×

திருவேற்காடு நகராட்சியில் சாலையில் மாடுகள் திரிந்தால் உரிமையாளருக்கு அபராதம்: ஆணையர் எச்சரிக்கை

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இதில் மாடுகளை பாதுகாப்பாக அதற்குரிய இடத்தில் கட்டிப் போட்டு வளர்ப்பதில்லை. இதனால் பெரும்பாலான மாடுகள் சாலைகள் மற்றும் தெருக்களில் குறுக்கே படுத்துக் கொண்டும், திரிந்து கொண்டும் உள்ளன. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன. வாகனங்களில் செல்லும் போது மாடுகள் திடீரென குறுக்கே செல்வதால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் சாலை, தெருக்களில் சாணம் இடுவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து அடிக்கடி புகார்கள் வந்தன. இந்நிலையில், மாடு வளர்ப்பவர்களுக்கு திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி அறிவுறுத்தலின்படி, நகராட்சி ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாடுகள் சாலைகளில் படுத்துக் கொண்டும், திரிந்து கொண்டும் உள்ளன. இதனால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. மாடு வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை சாலைகளில் திரியாமல், தங்களது கட்டுப்பாட்டில் வளர்க்க வேண்டும். இதனை மீறி பொது இடங்களில், சாலைகளில், தெருக்களில் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு தொந்தரவோ, சிரமமோ ஏற்பட்டால் நகராட்சி சார்பில் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

The post திருவேற்காடு நகராட்சியில் சாலையில் மாடுகள் திரிந்தால் உரிமையாளருக்கு அபராதம்: ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvekadu ,Poontamalli ,Tiruvekkadu ,Tiruvekadu ,Dinakaran ,
× RELATED அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: கற்பழித்து கொலையா? என விசாரணை