அனந்தனுக்கு 1000 நாமங்கள்

189. கோவிந்தாய நமஹ (Govindhaaya namaha)

திருமால் திரிவிக்கிரமனாக ஓங்கி உலகளந்தபோது, அவரது திருவடிக்குத் தன் கமண்டலத்திலுள்ள நீரால் பிரம்மா அபிஷேகம் செய்தார். அச்சமயம் திருமாலின் திருவடிச் சிலம்பில் பட்டுத் தெறித்த தீர்த்தம், சிலம்பாறு என்ற பெயருடன் திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர் மலையில் இறங்கியது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்ல பட்ச துவாதசியில் கள்ளழகர் சிலம்பாற்றில் நீராடுவது வழக்கம். அந்த வைபவத்தைக் காண அகஸ்திய முனிவரும் அவரது சீடர்களும் அழகர்மலைக்குச் சென்றார்கள். அங்கே கூடியிருந்த பக்தர்கள் எல்லோரும் ‘கோவிந்தா! கோவிந்தா!’ என்று கோஷமிட்டார்கள். இதைக் கவனித்த அகஸ்தியரின் சீடர்கள், “குருவே! கோவிந்தன் என்றால் மாடு மேய்ப்பவன் என்று தானே பொருள்? இங்கே கள்ளழகரைப் பார்த்து ஏன் ‘கோவிந்தா! கோவிந்தா!’ என மக்கள் கோஷமிடுகிறார்கள்?” என்று கேட்டனர்.

அந்தச் சீடர்களுள் ஒருவர், “மாடு மேய்க்கும் கண்ணனாகத் திருமால் தானே அவதரித்தார்? அதைக் கருத்தில் கொண்டு ‘கோவிந்தா!’ என்று பக்தர்கள் கோஷமிடுகிறார்கள்!” என்றார். அகஸ்தியரோ, “அதுவும் சரி தான். ஆனால் இங்கே அழகரைப் பார்த்துக் கோவிந்தா என்றழைப்பதற்கு வேறு இரண்டு காரணங்கள் உள்ளன!” என்றார். “அவை என்ன?” என்று ஆவலுடன் கேட்டார்கள் சீடர்கள். அதற்கு அகஸ்தியர், “முன்னொரு சமயம், பக்தியோகம் குறித்து சனகாதி முனிவர்கள் பிரம்மாவிடம் கேள்வி எழுப்ப, அதற்கு விடையறியாத பிரம்ம தேவர், திருமாலின் உதவியை நாடினார். அப்போது அன்னப்பறவை வடிவத்துடன் அவதரித்த திருமால், பக்தியோகத்தின் நுணுக்கங்களை அவருக்கு விளக்கினார். பிரம்ம தேவரும் சனகாதி முனிவர்களும் மட்டுமின்றி, அனைத்துத் தேவர்களும் முனிவர்களும் அன்னத்தின் வடிவிலுள்ள திருமாலின் உபதேசங்களைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.

‘கோ’ என்றால் தண்ணீர் என்று பொருள். தண்ணீரில் வசிப்பவருக்கு ‘கோவிந்தா’ என்று பெயர். தண்ணீரில் சஞ்சரிக்கக்கூடிய அன்னப் பறவையாக அவதரித்தபடியால், திருமாலுக்கு ‘கோவிந்த:’ என்ற திருநாமம் ஏற்பட்டது. அது போலவே, இங்கே அழகர் மலையில், சிலம்பாற்றில் திருமஞ்சனம் கண்டருளி, சிலம்பாற்றின் தண்ணீரிலே சஞ்சரிப்பதால், அழகரை ‘கோவிந்தா! கோவிந்தா!’ (தண்ணீரில் சஞ்சரிப்பவனே!) என்று மக்கள் அழைக்கிறார்கள்!” என்று

விடையளித்தார்.

