×

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வந்தால் உடனே நாங்கள் தெரிவிப்போம்… மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை :  தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் முகாமை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டில் புற்று நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். வெளிநாட்டில் இருந்து வருவோர் கண்காணிக்கப்பட்டு குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.சென்னை, திருச்சி , மதுரை, கோவை விமான நிலையங்களில் குரங்கு அம்மை தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பன்னாட்டு விமான நிலையம் உள்ள மாவட்டங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனையிலும் 10 படுக்கைகளுடன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிப்பு நேரிட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. பாதிப்பு வந்தால் உடனே அறிவிப்போம். குரங்கு அம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன,’என்றார். …

The post தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வந்தால் உடனே நாங்கள் தெரிவிப்போம்… மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : outbreak of monkeypox ,Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,Saidapet Govt Hospital ,Tamilnadu ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...