×

காவேரிப்பாக்கம் அருகே தொடர் மழையால் 20 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அருகே தொடர் மழையால் 20 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே நிவாரணம் அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில், விட்டு விட்டு தொடர்  மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வழிய தொடங்கி உள்ளது. மேலும் நிலத்தடிநீர் மட்டமும் வெகுவாக உயர தொடங்கி உள்ளன. காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் தற்போது விவசாயிகள் சொர்ணவாரி பருவத்தில் விவசாயம் செய்துள்ளனர்.  இப்பயிர்கள் தற்போது அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது. இந்நிலையில்,  இரவு நேரங்களில் விட்டு விட்டு பெய்து வரும் தொடர் மழையால், பன்னியூர் கூட்ரோடு, மற்றும்  பன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் சுமார் 20 ஏக்கர் நிலப் பரப்பில்  சாய்ந்து விழுந்துள்ளதால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் வட்டாரத்தில் பெரும் பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அடுத்த பருவத்திற்கு விவசாயம் என்பது கேள்விக் குறியாகி உள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: ‘தற்போதுள்ள காலகட்டத்தில் விவசாயம் செய்வது என்பது பெரும் சவாலாக உள்ளது. விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை காரணமாக, இயந்திரம் மூலம் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால்  விவசாயத்தில் லாபம் பெறாவிட்டாலும், நஷ்டமாவது வராது இருந்தால் போதும்.ஏனெனில், ஒரு மூட்டை நெல் ₹700 விற்பனையான போது உர மூட்டைகள் ₹180க்கு விற்பனை செய்யப்பட்டன. தற்போது உரம் ₹1750 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு மூட்டை நெல் தற்போதும் ₹850, 900 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல்  ஒரு ஏர் உழுவதற்கு ₹800, ஒருவர் நாற்று எடுக்க ₹450, என கூலி உயர்ந்து நிற்கிறது. மேலும் தற்போது உரத்தின் விலை ஆண்டுகளுக்கு ஆண்டு ஏறும் முகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல்  கடன் சுமையால் விளை நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் மத்திய அரசும், மாநில அரசும்,  விவசாயிகளை ஊக்கு விக்கும் வகையில் பல்வேறு  நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த சலுகை  கடைக்கோடி விவசாயிகளுக்கு கிடைக்குமா? என்றால் கேள்விகுறி தான். எனவே  அரசு அதிகாரிகள் விவசாயிகள் நலனைக் கருத்தில்கொண்டு தற்போது சொர்ணவாரி பருவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கருணை அடிப்படையில் நிவாரணம் அளிக்க முன் வரவேண்டும்’ என்றனர்….

The post காவேரிப்பாக்கம் அருகே தொடர் மழையால் 20 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cauverypakkam ,Dinakaran ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...