“மற்றொரு காரணம் என்ன?” என்று சீடர்கள் கேட்டார்கள். “அன்று அன்னமாக வந்து வேதத்தின் சாரத்தை உபதேசித்த திருமாலை, தேவர்களும் முனிவர்களும் துதித்தார்கள். அவ்வாறு தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்பட்ட திருமாலை, இன்று குறவர் குலப் பெண்கள் குறிஞ்சிப் பண் பாடி இந்த அழகர் மலையில் துதி செய்கிறார்கள். தேவர்களும் முனிவர்களும் செய்த துதியை எவ்வளவு மகிழ்ச்சியோடு திருமால் ஏற்று அருள் புரிந்தாரோ, அதே மகிழ்ச்சியோடு குறமாதர்களின் குறிஞ்சிப்பண்ணையும் ஏற்று அவர்களுக்கும் அருள்புரிகிறார். இக்கருத்தைப் பெரியாழ்வார்,

“மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த

காவலைக் கட்டழித்த தனிக்காளை கருதும் மலை

கோவலர் கோவிந்தனைக் குறமாதர்கள் பண் குறிஞ்சிப்

பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ்சோலை அதே”

என்று பாடியுள்ளார். ‘கோ’ என்றால் துதி என்று பொருள். பக்தியுடன் தன்னை யார் துதி செய்தாலும், அதை மகிழ்ச்சியுடன் ஏற்று அருள்புரிபவராக அழகர் திகழ்வதால், அவரைப் பக்தர்கள் ‘கோவிந்தா! கோவிந்தா!’ (துதிகளை ஏற்று அருள்பவனே!) என்று மகிழ்ச்சியுடன் அழைக்கிறார்கள்!” என்றார் அகஸ்தியர். தண்ணீரில் சஞ்சரிப்பதாலும், ஏற்றத்தாழ்வு பாராது அனைவரின் துதிகளையும் ஏற்றுக் கொள்வதாலும், ஹம்ஸாவதாரம் செய்த திருமால் ‘கோவிந்த:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 189-வது திருநாமம். “கோவிந்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் அனைத்துப் பிரார்த்தனைகளையும் ஏற்றுத் திருமால்

தன் திருவருளை வழங்குவார்.

190. கோவிதாம் பதயே நமஹ (Govidhaam pathaye namaha)

வருடா வருடம் கார்த்திகை தீபத்தன்று, திருவரங்கத்தில் சக்கரத்தாழ்வார் சந்நதிக்கு எதிரே சொக்கப்பனை எரிக்கப்படுவது வழக்கம். அச்சமயம் உற்சவரான நம்பெருமாளும் அங்கே எழுந்தருள்வார். அவ்வாறு கார்த்திகை தீபத் திருவிழா திருவரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில், திருமங்கையாழ்வார் நம்பெருமாளைப் போற்றி ‘திருநெடுந்தாண்டகம்’ எனப்படும் முப்பது பாசுரங்களைப் பாடினார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள், “உங்கள் பாடல்கள் அனைத்தும் அமுதம் போல் தித்திக்கின்றன.

உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று திருமங்கையாழ்வாரிடம் கேட்டார். “மார்கழி மாதம் தோறும் அத்யயன உற்சவத்தில், பகல் பொழுதில் நீ வடமொழி வேத பாராயணத்தைக் கேட்பது, அந்த அத்யயன உற்சவத்தின் இரவுப் பொழுதில் நீ தமிழ் வேதமாகிய திருவாய்மொழியைக் கேட்க வேண்டும். அப்போது தான் தமிழ் வேதங்களை மக்கள் மறக்காமல் இருப்பார்கள்!” என்று வேண்டினார் திருமங்கையாழ்வார். அதற்கு நம்பெருமாளும் இசையவே, பெருமாளின் பல்லக்கை வாங்கிக் கொண்டு திருவரங்கத்தில் உள்ள வைணவர்களையும்

அழைத்துக் கொண்டு நம்மாழ்வாரின் ஊரான ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார் திருமங்கையாழ்வார். அங்குள்ள நம்மாழ்வாரின் விக்கிரகத்தைப் பெருமாளின் பல்லக்கில் எழுந்தருளச் செய்து திருவரங்கத்துக்கு வந்தார். வைகுண்ட ஏகாதசி நாள் தொடங்கிப் பத்து நாட்களுக்கு ராப் பத்து உற்சவம் நடந்தது. அதில் தமிழ் வேதமாகிய திருவாய்மொழி ஓதப்பட்டது. பெருமாளும் அதைக் கேட்டு மகிழ்ந்தார். இவ்வாறு திருமங்கையாழ்வார் தொடங்கி வைத்த அத்யயன உற்சவம் காலப்போக்கில் நின்றுபோனது. அதனால் மக்கள் ஆழ்வார் பாசுரங்களை மறந்து விட்டார்கள். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

