×

ஊட்டியில் கற்பூரமரம், மின்கம்பம் சாய்ந்தது போக்குவரத்து பாதிப்பு பொதுமக்கள் கடும் அவதி

ஊட்டி: ஊட்டி அருகே செலவிப் நகர், ஈஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக முறையான மின் விநியோகமின்றி இருளில் மூழ்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அதிகரட்டி பேரூராட்சியில் செலவிப் நகர், ஈஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் காய்கறி விவசாய நிலங்களுக்கும், கட்டுமான பணிகளுக்கும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதிக்கு அதிகரட்டி துணை மின் நிலையத்தின் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காற்று காரணமாக பல இடங்களில் மின் கம்பிகள் மீதும், கம்பங்கள் மீதும் மரங்கள், மரக்கிளைகள் விழுந்து மின் துண்டிப்பு போன்றவை ஏற்படுகின்றன. இவை உடனுக்குடன் சரி செய்யப்படுகின்றன. ஆனாலும், செலவிப் நகர், ஈஸ்வரன் நகர் மற்றும் முட்டிநாடு ஆடா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக முறையான மின் விநியோகம் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக கடந்த 5 நாட்களாக இரவு நேரங்களில் மின்சாரம் இருப்பதில்லை எனவும் இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகள் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்க வேண்டிய நிலை உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், வனத்தை ஒட்டி இக்கிராமங்கள் அமைந்துள்ளதால் காட்டுமாடு, சிறுத்தை, கரடி தொல்லை உள்ளது. இருள் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சமடைந்துள்ளனர். நகரத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டதால் உடனடியாக சரி செய்யப்படுகிறது. இப்பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டு புகார் அளித்தாலும் கண்டுகொள்வதில்லை. ஏழை எளிய மக்கள் வசிக்கும் என்பதால் பாகுபாடு காட்டப்படுவதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஊட்டியில் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் நின்ற மழை, மீண்டும் தொடர்ந்தது. இதனால், ஊட்டி கலைக்கல்லூரி செல்லும் சாலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கற்பூர மரம் வேரோடு விழுந்தது. மேலும், மரக்கிளைகளில் பட்டு அங்கு இருந்த மின்கம்பமும் சாய்ந்தது. இதனால், ஓல்டு ஊட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்….

The post ஊட்டியில் கற்பூரமரம், மின்கம்பம் சாய்ந்தது போக்குவரத்து பாதிப்பு பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Spending Nagar ,Eswaran Nagar ,Aeswaran Nagar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல்