×

தீவிர கண்காணிப்பு

கொரோனாவுக்குப் பிறகு பல நோய்கள் திடீர் கவனம் பெறுகின்றன. நிஃபா வைரஸ் நோய், தக்காளி காய்ச்சல், மேற்கு நைல் ஜுரம் வரிசையில் இப்போது குரங்கு அம்மை. இதுவரை 75 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்நோயால் பாதித்துள்ளனர். 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால், இந்த நோயை மருத்துவ அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.குரங்கு அம்மை வைரஸ் என்பது பாக்ஸ்விரிடே குடும்பத்தின் ஆர்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை டிஎன்ஏ வைரஸ். இந்த வைரஸில் இரண்டு தனித்தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும், இரண்டாவது பிரிவு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டன. எலி, அணில் போன்ற விலங்குகளிடமிருந்து இந்த நோய், பரவுவதாகக் கூறப்படுகிறது. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியைச் சரியாக வேக வைக்காமல் சாப்பிடுவதும் நோய்ப் பரவுதலுக்கான முக்கிய காரணம்.காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும். குரங்கு அம்மைக்கு எனத் தனியாகச் சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும் பெரியம்மை தடுப்பூசிகள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பெரிதும் பயனளிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.  முறையான சிகிச்சை மேற்கொண்டால் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு சில வாரங்களில் குணமடைந்து விட முடியும் என்று ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன.இந்தியாவில் சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மருத்துவ மாணவருக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதேபோல், குரங்கம்மை முதல் பாதிப்பும் இந்த மாநிலத்தில்தான் ஏற்பட்டது. இந்நோய் பாதித்த முதல் நபர், கடந்த 14ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லத்தில் கண்டறியப்பட்டார். இவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து வந்தவர். இதேபோல், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 2 பேர் இந்த நோய் தொற்றால் பாதித்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியிலும் 31 வயதான வாலிபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம், இந்தியாவில் இந்த நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு மட்டுமே குரங்கம்மை பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் பாதிக்கப்பட்ட வாலிபர் சமீப காலமாக எந்த நாட்டுக்கும் செல்லவில்லை. அவருக்கு உள்ளூரில் இந்த தொற்று ஏற்பட்டு இருப்பது, அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தியாவில் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், இந்த நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. மாநிலங்களும் எச்சரிக்கப்பட்டு உள்ளன.அடுத்தடுத்து குரங்கம்மை பாதித்த நோயாளிகள் கண்டறியப்பட்டு வருவதால், தமிழக விமான நிலையங்கள் மற்றும் 13 கேரளா எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. குரங்கு அம்மை நோய்ப் பரவலின் ஆபத்து காரணிகள், பரவலைக் குறைப்பதற்குத் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்துவதே இந்த நோயின் பரவலைத் தடுக்கும் முதல் படி. கண்காணிப்பையும் கண்டறிதலையும் அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் பேரவா….

The post தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…