பல நூற்றாண்டுகளுக்குப் பின், கும்பகோணம் ஸ்ரீ சார்ங்கப்பாணி கோயிலுக்கு வந்த நாதமுனிகள், அங்கே “ஆராவமுதே!” எனத் தொடங்கும் திருவாய்மொழிப் பாசுரம் இசைக்கப்படுவதைக் கேட்டார். அதன் இனிமையால் ஈர்க்கப்பட்ட அவருக்கு, ஆழ்வார்களின் அனைத்துப் பாசுரங்களையும் கண்டெடுக்க வேண்டுமென்ற ஆவல் உண்டானது. அதனால் நம்மாழ்வாரின் ஊரான ஆழ்வார் திருநகரிக்குச் சென்று தவம் புரிந்து, நம்மாழ்வாரையே நேரில் தரிசித்து, நாலாயிரம் பாசுரங்களையும் மீட்டு வந்தார் நாதமுனிகள்.

பிரபஞ்சத்தை மீட்ட நாதமுனிகள், முதலில் திருவரங்கத்துக்கு வந்து, அன்று திருமங்கையாழ்வார் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அத்யயன உற்சவத்தை மேலும் விரிவு படுத்தி நடத்தினார். மார்கழி மாதத்தில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, பகல் பத்து, ராப்பத்து என இருபது நாட்களுக்குப் பெருமாள் ஆழ்வார் பாசுரங்களைத் திருச்செவி சாத்தும்படிச் செய்தார். திருவரங்கத்தில் அத்யயன உற்சவத்தை நடத்திவிட்டுக் கும்பகோணத்துக்கு வந்த நாதமுனிகள், சார்ங்கபாணிப் பெருமாளுக்குத் தம் நன்றியைத் தெரிவித்தார். “அன்று வடமொழி வேதத்தின் பொருளை மறந்து தேவர்களும் முனிவர்களும் தவித்தபோது, நீ அன்னமாக அவதரித்து, வடமொழி வேதத்தின் சாரத்தை அவர்களுக்கு வழங்கினாய். அதுபோல், தமிழ் வேதங்களாகிய ஆழ்வார் பாசுரங்களை நாங்கள் இழந்து தவித்த போது, உன் சந்நதியில் ‘ஆராவமுதே’ பாசுரத்தை ஒலிக்கச் செய்து, அதன் வாயிலாக முழுமையாகத் தமிழ் வேதத்தையே நீ மீட்டுத் தந்து விட்டாய். வேதம் வல்லார்கள் அனைவருக்கும் நீயே தலைவன்!” என்று சார்ங்கபாணிப் பெருமாளைப் போற்றினார் நாதமுனிகள்.

‘கோ’ என்றால் வேதம் என்று பொருள். ‘கோவித்’ என்றால் வேதம் வல்லவர்கள். வடமொழி மறை, தமிழ் மறை என அனைத்து வேதங்களையும் நமக்கு வழங்கி, அவை மறைந்து போகும் காலங்களிலும் அவற்றை மீட்டுத் தந்து, வேதம் வல்லார்களுக்கெல்லாம் தலைவராகத் திருமால் விளங்குவதால், ‘கோவிதாம் பதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 190-வது திருநாமம். “கோவிதாம் பதயே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வடமொழி மறை, தென்மொழி மறை இவற்றின் சாரத்தை உணரும் ஆற்றலைத் திருமால் அருள்வார்.

191. மரீசயே நமஹ (Mareechaye namaha)

(188-வது திருநாமமான ‘ஸுரானந்த:’ என்பதிலிருந்து 194-வது திருநாமமான ‘ஸுபர்ண:’ வரையிலான 7 திருநாமங்கள், அன்னப்பறவை வடிவில் திருமால் தோன்றிய ஹம்ஸாவதாரத்தின் பெருமைகளைச் சொல்கின்றன.) காவிரிக் கரையிலுள்ள காடந்தேத்தி என்னும் ஊரில் ஜானகி - ரகுநாதன் என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு 1829-ம் வருடம் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வரத வேதாந்தாச்சார்யார் என்று பெயர் சூட்டினார்கள்.

வரத வேதாந்தாச்சார்யார் இளம் வயதிலேயே வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கற்றுத் தேர்ந்தார். எட்டெழுத்து மந்திரத்தையும், காயத்திரி மந்திரத்தையும் ஹயக்ரீவ மந்திரத்தையும் இடைவிடாது ஜபம் செய்து சித்தி பெற்றார். தமது அறுபதாவது வயது வரை திருமலையில் தங்கி இருந்து திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு செய்து வந்தார் வரத வேதாந்தாச்சார்யார். அதன்பின் கும்பகோணத்துக்குக் குடிபெயர்ந்தார். கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கும் கோமளவல்லித் தாயாரிடமும் சார்ங்கப்பாணிப் பெருமாளிடமும் மிகுந்த பக்தியுடன் அவர் விளங்கினார்.

பல நூல்களையும் கவிதைகளையும் அவர் இயற்றினார். இந்நிலையில், வயது முதிர்ச்சியின் காரணமாக அவரது பார்வை மங்கிக் கொண்டே போனது. ஒரு நிலையில், முழுமையாகத் தமது பார்வையை இழக்கும் நிலைக்குச் சென்று விட்டார். எத்தனையோ சிகிச்சைகள் செய்தும் அவரது கண்கள் குணமாவதாகத் தெரியவில்லை. கோமளவல்லித் தாயார் சந்நதிக்குச் சென்ற அவர், “கல்வி கரையில என்பார்கள்! இன்னும் பல நூல்களைப் படிக்க வேண்டும், இன்னும் பல நூல்களைப் படைக்க வேண்டும் என்றெல்லாம் நான் கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் எனது பார்வை மங்கிக் கொண்டே போகிறதே! நான் குருடனாகி விட்டால், இனி என்னால் முன்னோர்களின் நூல்களையும் படிக்க முடியாது, புதிய நூல்களையும் எழுத முடியாது! என் பார்வையைப் பறித்துக் கொள்வதற்குப் பதில் நீ என் உயிரையே பறித்துக்கொள்ளலாமே!” என்று புலம்பினார்.

“ஜய துக்தாப்தி தனயே! ஜய சார்ங்கதர ப்ரியே!

ஜய காருண்ய ஸுரபே! ஜய லாவண்ய வாரிதே!”

எனத் தொடங்கும் ‘கோமளா தண்டகம்’ என்ற துதியை இயற்றி, அதைக் கோமளவல்லித் தாயார் முன் விண்ணப்பித்தார். அன்று இரவு அவரது கனவில் காட்சியளித்த கோமளவல்லித் தாயார், “நாளை பெரிய திருமஞ்சனத்தின் போது, நானும் பெருமாளும் கவசம் களைந்த நிலையில் சேர்த்தியில் காட்சி தருவோம். அப்போது எங்களை வந்து தரிசனம் செய்!” என்று கூறினாள். அவ்வாறே அடுத்த நாள் மாலை கோயிலுக்குச் சென்ற வரத வேதாந்தாச்சார்யார், பெரிய திருமஞ்சனத்துக்காகக் கவசம் களையப்பட்ட நிலையில், சேர்த்தியில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் - தாயாரைத் தரிசித்தார். அவர்களின் திருமேனி ஒளியைத் தரிசித்த மாத்திரத்தில் வரத வேதாந்தாச்சார்யாரின் பார்வை பிரகாசமடையத் தொடங்கியது. அடுத்த சில நாட்களில் மீண்டும் தமது பழைய பார்வையைப் பெற்றார். அதன்பின் பல நூல்களைத் தொடர்ந்து இயற்றி வந்தார்.

தமது 76-வது வயதில் சந்நியாசம் மேற்கொண்ட வரத வேதாந்தாச்சார்யார், காடந்தேதி ஆண்டவன் என்ற பெயருடன் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் பீடாதிபதியாகத் திகழ்ந்தார். அவரை மிகச்சிறந்த சந்நியாசி என்றும் பரமஹம்ஸர் என்றும் அடியார்கள் போற்றினார்கள். அவர் யாத்திரையாகக் கும்பகோணத்துக்கு வந்தபோது, கோமளவல்லித் தாயாரைத் தரிசித்தார். அப்போது தாயாரிடம், “அன்று நீ சொன்னபடி உன்னையும் உன் கேள்வனான சாரங்கபாணியையும் கவசம் களைந்த நிலையில் தரிசித்தேன்.

