×

தீபாவளியும் மகாலட்சுமியும்!

மகாலட்சுமியால் தான் தீபாவளியே ஏற்பட்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூலம் ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமான சத்யபாமாவால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டான். நரகாசுரனும், ‘‘நான் இறந்த இந்த நாளை எல்லோரும் தீபாவளித் திருநாளாக கொண்டாட வேண்டுமென’’ வேண்டிக் கொண்டான். இங்கு வதம் செய்தல் என்பதைவிட, நரகாசுரன் பெரிய வரம் பெற்றான் என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இத்தனை நாளும் நரகாசுரனை, அவனது இல்லாத மாயையான அகங்காரம் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது.

அந்த தாயார் அதை கருணையோடு வெட்டி எறிந்தாள். அந்தக் கணமே தான் இந்த உடம்பல்ல என்கிற தேகாபிமானத்தையும் நரகாசுரன் இழந்து பரமாத்ம சொரூபத்தோடு ஒன்றினான். இந்த நிலையில் தான், எய்திய மாபெரும் பிரம்மானந்தத்தை உலகமே கொண்டாடட்டும் என்றே வேண்டிக் கொண்டான். தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து தீபங்கள் ஏற்றி புத்தாடைகள் அணிந்து  மகாலட்சுமியை உளமாற பிரார்த்திக்க வேண்டும். தீபாவளியன்று நிறைய தீபங்களை ஏற்றி வைத்து பூஜிக்க செல்வ வளம் பெருகும் என்பதை,

‘‘நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்சனுதே தீ பைர் நிராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா’’

எனும் வரிகள் கூறுகின்றன. தீபாவளியன்று தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் மகாலட்சுமியும், குளிக்கும் வெந்நீரில் கங்கையும் வாசம் செய்கிறாள் என்பதை,

 ‘‘தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவளிதினே வஸேத்’’

எனும் வரிகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, தீபாவளியன்று மகாலக்ஷ்மியை தியானித்து வணங்க சித்தத்தில் தெளிவும், லௌகீக வாழ்வின் வளங்களும், ஞான மார்க்கத்தில் இச்சையும் நிச்சயம் உண்டாகும்.

திருத்தவத்துறை (லால்குடி): லட்சுமிதேவி தவமிருந்து திருமாலைக் கணவராகப் பெற்ற இடம் திருத்தவத்துறை. இதை இப்போது லால்குடி என்று அழைக்கின்றனர். நாமக்கல்லில் நாமகிரி தாயாருக்கு ஸ்தல நாயகன்.

காஞ்சியில் அரூபலட்சுமி: காஞ்சி காமாக்ஷி கோயிலில் அரூப லட்சுமியை தரிசிக்கலாம். மகாலட்சுமிக்கு தான் மிகவும் அழகுடையவள் என்ற கர்வம் ஏற்பட்டதாம். ஒருநாள் தன் கணவர் மகாவிஷ்ணு அழகையே பரிகசிக்க, அவர் சாபமிடுகிறார். அந்தச் சாபம் நீங்க காமகோட்டத்தை அடைந்து தேவியை நோக்கித் தவம் புரிகிறாள் காமாக்ஷியின் குங்குமம் நிர்மால்ய பிரசாத ஸ்பரிசத்தால்தான் சுயரூபம் பெறுகிறாள் என்பது கதை.

திருத்தங்கல்: ஸ்ரீதேவி எனும் மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு ‘தானே மற்ற தேவியரை காட்டிலும் சிறந்தவள்’ என்று நிரூபிக்க தங்காலமலை எனும் திருத்தங்கலுக்கு வந்து தவமியற்றினாள். செங்கமல நாச்சியார் எனும் திருநாமத்தோடு இத்தலத்தில் திருமகள் தங்கியதால் திருத்தங்கல் என்றாயிற்று. இத்தலம் விருதுநகருக்கு அருகே அமைந்துள்ளது.

அரசர்கோயில்: செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க அதிசயம். ஒரு முறை ஜனக மகாராஜாவும், பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். கற்பூர ஆரத்தி காட்டி, தாயாரின் வலது பாதத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். செங்கல்பட்டு - மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில்.

மாமாகுடி: ஸ்ரீ மகாலட்சுமி அவதரித்த தலமாக இதைத்தான் குறிப்பிடுகின்றனர். திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கிலும், ஆக்கூருக்கு அருகேயும் இத்தலம் அமைந்துள்ளது.

தலைச்சங்காடு:  தலைச்சங்க நாண் மதியம் என்கிற தலைச்சங்காடு ஆகும். தலைச்சங்க நாச்சியார் என்றழைக்கப்படும் இத்தல தாயார் நின்ற நிலையில் அருட்பாலிக்கிறார்.

திருப்பத்தூர்: சிவபெருமான் எத்தனையோ அடியார்களுக்காக தனது திருத்தாண்டவத்தினை காட்டியருளினார். அப்படியொருமுறை திருமகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் திருத்தாண்டவம் புரிந்தார். இந்த தாண்டவத்திற்கு லட்சுமி தாண்டவம் என்று பெயர்.

திருவாலி:  திருமங்கையாழ்வாருக்கு அருட்பாலிக்க வேண்டுமென்று லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். லட்சுமியும் திருவாலியில் தவமியற்றும் பூர்ண மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள். பெருமாளை லட்சுமி தேவியார் மணம் புரிந்து வரும்போது திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய அவரது காதில் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை கூறி ஆட்கொண்டார். மூலவராக இருக்கும் நரசிம்மர் லட்சுமியாகிய திருவை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதால் திரு ஆலிங்கன ஊர் என்பது திருவாலி என்று மருவியது. இத்தலம் சீர்காழிக்கு அருகேயுள்ளது.

தாளக்கரை: நின்ற கோலத்தில் லட்சுமி அருட்பாலிக்கும் தலம். மகாலட்சுமியோடு பாற்கடலிலிருந்து வெளிப்பட்டவன்தான் சந்திரன். இத்தலத்தில் சகோதர முறை கொண்ட சந்திரனே சுவாமிக்கு விமானமாக இருப்பதை எத்தலத்திலும் காண முடியாது.

திருக்கண்ணமங்கை:  பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட மகாலட்சுமி முதலில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள். அதை உள்ளத்தில் நிறுத்தி இத்தல நாயகனையே திருமணம் செய்ய வேண்டுமென்று இங்கு வந்து தவமியற்றினாள். பெருமாளே தன் பாற்கடலை விட்டு இங்கு வந்து மகாலட்சுமியை மணம் புரிந்ததால் பெரும்புறக் கடல் என்கிற திருநாமமும் பெருமாளுக்கு உண்டு. மேலும், இந்த க்ஷேத்ரத்திற்கே லட்சுமி வனம் எனும் திருப்பெயர் உண்டு.

திருநின்றவூர்; மகாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு திரு என்கிற மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் இத்தலம் திருநின்றவூர் என்றானது. சமுத்திர ராஜனே சமாதனமாக என்னைப் பெற்ற தாயே என்று இரைஞ்சி வேண்டிக் கொண்டதாலேயே இவளுக்கு இத்தலத்தில் என்னைப் பெற்ற தாயே எனும் திருப்பெயர். குபேரன் தன் நிதியை இழந்து இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டதாலேயே மீண்டும் பெரும் நிதியை அடைந்தான். சென்னை - திருவள்ளூருக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

- R.அபிநயா

Tags : Deepavali ,Mahalakshmi ,
× RELATED கோயில் நுழைவாயிலில் உள்ள படியினை...