×

வருவாய் வருவாய் கண்ணா!

ஸ்ரீமன் நாராயணன் அந்த எளிய இரு மனிதர்களான வசுதேவரையும், தேவகியையும் பார்த்தார். தன்னை மறந்து நெகிழ்ந்தார். அந்தக் கணத்தில் வசுதேவர், தேவகியை அக்னி சாட்சியாக மணந்து கொண்டார். மதுராவை கம்சன் எனும் அரசன் ஆண்டான். உக்ரசேனனுடைய மகன்தான் கம்சன். உக்ரசேனனின் தம்பியின் மகள்தான் தேவகி. கம்சன் எப்போதுமே சபையில் இருக்கும்போதுதான் பாசத்தை பொழிவான். தனியே இருக்கும்போது நீதானா... என்று அலட்சியம் காட்டுவான். உங்களில் ஒருவன்தான் நானும். எனக்கும் அன்பு, பாசம் உண்டு என்ற மேடை முழக்கம் இவனிடத்தில் அதிகம். திருமணம் முடிந்த வசுதேவரையும், தேவகியையும் தேரில் ஏறச் சொன்னான். தான் மிகவும் அன்பு செலுத்துவதாகவும் உங்களில் நான் ஒருவன்தான் எனவும் நடிப்பான்.

வசுதேவரையும், தேவகியை தேரில் ஏறச் சொன்னான். தேரின் லகானை இறுக்கினான். கம்பீரமாக எல்லோரையும் பார்த்தான். இவனுக்கென்று அருகே ஒரு கூட்டத்தை வைத்திருந்தான். அவர்கள் கண் கலங்கினார்கள். ''தங்கையின் மீது எவ்வளவு பாசம் பாருங்கள். பேரரசன் தனது தங்கைக்கு திருமணம் என்றவுடன் சாதாரண மனிதர்போல மாறிவிட்டாரே. இதுதான் நம் மன்னனின் தனிச் சிறப்பு'' என்று கம்சனை விதம் விதமாக புகழ்ந்தனர். தன்னையும், தனது கம்பீரக் கோலத்தையும் எல்லோரும் எவ்வாறு ரசிக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டே வந்தான். தேவகியைப் பார்த்து பொய்யாக சிரிப்பான். ஆஹா... மன்னரின் சந்தோஷத்தை பாருங்கள் என்று கதறினார்கள். இப்படியொரு கூட்டம் யாருக்கு கிடைக்கும் என்று நினைத்தபடி நடந்தான்.

தேர் மெதுவாக கூட்டத்தை பிளந்தபடி நகர்ந்தது. மழை மேகம் போன்றதொரு கருநிறம் ஊரை மெல்ல மறைத்தது. மழை வருமோ என சிலர் வானம் பார்த்தனர். மழை வந்தால் நல்லது எனவும், மன்னர் நல்லவர் என்றும் சிலர் கம்சனின் காதுபட புகழ்பொடியை தூவினார்கள். ஆனால், எல்லோரின் செவியை பிளக்குமாறு பெரும் சப்தமொன்று வானத்தில் எதிரொலித்தது. கம்சன் உட்பட அனைவரும் இடியோ என்று கண்ணை சுருக்கி கருமேகத்தை கண்டனர். மேகம் இம்முறை சிம்மமாக கர்ஜித்தது. கம்சனின் முகம் இருண்டது. அருகேயிருந்தோர் கம்சனின் முகத்தில் பயத்தைக் கண்டனர். தலை குனிந்தனர். வசுதேவரின் கண்கள் மேகத்தையும், கம்சனைம் தீர்க்கமாக ஊடுருவினார். ''அடேய் கம்சா... உன் சகோதரியான தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் நீ மரணிப்பாய்'' என்றது. கம்சன் தேவகியினாலா என்றபடி அலட்சியமும், வெறுப்பும் கொண்டு சகோதரியை நோக்கினான். ''மறுபடியும் சொல்கிறேன். தேவகியின் எட்டாவது பிள்ளைதான் உனக்கு எமன்'' என்றது.