உங்களது திருமேனி ஒளி, எனது புறக்கண்ணைத் திறந்ததோடு மட்டுமின்றி, அகக்கண்ணாகிய ஞானக் கண்ணையும் திறந்து விட்டது! அதனால் தான் பெரியாண்டவன் போன்ற மகான்கள் அலங்கரித்த பீடத்தில் இன்று நான் அமரும் பேறு கிட்டியது! அன்று ஹம்ஸமாக (அன்னமாக) அவதரித்த பெருமாள், இன்று என்னைப் பரமஹம்ஸராக ஆக்கி விட்டார்!” என்று நன்றி தெரிவித்தார். ஹம்ஸமாக அவதரித்த திருமாலின் திருமேனி ஒளி, அடியார்களின் புறக்கண்களை மட்டுமின்றி அகக்கண்களையும் திறந்து, அவர்களைப் பரமஹம்ஸ நிலைக்கு உயர்த்துகிறது. ‘மரீசி:’ என்றால் ஒளி தருபவர் என்று பொருள். புறக்கண், அகக்கண் இரண்டுக்கும் ஒளிதருவதால் ஹம்ஸாவதாரம் செய்த திருமால் ‘மரீசி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 191-வது திருநாமம். “மரீசயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல கண் பார்வையைத் திருமால் அருள்வார்.

192. தமனாய நமஹ (Dhamanaaya namaha)

பாற்கடலைக் கடைகையில் முதலில் ஆலஹால விஷம் உண்டானது. அந்த விஷத்தின் வாடை பட்ட அளவிலே சில தேவர்களும், அசுரர்களும் மயங்கி விழுந்தார்கள். வேறு சில தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைக் கண்ட மற்ற தேவர்கள், திருமாலிடம் வந்து ஆலஹால விஷத்திலிருந்து தங்களைக் காக்கும் படி வேண்டினார்கள். “இந்த விஷத்தின் பிடியில் இருந்து பரமசிவன் உங்களைக் காப்பார். அவரது உதவியை நாடுங்கள்!” என்றார் திருமால். தேவர்கள் அனைவரும் கைலாசத்துக்குச் சென்று சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு பிரார்த்தித்தார்கள்.

அவர்களைக் காக்கும் பொருட்டு, ஆலஹால விஷத்தைப் பருகினார் பரமசிவன். ஆனால் அந்த விஷத்தின் வீரியம் சிவனைத்தாக்கத் தொடங்கியது. அவரது உடல் வெப்பமயமானது. அதைச் சமாளிக்க வழி தெரியாமல் தவித்தார். அப்போது சில சிவ கணங்கள் அவரிடம், “முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்கிறார்கள் அல்லவா? அது போல் விஷத்தை விஷத்தால் தான் முறிக்க வேண்டும்!” என்றார்கள்.அவர்களிடம் “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் பரமசிவன். “ஆம்! உங்கள் கழுத்துக்கு ஆபரணமாகப் பாம்பை அணிந்திருக்கிறீர்களே!  அப்பாம்பை விட்டு உங்களைக் கடிக்கச் சொல்லுங்கள். பாம்பு விஷம் உங்கள் உடலில் ஏறியவாறே, ஆலஹால விஷத்தின் வீரியத்தை அது முறித்து விடும்!” என்று சொன்னார்கள் சிவகணங்கள்.

அவர்களின் அறிவுரைப்படித் தன் கழுத்திலுள்ள பாம்பிடம் தன்னைக் கடிக்கும்படிக் கட்டளையிட்டார் பரமசிவன். பாம்பும் அவ்வாறே செய்தது. ஆனால் ஆலஹால விஷத்தின் வீரியம் குறையவில்லை. மாறாக, பாம்பின் விஷமும் ஆலஹால விஷத்தோடு இணைந்து வேதனையை அதிகமாக்கி விட்டது. மேலும் துன்பப்பட்டார் பரமசிவன். இதற்கென்ன தீர்வு என்று புரியாமல் பாற்கடலின் கரை ஓரமாக ஓடினார் பரமசிவன். அப்போது அங்கே தேவர்கள் அமுதத்தைச் சேகரித்து வைத்திருந்த ஒரு குடத்தைக் கண்டார். அந்தக் குடத்தினுள் தேவாமிர்தம் இருந்தது. அது மட்டுமின்றி, அக்குடத்தின் மூக்கில் மற்றொரு அமுதமும் இருப்பதை உணர்ந்தார் பரமசிவன். தேவாமிர்தம் அளவுக்கு அதிகமாக உண்டால் திகட்டும். ஆனால் குட மூக்கில் இருந்த அமுதமோ அள்ள அள்ளக் குறையாத, அருந்த அருந்தத் திகட்டாத ஆராத அமுதமாக இருந்தது.

