×

சின்னசேலம் பள்ளியில் பலியான மாணவியின் உடல் சொந்த ஊரில் அடக்கம்: அமைச்சர், எம்எல்ஏக்கள் இறுதி அஞ்சலி

வேப்பூர்‌: சின்னசேலம் தனியார் பள்ளி விடுதியில் மர்மமாக இறந்த மாணவியின் உடலை 11 நாட்களுக்கு பிறகு பெற்றோர் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி மதி(17)‌, கடந்த 13ம் தேதி அங்கு மர்மமான முறையில் இறந்தார். இதை கண்டித்து கடந்த 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. இதில் பள்ளி வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.  மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டது. இருப்பினும் மனுததாரர் தரப்பில் மருத்துவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கப்படவில்லை. இதனை எதிர்த்து மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே மாணவியின் உடல், மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவரது உடலை பெற்றுக்கொள்ளுமாறு வீட்டில் கடந்த 19ம் தேதி வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் மாணவி உடலை வாங்க பெற்றோர் முன்வராததால், காவல்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை என்றும் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது. மேலும், மாணவியின் உடலை 23ம் தேதி பெற்றோர் வாங்காவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை அளித்தது. அதை ஏற்று, மாணவியின் உடலை 23ம் தேதி பெற்று அடக்கம் செய்வதாக மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.   அதன்படி நேற்று காலை 6.50 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை அமைச்சர் சி.வெ.கணேசன், கலெக்டர் சர்வண்குமார் ஜடாவத், எஸ்பி பகலவன் முன்னிலையில் அவரது தாயார் செல்வி  கையெழுத்துப்போட்டு கண்ணீருடன் பெற்றுகொண்டார். அப்போது பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். பின்னர் ஆம்புலன்சில் மாணவியின் உடல் ஏற்றப்பட்டு சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னும், பின்னும் போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. காலை 8.30 மணியளவில் பெரியநெசலூர் கிராமத்தை வந்தடைந்தது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து மாணவி ஸ்ரீமதியின் உடல் இறக்கப்பட்டு அவரது வீட்டின் முன் உறவினர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அவர்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். இதையடுத்து நடந்த இறுதி ஊர்வலத்திற்கு வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி தலைமையில்,  கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேஷ் உள்ளிட்ட 800 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாணவி உடலுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன், எம்எல்ஏக்கள்   வசந்தம் கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், அருண்மொழிதேவன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் தர் வாண்டையார், மாணவியின் தோழிகள், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.  மயானத்தில் தந்தை  ராமலிங்கம்,  தம்பி சந்தோஷ்குமார் இறுதிச்சடங்கை செய்தபின், பகல் 11.45  மணியளவில் மதி உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாணவி உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சேதம்: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலிருந்து மாணவி மதி உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸ், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, ஆசனூர் வழியாக வேப்பூர் அடுத்த எறஞ்சி அருகே வந்தபோது, முன்னால் அணிவகுத்து சென்ற கார் ஒன்று திடீரென பிரேக் அடித்ததால் ஆம்புலன்ஸ், கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்சின் முன்பக்கம் சேதமடைந்தது. மயானத்தில் பெண்களும் பங்கேற்பு: பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் வாழைமரத்திற்கு தாலி கயிறு கட்டி அறுத்தல் போன்ற பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டு, காலை 10.30 மணியளவில் மாணவி மதி வீட்டில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் பகல் 11.15 மணியளவில் மயானம் வந்தடைந்தது. மயானத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் கிராம வழக்கப்படி பெண்கள் பங்கேற்பதில்லை. ஆனால் நேற்று மயானத்தில் நடந்த ஸ்ரீமதி இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டனர்.மாணவி உடலுடன் உயிரியல் பாட புத்தகம்: மாணவி மதி மருத்துவராக வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவர் உயிரியல் பாடத்தை மிகவும் விரும்பி படித்ததாக கூறப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் மாணவி ஸ்ரீமதியின் உடல் மீது உயிரியல் பாடப் புத்தகம் வைத்து எடுத்து வரப்பட்டது. அவர் உடலுடன் அந்த புத்தகமும் வைத்து புதைக்கப்பட்டதுவிதைக்கப்பட்டுள்ளார்; தந்தை கண்ணீர் பேட்டி: இறுதிச்சடங்கை முடித்த அவரது தந்தை ராமலிங்கம் அளித்த பேட்டியில், மதி புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளார். அந்த விதை மரமாகி அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் கருவறுக்கப்படுவார்கள் என கூறினார். மேலும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் என 7 பேரும் தான் என் மகள் சாவுக்கு முக்கிய காரணம், அவர்களை கைது செய்ய வேண்டும். இந்த பள்ளியை அரசே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இறுதி ஊர்வலத்தில் மாணவி மதி உடல் ஏற்றப்பட்ட வண்டியில் அமர்ந்து வந்த தாய் செல்வி, கதறி அழுதபடி, ‘என் மகள் சாவுக்கு நீதி வேண்டும்’ என கூறினார். …

The post சின்னசேலம் பள்ளியில் பலியான மாணவியின் உடல் சொந்த ஊரில் அடக்கம்: அமைச்சர், எம்எல்ஏக்கள் இறுதி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chinnaselam School ,Vepur ,Chinnaselam ,Dinakaran ,
× RELATED சித்தளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்