தேரிலிருந்து விலுக்கென்று எழுந்தான். அசரீரி சொன்னது என்ன என்று யோசிக்கக் கூட இல்லை. எட்டு குழந்தை வரை உன்னை விட்டுவைப்பதா என தேரிலிருந்து இறங்கினான். தேவகியின் தலைமுடியப் பற்றி இழுத்தான். வாளை உருவி கழுத்தை சீவியெறிய நேராக கொண்டு சென்றான். வசுதேவர் சட்டென்று கம்சனின் கைகளை பற்றிக் கொண்டார்.

''கம்சா... தயவு செய்து இவளைக் கொல்லாதே. சற்று முன்னர்தான் அக்னியின் முன்பு இவளை காப்பாற்றுகிறேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன். மாங்கல்யத்தின் மஞ்சள் ஈரம் கூட இன்னும் உலரவில்லை. என் சகோதரி... என் சகோதரி... என்று பிரியமாக சொன்னீர்களே. ஏதோ அசரீரி சொல்லிவிட்டது என்பதற்காக பெண்ணை கொல்லலாமா. வீரனுக்கு அழகு இதுதானா.  உலகமுள்ள வரையிலும் நீ இகழப்படுவாயே. மண்பொம்மை போல இருக்கிறாள். உடைப்பதும், அலங்காரமாக வைப்பதும் உன்கையில்தான் உள்ளது. என்றைக்கு இருந்தாலும் மரணத்தை யார் வெல்ல முடியும். என்ன என்று யோசி. ஏதேனும் பரிகாரம் செய்து அதை மாற்ற முயலுமா என்று பார்'' என்று பல நீதிகளை கூறினார். அவன் தேவகியை விடாது இன்னும் இறுக்கினான். கேட்பதற்குக் கூட அருகில் யாரும் வரவில்லை. இறுதியாக தான நீதியைத்தான் அவர் கையிலெடுத்தார்.

  ''கம்சா... சரி இப்போது இவளை விட்டு விடு. உனக்கு இவளுடைய குழந்தையால்தானே மரணம். இவளால் அல்லவே. அதனால் கவலைப்படாதே. உன்னிடம் குழந்தைகளை கொடுத்து விடுகிறேன். அதுவும் எட்டாவது குழந்தையால்தானே'' என்றதும் கம்சன் கொஞ்சம் நிம்மதியானான். திருமணமாகி சகோதரியை கிரகப் பிரவேசத்திற்கு அனுப்ப வேண்டிய சகோதரன் சிறைக்கு பிரவேசம் செய்வித்தான். ஒரு வருடம் கழிந்தது. வசுதேவருக்கும், தேவகிக்கும் குழந்தை பிறந்தது. வசுதேவர் சொன்ன சொல்லை காப்பாற்ற கம்சனிடம் குழந்தையை கொண்டு சென்றார். கம்சன் அவரின் சத்திய நிஷ்டையை கண்டு பிரமித்தார். அமரச் சொன்னான்.

''இதோ எங்கள் முதல் குழந்தை'' என்று வசுதேவர் கொடுத்தார். ''இல்லை வசுதேவரே. எட்டாவது குழந்தையால்தானே எனக்கு மரணம். அதனால் இதை கொண்டு செல்லுங்கள்'' என்றான்.வசுதேவர் சாதாரணமாகத் திரும்பினார். சத்தியம் என்ன செய்கிறதோ செய்யட்டும் என்கிற நிலையில் இருந்தார். துக்கமோ, ஆனந்தமோ எல்லாவற்றையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற்றிருந்தார். கம்சன் கொஞ்சம் சந்தோஷத்தோடு சென்றான். ஊர் முழுவதும் கம்சன் எவ்வளவு நல்லவர் பாருங்கள் என்று வதந்தி பரவியது. இப்படி பரவுவதில் ஏதோ விஷம் உள்ளதென கம்சன் பயந்தான். ‘உன்னுடைய பயமும் சரிதான்’ என்று வீணையை மீட்டிக் கொண்டு நாரதர் கம்சனின் அரண்மனைக்கு வந்தார். கிருஷ்ணனின் அவதாரத்தை விரைவுபடுத்த நாரதர் ஆவலானார்.

கிருஷ்ணனின் அவதாரம் தாமதமாகி விடக்கூடாது என்பதற்காகவே நாரதர் கம்சனின் அரண்மனைக்குள் நுழைந்தார். தேவர்களாக இருப்பினும், அசுரர்களாக இருப்பினும் சரி நாரதரை மரியாதையோடு நடத்தினார்கள். பல அவதாரங்கள் அவரின் வருகையினாலேதான் நிகழ்ந்தன. கம்சன் அன்போடு அழைத்து அமரச் சொன்னான். நாரதர் கம்சனின் மனதை ஊடுருவினார். ‘உனக்கு ஒன்றும் ஆகாது. நீதானே மூவுலகிற்கும் அரசன். இல்லையே... அசரீரி தேவகியின் எட்டாவது கர்ப்பம்தான் உனக்கு எமனென்று சொல்லிற்றே. நிச்சயம் அவனால்தான் நீ கொல்லப்படுவாய்...’ என்று மனதுக்குள் தொடர்ந்து புலம்பியபடி இருந்தான்.

தான் என்கிற அகங்காரத்தை பயம் அழிப்பதும், பயம் தெளிந்தபிறகு அகங்காரம் எழுவதுமாக இருந்தது. அடிக்கடி வானம் பார்த்தபடி இருந்தான். நாரதர் கண்களை மூடிக் கொண்டார். ''கம்சா... எட்டாவது கர்ப்பம் என்பதற்கு என்ன பொருள். முதல் கர்ப்பத்திலிருந்து எட்டாவது குழந்தை என்பதா. எட்டும் பிறந்தபிறகு எது என்று பார்த்துக் கொன்று விடுவாயா. நீ என்னமோ ஏமாறப் போகிறாய் என்றுதான் தோன்றுகிறது. தேவர்களின் சதி புரியாது இருக்கிறாய். எதற்கு முதல் இரண்டு, மூன்று என்றெல்லாம் எண்ண வேண்டும். எட்டாவது குழந்தை வரை எதற்கு காத்திருக்க வேண்டும்...'' என்று மட்டும் சொல்லி விட்டு நகர்ந்தார்.

கம்சனின் முகம் இன்னும் இருண்டது. நேராக சிறைச்சாலையை நோக்கி நடந்தான். தேவகியின் கையிலிருந்த முதல் குழந்தையை பிடுங்கினான். பாறையில் மோதிக் கொன்றான். தேவகியின் அலறலில் சிறைச்சாலை அதிர்ந்து அடங்கியது. வசுதேவரையும், தேவகியையும் சந்தேகத்தோடு அடிக்கடி வந்து பார்த்துச் சென்றான். தேவகியின் முகம் கோடி சூரியனாகப் பிரகாசித்தது. ஊர் மக்கள் மனம் குளிர்ந்தது. கம்சனின் உள்ளம் மட்டும் திகித்தது. தேவகி முகப் பிரகாசம் பார்த்தவனுக்கு இன்னும் பயம் அதிகமாகியது. வசுதேவர் இடையறாது ஒரு பேரானந்தத்தில் இருந்தார். எம்பெருமான் அவதரிக்கப்போகிறார் என்றவுடன் தேவர்கள் அனைவரும் அங்கு தோன்றினார்கள். கைகளை கூப்பினார்கள்.

''தாயே நீ பெரிய பாக்கியம் செய்திருக்கிறாய். உலகம் இனி உய்வுறும். இனி பூலோகம்தான் எங்களுக்கு வைகுந்தம். இப்போது நீங்களே கோயில். உங்களுக்குள் உறைபவரே பகவான்'' என்று துதித்தார்கள். வணங்கினார்கள். இதற்கு மத்தியில் எல்லா உலகங்களில் உள்ளோர்களும் தாங்கள் பூலோகத்திற்கு செல்லும்போது எங்கள் உலகங்களுக்கும் வந்து செல்லுங்கள் என்று பணிந்தனர். பகவானும், கிருஷ்ணராக அவதரித்த பிறகு நிச்சயம் வருவேன் என உறுதி கூறினார். பாரிஜாத ஹரணம் என்ற விஷயத்தின்போது எல்லா லோகங்களுக்கும் சென்று வந்தது பின்னால் நடந்த கதை.

எல்லா தேசங்களிலும் பகவான் அவதரிக்கப்போகிறார் எனும் செய்தி பரவியது. ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதி நெருங்கியது. கர்ப்ப வாசம் என்பது பகவானுக்கு கிடையாது.  ஏனெனில், சித் சொரூபமான பகவான் கர்ப்பத்தில் தான் இருந்ததுபோல காட்டுகிறான். தேவகி கர்ப்பம் தரித்திருப்பதுபோல காண்பிக்கிறான். அப்படி கர்ப்பத்திலிருந்துதான் வந்தார் என நினைத்தாலும் தவறில்லை எனும்படியாகவும் அவதரிக்கிறார். ஏனெனில், எல்லோருக்கும் அந்தர்யாமியாக பகவான் இருப்பதால், அவருடைய அவதாரம் நிகழும்போது கர்ப்பத்திலிருந்து உதித்தாலும் ஒன்றுதான், சட்டென்று தோன்றினாலும் ஒன்றுதான்.

ஸ்ரீமன் நாராயணன் ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதியில் அவதரித்தான். சங்கு சக்ர கதாதரனாக சதுர்புஜங்களோடு தோன்றினார். பூர்வ யுகத்தில் நீங்கள் என்னை மகனாக அடைய ஆசைப்பட்டீர்கள். இப்போது உங்களுக்கு மகனாக அவதரிக்கிறேன் என்று ஆனந்தமாக உரைத்தார். வசுதேவரும், தேவகியும் ''எங்களின் குழந்தையாகவே வாயேன்'' என ஆசையோடு அழைத்தனர். சுருள்சுருளான கேசங்களோடும், உருளும் விழிகளுமாக, கைகளில் தங்க காப்போடும், காதுகளில், கழுத்துகளிலும் அணிகலன்களோடும் குழந்தை உதித்தது. அந்த இருளிலும் குழந்தை பிரகாசமாக இருந்தது. ஏனெனில், தேவகி தனது குழந்தைக்கு எதுவும் செய்ய முடியவில்லையே வருத்தப்படுவாளே என்று சகல அலங்காரங்களோடும் குழந்தை விளங்கியது.

அந்த காரிருளில் வசுதேவர் குழந்தையை தூக்கிக் கொண்டதும், சிறைக் கதவுகள் தானாக திறந்தன. அரண்மனை தாண்டும்போது மழையும் வலுத்து பெய்யத் தொடங்கியது. யமுனையில் நீர் பெருக்கெடுத்தோடியது. ஆதிசேஷன் குடைபிடிக்க வசுதேவர் குழந்தையை தலையில் சுமக்க யமுனை ஆச்சரியமாக வழிவிட்டது. வசுதேவர் கரையைத் தாண்டினார். கோகுலத்திற்குள் நுழைந்தார். யசோதையின் பக்கத்தில் இருக்கும் யோகமாயையின் அம்சமான குழந்தையை கையில் எடுத்துக் கொண்டார். மீண்டும் கம்சன் அடைத்து வைத்த சிறைச்சாலையை அடைந்தார். குழந்தையை கையிலிருந்து பூமியில் வைக்கும்போது உரத்த குரலில் அழ ஆரம்பித்தது. ‘‘கம்சன் ஆஹா... என்னை கொல்லப்போகும் குழந்தையா நீ. இன்றே உன்னை ஒழிக்கிறேன் வா’’ என்று வாள் உருவி எழுந்தான்.

யசோதையின் பக்கத்தில் கிடந்த கிருஷ்ணன் சிரிக்கத் தொடங்கினான். பிறந்ததிலிருந்தே அதர்மத்தை அழிக்க வேண்டி தன் கணக்கை தொடங்கினான். அதில் முதலில் தன் மாமனான கம்சன் இடம்பெற்றிருந்தான். இப்போது வசுதேவரும், தேவகியும் சிறையில் கையிலிருந்த பெண் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தனர். இதையாவது கம்சன் விட்டுவிடுவானா. பெண் குழந்தை இவளை என்ன செய்யப் போகிறாள் என்றெல்லாம் தேவகி கேட்டுக் கொண்டிருந்தாள். வசுதேவர் சிரித்து, ''வெறுமே வேடிக்கை பார்'' என்றார்.கம்சன் ஆர்ப்பாட்டமாகவும், ஆர்ப்பரித்தும் நடந்து வருவது தொலைவிலிருந்தே கேட்டது. ''ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன கொன்று விட வேண்டும். நீயென்ன இப்படிப் பேசுகிறாய்'' என யாரோ ஒரு வீரனை அறையும் சத்தம் கேட்டது. சிறைக்குள் நுழைந்தான். கையிலிருக்கும் குழந்தையை பிடுங்கினான்.

குழந்தை இவனை முறைப்பது போலிருந்தது. பயந்தான். 'நீயா என்னை கொல்லப் போகிறாய். ச்சீ... ஒரு பெண்ணாலா எனக்கு மரணம்' என்று நினைத்தான். குழந்தை சிரித்தது. கம்சன் கோபமானான். குழந்தையை உயரத் தூக்கினான். தூக்கியெறிய கைகளை பின்னுக்கு கொண்டு வந்தான். சட்டென்று கையிலிருந்த குழந்தை மறைந்தது. எங்கே... எங்கே.. என தேடியபோது சிறையின் மேல் விதானத்திற்கும் மேலேயுள்ள வானில் எட்டு கரங்களோடு துர்க்கை சிரித்தாள்.

''உமக்கு கொல்ல குழந்தைகளா கிடைத்தார்கள். உன் அழிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. உன்னை கொல்ல பிறந்திருக்கிற குழந்தை வேறொரு இடத்தில் ஆனந்தமாக இருக்கிறது. உன்னால் அவனை சீண்டக் கூட முடியாது. வசுதேவரும், தேவகியும் எந்த பாவமும் அறியாதவர்கள். அவனைக் கண்டுபிடித்து உன் வீரதீரத்தை காட்டு'' என்று துர்க்கை கர்ஜித்தாள். கம்சனின் கண்கள் இருண்டன. நிற்க முடியாது அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்தான். அவனுக்கு அழுகை வேறு வந்தது. திடீரென்று வசுதேவரையும், தேவகியையும் சேர்த்து நிற்க வைத்து நமஸ்கரித்தான்.

''என்னை மன்னித்து விடுங்கள் வசுதேவரே. சகோதரி தேவகியே... என்னை மன்னித்து விடம்மா. என் உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக உங்கள் குழந்தைகளை கொன்று விட்டேன். வேறு எந்தவிதமான கோபமும் எனக்கு உங்கள் மேல் இல்லை. இன்றிலிருந்து நீங்கள் இந்த அரண்மனையில் சகல வசதிகளோடும் வாழ்ந்து வரலாம். உங்களுக்கு என்னால் எந்த தொந்தரவும் இருக்காது'' என்றான்.  அதேநேரம் ஆயர்பாடியில் நந்தகோபருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கிறதாம் என்கிற செய்தி பரவியது.''இப்போது பிறந்த மாதிரியே இல்லையாமே. ஒரு வருஷக் குழந்தை மாதிரி எல்லோரையும் பார்க்கிறதே. திடீரென்று கோபிகையை பார்த்து கண் சிமிட்டுகிறதாம். பக்கத்து வீட்டு கோபிகை ஒருவள் பார்த்துக் கொண்டே இருக்கும்போது எழுந்து அமர்ந்து விட்டதாம்'' என்றெல்லாம் விதம்விதமாக பார்க்காமலேயே பேசிக் கொண்டார்கள்.

மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கத்தால் இழைக்கப்பட்டதுமான அந்த தொட்டிலில் முத்தான கிருஷ்ணனை படுக்க வைத்தார்கள். எல்லோரும் தொட்டிலை சூழ்ந்து வளைத்துக் கொண்டனர். மெல்லியதாக அந்த தொட்டிலை அசைத்தனர். முன்னும் பின்னும் மணிகளின் சப்தங்களோடு தொட்டில் ஆடியது. கோபிகைகளின் உள்ளத் தொட்டிலிலும் மெல்ல கிருஷ்ணன் ஏறி அமர்ந்து கொண்டான். மனம் என்பதும் தொட்டிலைப்போலத்தான். சதா சலித்தபடி அது ஆடுகிறபடி ஆடட்டும். மேலே... கீழே... நல்லவை... கெட்டவை... என்று அதன் இயல்பில் அது அலையட்டும். ஆனால், அதில் பிரம்ம வஸ்துவான கிருஷ்ணனை அல்லவா உட்கார வைக்க வேண்டும்.

குழந்தைக்கு மெதுவாக ஒரு வயதானது. இதுவரை எல்லோரும் ஏதோ ஒரு பெயரிட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள். நந்தகோபர் ‘ரோகிணியின் பிள்ளைக்கும், இவனுக்கும் பெயர் வைக்க வேண்டுமே’ என்று சிந்தித்தபடி இருந்தார். நந்தகோபர் தன்னுடைய குல குருவான சாண்டில்ய மகரிஷியை கேட்போம் என்று வீட்டின் வாயிலை விட்டு இறங்கும்போது எதிரே வசுதேவரின் குருவான கர்க்காச்சாரியார் எதிரே வந்து நின்றார். நந்தகோபரும் ‘மகான்களுக்குள் எந்த பேதமுமில்லையே. இவரே குழந்தைகளுக்கு பெயரைச் சூட்டி விடட்டுமே’ என்று நினைத்தார். பெரிய மகரிஷிக்குரிய மரியாதைகளோடும் உபசரிப்போடும் அவரை வரவேற்றார். உயர்ந்த ஆசனத்தில் அமர்வித்து வணங்கினார். கர்க்காச்சார்யாரும் கண்களை மூடிக் கொண்டார். ‘குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது’ என்று யோசிக்கத் தொடங்கினார்.

''பகவான் அவதரித்திருக்கிறார் என்பதை கர்க்காச்சாரியார் போன்ற ஞானியரே அறிய முடியும். மேலும், வசுதேவருடைய குல குருவே கர்க்காச்சாரியார்தான். குலகுருவான தன்னால்தான் நாமம் சூட்டப்பட வேண்டும் என்பதற்காகவே இங்கு விரைந்து வந்தார். நந்தகோபனை கர்க்காச்சார்யார் நெகிழ்ந்து ஏறிட்டுப் பார்த்தார். ''எப்பேற்பட்ட புண்ணியசாலியப்பா நீ'' என்று கண்களில் நீர் பெருக்கினார். நந்தகோபர் மிக முக்கியமானவர்களை மட்டும் வீட்டிற்கு அழைத்தார். யசோதையையும், ரோகிணியையும் அழைத்து குழந்தைகளை நீராட்டி அலங்கரித்து அழைத்து வாருங்கள் என்றார்.

எப்பேற்பட்ட விஷயம் இங்கு நடைபெறப் போகிறது என்கிற திகைப்போடு கர்க்காச்சாரியார் அமர்ந்திருந்தார். மெல்ல கண்கள் மூடி அந்த பூரண பிரம்மத்தை நோக்கி பிரார்த்தித்தவாறு அமர்ந்திருந்தார்.  எந்தப் பெயரை அழைத்தால் அந்த பிரம்மமே திரும்பிப் பார்க்குமோ அப்படிப்பட்ட நாமமாக அது இருக்க வேண்டும். எந்த நாமத்தை சொன்னால் நெஞ்சு முழுதும் நிம்மதியாகுமோ அப்படிப்பட்ட பெயர் எனக்குள் தோன்ற வேண்டும் என்று கண்கள் மூடி ஆழ்ந்திருக்கும்போதே குழந்தைகளை கொண்டு வந்து கொடுத்தனர்.

அந்தப் பேரழகுப் பெருமானின் திருவுருவத்தை கர்க்காச்சாரியார் ஆனந்தமாக தரிசித்தார். சிரசின் உச்சியிலிருந்து கால் நகம் வரை உற்றுப் பார்த்தார். நீலமேக ஷியாமளன் என்று ரிஷிகள் புகழும் மேக வண்ணமான தேகம். ரோகிணியின் பிள்ளைக்கோ வெள்ளை வெளேரென்ற தேகம். தேவகி புத்திரனுக்கு சுருள்சுருளான அழகான கேசங்கள். அப்படியே அதை அள்ளி முன்பக்கமாக  கொண்டைபோட்டு மயிற்பீலி சொருகியிருந்தார்கள். அது அசைய எல்லோர் உள்ளமும் களிப்படைந்தது.

நெற்றியில் நெத்திப் பட்டம் மினுமினுத்தன. கழுத்தில் முத்துச் சரங்கள் வான் நிலவுத் தோரணமாக ஜொலித்தன. தலையில் சூரிய பிரபையும் சந்திர பிரபையும் அழகு கூட்டின. காதுகளில் குண்டலங்கள் அசைந்தாட கழுத்தில் இன்னும் கல் அட்டிகையும், மாங்காய் மாலையும் புரண்டு கொண்டிருந்தன. தோளில் தோள் வளைகளும், கைகளில் ரத்தின கங்கணங்களும், பிஞ்சு பிஞ்சு அந்த விரல்களில் மோதிரங்களும் வண்ண மயமாகக் காட்டின. இடுப்பில் தங்க அரைஞாணும், கிங்கிணியும், கால்களில் தண்டையும், கொலுசும் ஜல்ஜல் என தாளமிட இரு குழந்தைகளும் கர்க்காச்சாரியார் எதிரே விளையாடிக் கொண்டிருந்தனர்.

கர்க்காச்சாரியார் ரோகிணியின் பிள்ளையை பார்த்தார். ''என்ன ஒரு கம்பீரம். யோகிகளின் மனதையே ரமித்தல் என்று சொல்லும்படியான உருகவைத்து தவிப்பூட்டும் முகமாயிற்றே இது. அதனால் இவனுக்கு ராமன் என்று பெயர். நந்தகோபா இவன் மிகுந்த பலசாலியாக விளங்குவான் எனவே இவனுக்கு பலராமன் என்பதே திருநாமம். இப்போது தேவகியின் மைந்தனைப் பார்த்தார். ஏனோ அவரிடத்தில் ஒரு இயலாமை தொண்டையை அடைத்தபடி இருந்தது. இந்தக் குழந்தைக்கு.... இல்லை எங்குமுள்ள, எல்லோரிடத்திலுமுள்ள இந்த சக்தியை எந்த நாமத்தில் அடக்குவேன்.

 நந்தகோபா.... இவனுக்கு அநேக நாமங்கள், பலவிதமான ரூபங்கள். ஆயிரம் நாமமுடையவன் இவன். எந்த நாமத்தை சொல்லுவேன் என்று தெரியவில்லை. ஆனாலும்...'' என்று தொண்டையை கனைத்துக் கொண்டு ''நம் வசுதேவனின் புத்திரனாக இருப்பதால் இவனுக்கு வாசுதேவன் என்கிற பெயர். இவனை அண்டியவர்களுக்கு எதிரிகளே கிடையாது. இவனே ஆதிபுருஷனாக இருப்பதால் நாராயணன் எனும் பெயரையும் சூட்டுகிறேன். கிருஷ்ணன் என்று ஒரு பெயர் இவனுக்கு உண்டு. எத்தனையோ யுகங்களாக அந்த பெயர் நிலைத்திருக்கிறது.

அந்த நாமம் சொல்லும் தத்துவமும், அழகும் இவனைத்தான் குறிக்கின்றன. சூழ்ந்திருந்த கோபியர்கள் இந்த பெயர் கேட்டபோது சிலிர்த்தார்கள். ஆஹா... ஆஹா... என்று கண்களில் நீர் சூழ ஆனந்தமானார்கள். கிருஷ்ணா... கிருஷ்ணா... என்று அப்போதே சிலர் ஆசையாக அழைத்தார்கள். அப்படி அழைத்தோரின் உள்ளத்தை அந்த நாமம் திருடியது. கிருஷ்ணம் என்பது நீலத்தையும் குறிக்கும். கருப்பையும் குறிக்கும். அதுமட்டுமல்ல கிருஷ்ணன் என்றாலே ஆகர்ஷிக்கக் கூடியதும் ஈர்க்கக் கூடியது என்று பொருள்.

கிருஷ்ணன் என்பதில் ‘கிருஷ்’ எனும் வேர்ச் சொல்லுக்கு பிரம்மம் என்று பொருள். ஆனாலும், கர்க்காச்சாரியார் இதற்காகத்தான் இந்தப் பெயர்களையெல்லாம் சூட்டினேன் என்று விளக்கமாக சொல்லாமல் சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் சொன்னார். பூடகமாக பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். நந்தகோபரையும் குடும்பத்திலுள்ள எல்லோரையும் ஆசிர்வதித்தார். கிருஷ்ணனின் திருப்பார்வை அவரையும் துளைத்தது. தளும்ப தளும்ப கிருஷ்ணனின் அருளை தேக்கி வெளியே வந்தார்.

- கிருஷ்ணா

Tags :
× RELATED காமதகனமூர்த்தி