×

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90 சதவீத பணிகள் நிறைவு : அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகளை நேற்று ஆய்வு செய்தபோது, ‘90 சதவீத பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. போட்டியின், துவக்க நிகழ்ச்சி ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடக்கிறது. இதையடுத்து,  மாமல்லபுரம் தனியார் நட்சத்திர ஓட்டலில் ஜூலை 29ம் தேதி போட்டிகள் துவங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெறும் ரிசார்ட்டில் நடந்து வரும் இறுதிகட்ட பணிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை நிர்வாக அலுவலர் சங்கர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் கொண்ட குழுவினருடன் நேரில் வந்து பார்வையிட்டு நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது, அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறுகையில், உலகமே உற்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ம் தேதி போட்டியின் துவக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டிகள் நடைபெற உள்ள ரிசார்ட்டில் ஆய்வு செய்த, அன்று முதல் மிக வேகமாக பணிகள் நடந்து கொண்டு வருகிறது. போட்டிகள், அனைத்தும் மாமல்லபுரம் மண்ணில் நடைபெற உள்ளது. 22 ஆயிரம் சதுர அடி கொண்ட முதல் அரங்கில், மொத்தம், 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கு பெறக்கூடிய இந்த இடத்தில் 90 சதவித பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. 20ம் தேதி அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என தெரிவித்துக் கொள்கிறேன். செஸ் ஒலிம்பியாட், போட்டியின் துவக்க நிகழ்ச்சி ஜூலை 28ல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. கிராமங்கள், தோறும் செஸ் போட்டியை தெரிப்படுத்தும் வகையில் 7ம் நூற்றாண்டில் தோன்றிய இந்த விளையாட்டானது  முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து, இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார். இன்று டெல்லிக்குச் சென்று பாரத பிரதமர் மோடியை தொடக்க விழாவுக்கு வருகை தருமாறு அழைப்பிதழை வழங்க இருக்கிறோம். முதல்வரின் வழிகாட்டுதல்படி கிராமங்களில் பள்ளி படிக்கும் பிள்ளைகளுக்கு செஸ் பற்றிய ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுப்பட்டு வருகிறது. திருச்சியில், 2148 அணிகள் பங்கேற்ற போட்டியானது நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர்  தலைமையில் போட்டி நடத்தப்பட்டு அது கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஜூலை 28ல், தொடங்கி இருக்கின்ற சர்வதேச செஸ் விளையாட்டு போட்டி இந்தியாவில் ஒவ்வொரு குக்கிரமங்களுக்கும், ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு செஸ் போர்டு இருக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமாக உள்ளது. இளைஞர், சமுதாயத்துக்கு ஆற்றலை வலுவாக்கக்கூடிய, மன உறுதியை ஏற்படுத்தக்கூடிய அறிவு சார்ந்த விளையாட்டான செஸ்ஸை, தமிழகத்திற்கு கொண்டு வந்து பெருமை சேர்த்துள்ளார்.  இந்த, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்….

The post சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90 சதவீத பணிகள் நிறைவு : அமைச்சர் மெய்யநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : International Chess Olympiad ,Minister Meyanathan ,Chennai ,International Chess Olympiad tournament ,Mamallapuram ,Minister ,Meyanathan ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...