×

குழந்தை பாக்கியத்துக்காக வெள்ளி தொட்டிலில் தாலாட்டு பாடும் பக்தர்கள்

குருவாயூர் என்றாலே புன்னகைக்கும் குழந்ைத கிருஷ்ணரின் உருவம் கண் முன்னே வரும். நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய புண்ணியஸ்தலங்களில் உள்ள தெய்வங்களுக்கு நிகரான கோயில்கள் குமரியில் பல உள்ளன. இந்த கோயில்களில் மிக முக்கியமானது குருவாயூர் கோயில் போன்றே குழந்தை கிருஷ்ணர் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் கோயில் ஆகும்.வடசேரி பகுதியில் உள்ள பல பழமையான கோயில்களில், பாலகிருஷ்ணன் அருள்பாலிக்கும் இந்த கிருஷ்ணன் கோயிலும் ஒன்று. சற்றே கால்களை மடக்கி நின்ற கோலத்தில் குழந்தை வடிவத்தில் பாலகிருஷ்ணனாக மூலவர் காட்சி அளிக்கிறார். இந்த பகுதியை குருவாயூரப்பனின் தீவிர பக்தரான ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி செய்தார்.

அப்போது வடசேரி பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோயில் எழுப்ப ஆசைப்பட்டார். அவரது கனவில் கிருஷ்ணர் வெண்ணையுடன், குழந்தை கண்ணணாக வந்து காட்சி அளித்தார். மேலும் குறிப்பிட்ட இடத்தில் தனக்கு கோயில் எழுப்பும் படியும் கூறினார். கனவில் கண்டபடி சிலை செய்யப்பட்டு, நவநீத கிருஷ்ணன் என்று பெயர் சூட்டப்பட்டது. நவநீதம் என்றால் வெண்ணை என்று பொருள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு அதிகம் வந்து செல்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தியன்று மூலவருக்கு வெண்ணை காப்பில் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. தினசரி அர்த்த ஜாம பூஜையின் போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் வைத்து தாலாட்டு பாடி வணங்குகின்றனர். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் அதிகமாக பங்கேற்கின்றனர்.கிருஷ்ணனுக்கு வெண்ணை காப்பு செய்து, பால் பாயாசம், உண்ணியப்பம், பால், பழம், அரிசிப் பொரி, வெண்ைண, அவல், சர்க்கரை ஆகியவற்றை படைக்கின்றனர். சித்திரை பிரம்மோற்சவத்தின் 4ம் நாளில், கிருஷ்ணர் இரு கைகளிலும், வெண்ணை பானையுடன், வெண்ணைத் தாழி உற்சவம் காணுகிறார். இந்த திருநாளில் 7வது நாள், இந்திர வாகனத்தில் எழுந்தருளும், கிருஷ்ணர் பழையாற்றில் சென்று ஆறாட்டு வைபவம் காண்கிறார். ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை புஷ்பாபிஷேகம் நடக்கிறது. அப்போது சுவாமியின் முகம் மட்டுமே காட்சியளிக்கும். மகாவிஷ்ணு குழந்தையாக இருந்தபோது, கிருஷ்ணராகவும், இளைஞர் பருவத்தில், பசுக்களை மேய்க்கும்போது, ராஜகோபாலன் எனவும் அழைக்கப்பட்டார். இங்கு உற்சவராக ராஜகோபால் காட்சி தருகிறார். உடன் ருக்மணி மற்றும் சத்யபாமா உள்ளனர்.

சித்திரை திருநாளின்போது, திருத்தேரில் ராஜகோபாலரே எழுந்தருளுகிறார். வைகுண்ட ஏகாதசியன்று இவரே சொர்க்கவாசலை கடக்கிறார். கிருஷ்ணரே பிரதான தெய்வம் என்பதால், கோஷ்ட மூர்த்திகள் இல்லை. மூலஸ்தானம் எதிரே உள்ள கொடிமரத்தில் அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்தல விருட்சமாக மகாலெட்சுமியின் அம்சமான நெல்லி மரம் உள்ளது. கோயில் முன்மண்டபத்தில், கருடாழ்வாரும், ஒரே சந்நிதியில், நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வசேனர் காட்சி தருகின்றனர். இங்கு காவல் தெய்வமான பூதத்தான் மரத்தினால் ஆன தண்ட வடிவில் காட்சி அளிக்கிறார். சபரிமலை மண்டல பூஜை மற்றும் தை முதல்நாள் தண்டத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்குள்ள கொன்றை மரத்தடியில், நாகருடன் சிவலிங்கம் அமைந்துள்ளது. சாஸ்தா சன்னதியும் அமைந்துள்ளது. தினசரி காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.


Tags : Devotees ,baby ,
× RELATED ஊரடங்கு முடியும் வரை திருப்பதியில்...