(இங்கே குடமூக்கு என்பது கும்பகோண க்ஷேத்திரத்தைக் குறிக்கிறது. கும்பம் என்றால் குடம், கோணம் என்றால் மூக்கு. கும்பகோணம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கமே குடமூக்கு. அந்தக் குடமூக்கில் உள்ள அமுதம் யாதெனில், கும்பகோணத்தில் ஆராவமுதன் என்ற திருநாமத்தோடு திகழும் சார்ங்கபாணிப் பெருமாள்.) குடத்தைக் கையில் எடுத்த பரமசிவன், குடமூக்கில் உள்ள ஆராவமுதைப் பருகினார். வாயால் பருகவில்லை, கண்களால் பருகினார். (ஆராவமுதப் பெருமாளின் அழகு தான் அந்த ஆராவமுதம். அது கண்களால் பருக வேண்டிய அமுதம் அல்லவா? ஆராவமுதனைத் தரிசித்து அவனது அழகை ரசித்தார் என்பது தாத்பர்யம்.) அந்த ஆராவமுதைப் பருகிய அளவிலே, விஷத்தினால் உண்டான வேதனை தீர்ந்தது.

கும்பத்தில் உள்ள அமுதைப் பருகியபடியால், ‘கும்பேஸ்வரர்’ என்று பெயர் பெற்ற சிவபெருமான், கும்பகோணத்தில் சாரங்கபாணிப் பெருமாள் கோயிலின் பின்புறத்தில், திருமாலின் பின்னழகாகிய அமுதைப் பருகிய படி இன்றும் கோயில் கொண்டுள்ளார். இவ்வாறு ஆலஹால விஷத்தால் சிவனுக்கு ஏற்பட்ட வெப்பத்தைத் தன் அழகாகிய அமுதால் திருமால் தணித்த வரலாற்றை வில்லூர் நிதி ஸ்வாமிகள் ஒரு சுலோகத்தில் பாடியுள்ளார்:

பீத்வா ஹந்த விஷம் பயோதி குஹராத் ஜாதம் புராரி: புரா

நாகை: ஆபரணை: ச ஸம்வ்ருத: தனு: தப்தோ நிதாந்தம் தத: |

பர்யாப்த்யா விதுரம் பிபன் இஹ த்ருசா கும்பஸ்ய கோணே அம்ருதம்

கும்பம் ஸ்வீயமிதீய ஸம்ப்ரகதயன் கும்பேச்வர: வர்ததே ||

இவ்வாறு வெப்பத்தைத் தணிப்பவராக  ஸ்ரீ சார்ங்கபாணி திகழ்வதால், திருமங்கையாழ்வாரும் “தண்குடந்தைக் கிடந்த மால்” என்று பாடினார். இங்கே ‘தண்’ என்ற அடைமொழி திருமாலின் குளிர்விக்கும் தன்மையைச் சொல்கிறது. அவ்வாறே தேவர்களும் முனிவர்களும் அறியாமை என்னும் வெப்பத்தால் தவித்தபோது, ஹம்ஸாவதாரம் எடுத்தார் திருமால். அந்த அன்னத்தின் திருமேனி ஒளி, அவர்களின் அறியாமை என்னும் வெப்பத்தைப் போக்கி அவர்களைக் குளிர்வித்தது. இப்படி வெப்பத்தைத் தணித்துக் குளிர்விக்கும் இயல்புடையவராகத் திருமால் திகழ்வதால், ‘தமன:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 192-வது திருநாமம். “தமனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எப்போதும் வாழ்வில் குளிர்ந்த மனத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழத் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)
திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories:

>