×

“மஹாளய அமாவாசை” அன்று பித்ரு தர்ப்பணம் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?

பூத உடலெடுத்து பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அவர்களின் காலம் முடிந்த பின்பு பூத உடல் மறைந்தாலும், அவர்களின் ஆன்மா புண்ணிய பாவங்களின் தன்மைக்கேற்ப சொர்க்கம் அல்லது நரகத்தில் வாசம் செய்யும் என்பது பெரும்பாலான மதத்தில் இருக்கும் நம்பிக்கை. நம்மை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த மறைந்த நமது பரம்பரையின் முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். இந்த பித்ருக்களை ஒரு குறிப்பிட்ட நாளில் வழிபடுவது இந்து மதத்தில் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படும் ஒரு செயலாகும். பித்ரு வழிபாட்டுக்குரிய ஒரு சிறப்பான நாள் தான் “மஹாளய அமாவாசை”. இந்த “மஹாளய அமாவாசை” தினம் வருகிற 28.09.2019அன்று ஏற்படுகிறது. அந்த மஹாளய அமாவாசை தினத்தின் முக்கியத்துவத்தை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

சூரியன் “கன்னி” ராசியில் பெயர்ச்சியாகும் மாதம் தான் “புரட்டாசி” மாதம். இந்த மாதத்தில் சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை துவங்குகிறார். ஆவணி மாதம் தொடங்கி தை மாத பிறப்பு வரையான காலம் தட்சிணாயனம் காலம் எனப்படும். இந்த தட்சிணாயன காலத்தில் வரும் முன்னோர்களின் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த நாள் தான் மஹாளய அமாவாசை தினம்.

“மஹாளய” என்ற சொல்லுக்கு “கூட்டாக சேர்ந்து வருதல்” என்பது பொருளாகும். அதாவது புரட்டாசி மாத பௌர்ணமி திதிக்கு மறுநாளான பிரதமை துவங்கி புரட்டாசி அமாவாசை தினம் வரையான 15 தினங்கள் நமது பரம்பரையில் இதுவரை தோன்றி, மறைந்த அனைத்து முன்னோர்களும் ஒன்றாக சேர்ந்து, நம்மை ஆசிர்வதிற்பதற்கு பூலோகத்திற்கு வருவதாக ஐதீகம். இக்காலங்களில் நாம் திரிகரண சுத்தியை கடைபிடித்து தினந்தோறும் நமது முன்னோர்களை வழிபட்டு, 15 ஆம் நாளான மஹாளய அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம், தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும்.

முன்னோர்களின் ஆசி கிடைக்கும் இந்த சிறப்பான நாளில் “காசி, ராமேஸ்வரம்” போன்ற மோட்சபுரிகளில், பித்ரு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பானது. உங்கள் ஊரிலேயே இருக்கும் ஆற்றங்கரை, மற்றும் கோவில் குளக்கரைகளிலும் மஹாளய அமாவாசை திதி கொடுப்பதில் பாதகம் ஒன்றுமில்லை. பித்ருக்களை வழிப்படுவதற்குரிய இந்த சிறப்பான தினத்தில், பித்ருக்களுக்கு அவர்களுக்குரிய திதியை கொடுத்து வழிபடுவது நமக்கும், நமது எதிர்கால சந்ததிக்கும் பல விதமான நன்மைகளை ஏற்படுத்தும்.

Tags : moon ,Bidru ,
× RELATED அரசு ஊழியர்களின் அயராத உழைப்பு,...