சூரியன் ஆகியோரின் அற்புத விக்ரஹங்களை தரிசிக்கலாம்.
15. தட்சிணாமூர்த்திக்கு எதிரில் அம்ர்ந்த நிலையில், வீணை ஏந்திய சரஸ்வதியையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.
16. தசமி திதியன்று பாற்கடல் கடையப்பட்டது. மறுநாள் ஏகாதசி அன்றுதான் ஈசன் விஷம் அருந்தினார். அதற்கு மறுநாள் துவாதசி அன்று ஈசன் அயர்ந்து பள்ளி கொண்டார்.
17. மறுநாள் திரயோதசியன்று விஷ மயக்கத்திலிருந்து விழித்து எழுந்த பரமன், நந்தியின் கொம்பிடையே நடனமாடினார். அன்று சனிக்கிழமை வேறு. அதனால்தான் இந்தப் பிரதோஷ நாளை சனிப்பிரதோஷம் என்பர்.
18. நஞ்சை உண்ட பரமன் பள்ளி கொண்ட தலம் இது என்பதால் இத்தலத்தில் மாதந்தோறும் வரும் இரு பிரதோஷ வழிபாடுகளும் சிறப்பானதாகும்.
19. கருவறையில் பள்ளி கொண்டீஸ்வரருடன், அவர் தலையைத் தன் மடியில் வைத்து அமர்ந்துள்ள பார்வதி, சந்திரன், சூரியன், கின்னரர், கிம்புருடர், ரிஷிகள், விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகர் என அனைவரையும் தரிசிக்கலாம்.
20. சென்னை - திருப்பதி பாதையில், சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் ஊத்துக் கோட்டைக்கு அருகே சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. திருவள்ளூரிலிருந்தும் செல்லலாம்.

Tags : Paraman ,school ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி