×

சப்த குருதலமான உத்தமர் கோயில்

நவகிரக நாயகர்களில் மிகப்பெரிய கோளாகக் கருதப்படுபவரும், தேவர்களின் குருவாகத் திகழ்கின்றவருமான பிருகஸ்பதி என்று போற்றப்படும் குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு இருந்துவிட்டு அடுத்த ராசிக்கு இடம் பெயர்கிறார். ஜென்ம ராசியிலிருந்து 2, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய இடங்களில் குரு இருப்பது சாதகமான பலன்களைத் தரும் என்றும், 1, 3, 4, 6, 8, 10 மற்றும் 12வது ராசிகளில் குருபகவான் அமர்ந்திருப்பது சுமாரான பலன்களைத் தரும் என்றும் ஜோதிட வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த ராசிக்குரியவர்கள் குருபகவான் அடுத்த ராசிக்குப் பெயரும் குருப்பெயர்ச்சியின்போது தக்க பரிகாரங்களைச் செய்து, குருபகவானை வழிபட்டு பாதிப்புகளிலிருந்து இறையருளால் காத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் குருபெயர்ச்சி சமயத்தில் குருவுக்குரிய தலங்களாகக் கருதப்படும் பிரபலமான ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வழிபாடு செய்கின்றனர்.

ஜோதிட நூல்களால் புத்திரகாரகன் என்றழைக்கப்படும் குருபகவான், நல்லறிவு, ஞானம், உயர் பதவி, நீதி உணர்வு, சொல் வன்மை, தயாள குணம், கலைகளில் தேர்ச்சி, வேதவேதாந்த அறிவு ஆகியவற்றை வழங்குவதோடு, மற்ற கிரகங்களால் ஏற்படும் பீடைகளை நீக்கும் ஆற்றல் உள்ளவராதலால் இவர் “கிரஹபீடாபஹாரர்” என்றும் போற்றப்படுகிறார். ஒவ்வொரு சிவாலயத்திலும் கருவறைக்கு வடகிழக்கே அமைந்துள்ள நவகிரக சந்நதியில் குருபகவான் அருட்பாலிக்கிறார். மேலும், கருவறையில் தென்புற கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியும் குருவாக வழிபடப்படுகிறார். தட்சிணாமூர்த்தி வடிவத்தில் 64 வகைகள் உள்ளதாக ஆகம நூல்கள் தெரிவிக்கின்றன.

மேதா, ஞான, தாம்பத்ய, வீணா தட்சிணாமூர்த்தி போன்ற பல வடிவங்கள் உள்ளன. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள நவகிரக ஆலயங்களில் குருவிற்குரிய தலமாக ஆலங்குடி திருத்தலம் போற்றப்படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் தென்குடித்திட்டை, திருப்பத்தூருக்கு அருகிலுள்ள பட்டமங்கலம், திருச்சிக்கு அருகில் தம்பதி சமேதராக நவகிரகங்கள் எழுந்தருளியுள்ள பழூர், தற்போது பாடி என்றழைக்கப்படும்  திருவலிதாயம் போன்ற பல ஊர்களும் குருவிற்குரிய தலங்களாகும். திருச்சி மாவட்டத் தலைநகரான திருச்சியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும், திருவரங்கத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ள பிட்சாண்டார் கோயில் என்ற உத்தமர் கோயில் திருமாலும், சிவபெருமானும் ஒரே ஆலய வளாகத்தில் எழுந்தருளியிருக்கின்ற அற்புதமான சிவ விஷ்ணு ஆலயமாகும்.

உத்தமர் கோயிலில் ஒரே வளாகத்திற்குள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் புருஷோத்தமர் என்ற திருநாமத்தோடு திருமாலும், அவருக்கு நேர் பின்புறம் மேற்கு நோக்கி பிட்சாண்டார் என்ற திருநாமத்தில் சிவபெருமானும் எழுந்தருளி அருட்பாலிக்கின்றனர். இவர்களோடு நான்முகனான பிரம்மாவும், தேவி சரஸ்வதியோடு இங்கு அருட்பாலிப்பதால் இத்தலம் மும்மூர்த்தி தலமாக வழிபடப்படுகிறது. ஒரு காலத்தில் இத்தலத்தில் ஏராளமான கடம்ப மரங்கள் இருந்ததால் கடம்பவனம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு. புருஷர்களில் உத்தம புருஷனாக, பெருமாளாக அருட்பாலிக்கும் திருமால் இங்கு பிரம்மாவுக்குக் கடம்ப மரமாகக் காட்சி தந்ததால் இத்தலம் கதம்பனூர் என்று அழைக்கப்பட்டு மருவி திருக்கரம்பனூராயிற்று.

