ஐதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பஹத் பாசில் நடித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற பான் இந்தியா படம், வரும் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி இப்படத்துக்கான புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ‘புஷ்பா 1: தி ரைஸ்’ படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது 2ம் பாகத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பஹத் பாசில் அரக்கத்தனமான போலீஸ் கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது நடந்து வரும் புரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
‘புஷ்பா 2’வை அவர் புறக்கணிக்கிறார் என்று பேச்சு எழுந்துள்ள நிலையில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் பேசியதாவது: இப்போது நான் அல்லு அர்ஜூன் அல்ல, உங்களின் மல்லு அர்ஜூன். கேரளாவிலுள்ள ரசிகர்கள் மத்தியில் நானும், பஹத் பாசிலும் ஒரே மேடையில் சேர்ந்து நின்றிருந்தால், அது காலம் முழுவதற்குமான சிறந்த தருணமாக இருந்திருக்கும். இந்த மேடையில் பஹத் பாசிலை மிஸ் செய்கிறேன். ஆனால், கேரள ரசிகர்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். என் பிரதர் பஹத் பாசில், ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் பிரமாதமாக நடித்துள்ளார். அது அவருக்கு உலகம் முழுவதும் அதிகமான நற்பெயரையும், புகழையும் பெற்றுத்தரும். கேரள சினிமாவையும், உங்களையும் பஹத் பாசில் உலக அரங்கில் பெருமைப்படுத்துவார்.