×

அஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்

* திருச்சி நீதி மன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகின்றன.

* சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்ப சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய்மூடி நெய் தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.

* கையில் பூச்செண்டுடனும், இருபுறமும் தேவியருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.

* கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணுல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

* சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.

* சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

* சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிடமிருந்து இந்திராணி பிரியாமல் காத்ததால் இவர் கைவிடேலப்பர் என போற்றப்படுகிறார்.

* பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென்திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.

* சிதம்பரம் அருகே உசுப்பூரில், ஐயப்பனை, பரதேசியப்ப ஐயனார் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.

* திருத்துறைப்பூண்டி அருகே காடந்தேத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சி புரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

* சபரிமலையில் ஐயப்பன் யோகாசன முறையில், மூலாதாரத்து குண்டலினி சக்தி மேலெழ உதவும் ஆசனத்தில் வீற்றருள்கிறார். அறிவின் அடையாளமான சின்முத்திரை ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கிய நிலையையும், ஹரிஹர ஐக்கியத்தில் பிறந்ததை கால்களை இணைக்கும் பட்டையும் உணர்த்துகிறது.

* ஈசன் பவனி வரும் திருவழகை உலாவாக்கினான் சேரமான் பெருமான். அதை பூவுலகிற்கு தெரியப்படுத்த அந்த ஏட்டுக்கட்டினை ஏந்திய ஐயனை அரங்கேற்றிய ஐயனார் எனும் பெயரில் திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் பாதையில் உள்ள  பிடவூரில் தரிசிக்கலாம்.

* திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன்விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டு விட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும், விநாயகப்பெருமானும் அருள்கிறார்கள்.

* விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை நிகழ்த்துபவர் இவர்.

Tags : Temples ,Mount Vasan Iyyappan ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா