×

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

தன்வந்திரி லேகியம்

உலக மக்களை காக்க வேண்டி மஹா விஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று அழைத்து மகிழ்கின்றோம். அவை மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி என தசாவதாரங்களாகும். தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார். தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீவிஷ்ணு புராணம் மற்றும் பிரமாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன. திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான்  தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.

அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். நோய் தீர வழிபடலாம் நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும். அல்லவா ?  இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழி படுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீ ரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான், அவரே ஸ்ரீ மன் நாராயணன்.

வாலாஜாபேட்டை அனந்தலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தன்வந்திரி பகவான் வைத்தியராக இருப்பதாலும், மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவ மனையாக திகழ்ந்து வருகை புரியும் பக்தர்கள் நோய் நொடிகளின்றி வாழவும், நோயுற்றவர்கள் விரைவில் குணம் பெறவும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று தன்வந்திரி வைத்தியரிடம் வேண்டி இங்கு நடைபெறும் கூட்டு பிரார்த்தனையிலும் யாகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்கின்றனர். நோயற்று வாழட்டும் உலகு” என்ற தாரக மந்திரத்தை கொண்டு, தன் தாய்க்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றும் பொருட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் உருவாக்கப்பட்ட்து தான் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

இத்திருபீடத்தில் முப்பிணி தீர்க்கும் முக்குடி கஷாயம், தன்வந்த்ரி லேகியம், தன்வந்த்ரி தைலம்  போன்றவை பிரசாதங்களாக தரப்படுகிறது, இப்பிரசாதங்களை பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து இறைவனை வழிபட்டு பிரசாதங்களை பெற்று செல்கின்றனர். இப்பிரசாதங்களின் மூலம் ஏராளமான பக்தர்கள் பயனடைந்து உள்ளனர். முக்குடி கஷாயம் 28 வகையான மூலிகைகளுடன் தயிர் கலந்து முக்குடி கஷாயமாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கஷாயம் குழந்தை பாக்கியம் வேண்டியும், தீராத நோய் தீரவும், மனநோய் விலகவும், வயிறு சம்மந்தமான உபாதைகள் அகலவும், தன்வந்திரி பகவானுக்கு பிரார்த்தனை செய்து அருட்பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

தன்வந்திரி லேகியம்

நெய், சுக்கு, திப்பிலி, மிளகு, வெல்லம் போன்ற பொருட்களுடன் வீரயமிக்க மூலிகைகள் கலந்து தன்வந்திரி சந்நதி முன் சமையல் பாத்திரங்கள் வைத்து தன்வந்திரி மஹா மந்திரத்தை சொல்லி லேகியம் செய்து தன்வந்திரி மூலவருக்கு நிவேதனம் செய்து நோய் தீர்க்கும் ஔஷதப் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.  இப்பிரசாதத்தை உட்கொள்பவருக்கு நரம்பு சம்மந்தமான நோய்கள், கண் சம்மந்தமான நோய்கள், வயிறு சம்மந்தமான உபாதைகள், வாதம், பித்தம், கபம் போன்றவைகளால் உண்டாகும் பல்வேறு நோய்கள் விலகவும், ரத்த புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் இறைவனின் அருளால் நிவாரணம் பெறுகின்றனர்.

தன்வந்திரி தைலம்

எள்ளு எண்ணெய்யுடன் ஒருசில முக்கிய மூலிகைகள் கலந்து தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் கை, கால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, கண்நோய், நீரிழிவு நோய், தோல் சம்மந்தமான நோய், காக்கா வலி போன்ற நோய்கள் நீங்கி பயன் கிடைப்பதாக பயன் பெற்ற பக்தர்கள் மூலமாக அறிய முடிகிறது.

- ந. பரணிகுமார்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்