×

பக்தைக்காக திருவாய்மொழிந்த ஈசன்

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயரைப் பெற்றது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். மதுரையில் வசிக்கும் வணிகன் ஒருவன் உடல்நிலை சரியில்லாத தன் மாமனைப் பார்க்க திருப்புறம்பியம் வந்தான். மாமன் இறக்கும் தருணம் தன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடினான்.

அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை செல்லுமுன் வணிகன் இத்தல ஆலயத்திற்கு வந்தான். இரவு தங்கியிருந்த போது அரவு கடித்து இறந்து விட்டான். அப்பெண் சிவபெருமானிடம் முறையிட்டாள். இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார். பெண்ணை கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம் விபரம் கூறி வாழ்ந்து வந்தபோது வணிகனின் முதல் மனைவி, இரண்டாவது பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவள் மானம் கெட்டவள் என்றும் பழி கூறினாள்.

இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம், மடைப்பள்ளி, கிணறு இவற்றோடு மதுரை சென்று திருமணம் நடந்ததற்குச் சாட்சி பகன்றார் இறைவன். வணிகப் பெண்ணின் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி சாட்சி கூறியதால் இத்தல இறைவனுக்கு சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஈசான்ய மூலையில் சாட்சி கூறிய படலத்திற்குச் சான்றாக இப்போதும் வன்னிமரமும், மடைப்பள்ளியும் இருப்பதைக் காணலாம்.

செட்டிப்பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு சாட்சியாக இருந்த வன்னிமரம் இத்தலத்தின் இரண்டாம் பிராகாரத்திலுள்ளது. ஆனால் இம்மரம் தலமரமன்று. தலமரம் புன்னைமரமே. இவ்வாலயத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இரண்டாவது பிராகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது. இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால் உருவாக்கப் பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யப்பெறும் தேன் யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும்.

வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயம் கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலையில் இருக்கும் புளியஞ்சேரி ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவிலுள்ள இன்னம்பர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவிலுள்ளது திருப்புறம்பியம். கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

Tags : devotional ,
× RELATED மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில்...