திருமால் ஆலயத்தில் புருஷோத்தமப் பெருமாள் புஜங்க சயனத்தில் உத்யோக விமானத்தில் கிழக்கு நோக்கி அருட்பாலிக்கிறார். தேவி பூர்ணவல்லி என்றும், பூர்வா தேவி என்றும் அழைக்கப்படுகிறாள். புருஷோத்தமர் ஆலயத்தில் லட்சுமி நாராயணர், வரதராஜப் பெருமாள், ருக்மிணி, சத்யபாமா சமேத வேணுகோபாலர் சந்நதி, சீதா, லட்சுமண, அனுமன் சமேத ராமர் சந்நதி ஆகிய சந்நதிகளும் உள்ளன. இங்கு மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் லட்சுமி நாராயணரை வெள்ளிக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தம்பதியரிடையே இணக்கமும், அன்பும் வலுப்படும் என்பது நம்பிக்கை.தீர்த்தக்குளம் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. திருமாலை வழிபட்ட பிரம்மாவுக்கும், தேவி சரஸ்வதிக்கும் பெருமாள் ஆலய வளாகத்தில் தனிச்சந்நதிகள் உள்ளன.

பிரம்மாவுக்கு இங்கு வியாழக்கிழமைகளில் அத்தி இலைகளினால் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எழுந்தருளி அருட்பாலிக்கும் இத்தலம் மும்மூர்த்தி ஸ்தலமாக மட்டும் வழிபடப்படுவதோடன்றி, பிரம்ம குருவாக பிரம்மாவும், விஷ்ணு குருவாக வரதராஜப் பெருமாளும், சக்தி குருவாக சௌந்தர்ய நாயகியும், ஞான குருவாக சுப்பிரமண்யரும், தேவ குருவாக பிருஹஸ்பதியும், அசுர குருவாக சுக்கிரனும் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் சப்த குருத் தலமாக அனைத்து மக்களாலும் போற்றி வழிபடப்படுகிறது. சமீப ஆண்டுகளில் இந்த சப்த குருத்தலம் மிகவும் பிரபலமாகி, ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் ஏராளமான பக்தர்கள் வழிபட வருகின்றனர்.

இங்கு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக சிவ குருவாகவும், தேவி சக்தி குருவாகவும், குரு குகனான சுப்பிரமண்யர் ஞான குருவாகவும், நவகிரக சந்நதியில் பிருஹஸ்பதியும், சுக்கிரனும் தேவ மற்றும் அசுர குருக்களாகவும் எழுந்தருளி இத்தலத்திற்கு சப்த குருத்தலம் என்ற மகத்துவத்தை அளிக்கின்றனர். குருபகவானின் அதிதேவதையாகத் திகழும் பிரம்மாவை வழிபட குருதோஷ நிவர்த்தி ஏற்படும் என்று ஜோதிடம் கூறுகிறது.
குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப குருபகவானின் பரிபூரண அருள் கிட்டவும், நினைத்தது நடந்தேறவும், இந்த உத்தமர்
கோயில் ஆலயத்திற்கு வந்து இந்த சப்த குருக்களையும் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மனதா வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தொடர்ந்து 11 வாரங்கள் இவ்வாறு வழிபட்டு வந்தால், மணப்பேறு, மகப்பேறு, செல்வ அபிவிருத்தி, ஆரோக்கியம் வேலை வாய்ப்பு போன்றவை கிட்டும் என்றும் குருபெயர்ச்சி நாளில் பரிகார ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றன. இந்நாளில் இங்கு வந்து சப்த குருக்களையும் தரிசிக்க குருபெயர்ச்சியினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் விலகி நன்மைகள் கிட்டும் என்பதும் குருபகவானின் திருவருள் கிட்டும் என்பதும் ஐதீகம். ஆண்டுதோறும் திருக்கார்த்திகைத் திருநாளன்று புருஷோத்தமப் பெருமாள், பிட்சாண்டார் மற்றும் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். திருச்சி, சேலம் பிரதான சாலையில கொள்ளிடம் டோல்கேட் அருகில் 108 வைணவ தேசங்களில் ஒன்றான உத்தமர் கோயில் தலம் அமைந்துள்ளது.

Tags : Uttamar Temple of Sabbath ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்