×

காப்பியங்கள் காட்டும கதாபாத்திரங்கள்: திரிசடை

காப்பியங்கள் காட்டும கதாபாத்திரங்கள்

நற்குணங்கள் நிறைந்தவள்; மறந்தும் பிறர் கேடு சூழாதவள். இப்படிப்பட்ட பெண் நிறைமாதமாக இருந்தாள். மழைக்காலத்தில், மானசம் என்ற பெரும் ஏரிக்கரையில் அவள் இருந்தபோது, பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

குழந்தை பிறந்த நேரத்தில், மழைநீரின் காரணமாக ஏரியில் நீர் பெருகி வந்தது. அதைகண்ட தாய் பயந்தாள்; பெருகி வரும் நீரால், என் குழந்தைக்கு ஆபத்து வந்து விடுமோ?’ என்ற எண்ணத்தில், “ஸரோ (ஏரியே)! மா வர்த்தயஸ்வ (பெருகாதே)!” எனக் கூவினாள். அவ்வாறு வேண்டிய தாயின் கூவலுக்கு ஆதாரமான அக்குழந்தை - ‘ஸரமா’ எனப்பெயர் பெற்றது. சைலூஷன் எனும் கந்தர்வனின் மகள், இந்த ஸரமா. இந்த ஸரமாதான், பிற்பாடு விபீஷணரின் மனைவியாக ஆனாள். விபீஷணர்- ஸரமா தம்பதியின் மகள் திரிசடை. திரிசடை என்றால் நம்மைப் பின்னிப் பிணைத்திருக்கும் முக்குற்றங்களையும் நீக்கியவள் என்பது பொருள்.

அதாவது காமம், வெகுளி, மயக்கம் எனும் முக்குற்றங்களும் இல்லாதவள் திரிசடை என விளக்கம் சொல்வார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். முக்குற்றங்களையும் நீ்க்கிய திரிசடைதான், ராவணனால் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதைக்குப் பெரும் துணையாக இருந்தாள். திரிசடையைப்பற்றிச் சொல்லத் தொடங்கிய கம்பர், ‘இருந்தனள் திரிசடை என்னும் இன் சொலில்  திருந்தினாள்’ எனத் தொடங்குகிறார். கைகேயி முதலான பற்பல கதாபாத்திரங்களைத் தூங்கும் போது அறிமுகப்படுத்திய கம்பர், ஒருசில கதாபாத்திரங்களை விழித்திருக்கும் போது அறிமுகப்படுத்துகிறார். அவர்களிலும் திரிசடையைச் சொல்லும்போது ‘இருந்தனள்’ எனத் தொடங்கி, திரிசடையின் இன்சொல்லைப் பற்றியும் கூறுகிறார்.

எவ்வளவோ பேர்கள் இருக்கையில், திரிசடையை மட்டும் ‘இருந்தனள்’ என்றும். ‘இன்சொல் கொண்டவள்’ என்றும் கம்பர் சொல்லக் காரணம் என்ன? துயரத்தில் இருந்த சீதையின் அருகிலேயே ‘இருந்து’ சீதையிடம் ‘இன்சொல்’ கூறித் துயர் களைந்தவள் திரிசடை. அதன் காரணமாகவே ‘இருந்தனள்’ என்றும்.’ இன்சொல் கொண்டவள்’ என்றும் திரிசடையைப்பற்றிக் கூறித் தொடங்குகிறார் கம்பர். திரிசடையைப் பற்றி அறியலாம் வாருங்கள்! சுந்தர காண்டத்தில் சீதையைத்தேடி வந்த ஆஞ்சநேயர் அசோகவனத்தில், சிம்சுபா மரத்தில் இருந்தபடி, கீழே இருந்த சீதையைப் பார்ப்பதில் இருந்து, திரிசடையைப் பற்றிய தகவல்கள் தொடங்குகின்றன. ராவணனால் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைச்சுற்றி அரக்கியர் பலர் இருந்தார்கள்.

அவர்களில் தலைமையானவள் திரிசடை. மனத் துயரத்தில் இருந்த சீதைக்கு ஒருநாள் நல்ல நிமித்தங்கள் உண்டாயின. அந்த நன்னிமித்தங்களை அருகில் இருந்த திரிசடையிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறாள் சீதை. இந்தக் கட்டத்தில் திரிசடையைப் பற்றி, ஆர்வம் அடங்காமல் மேலும் விவரிக்கிறார் கம்பர். ஆயிடைத் திரிசடை என்னும் அன்பினாள்தாயினும் இனியவள் தன்னை நோக்கினாள். திரிசடை அன்பே வடிவானவள்; தாயைவிட இனியவள் என்பது கம்பர் வாக்கு. அன்பையும் தாய்மையையும் சேர்த்துச் சொல்லக் காரணம்; அன்பையும் தாய்மையையும் பிரிக்க முடியாது.

அது மட்டுமல்ல! பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பு - தாய்மை மட்டுமே. அடுத்து, அன்பு என்று சொல்லி, தாயின் இனிமையையும் சொல்ல மற்றொரு காரணமும் உண்டு. குழந்தைகள், ஆணோ - பெண்ணோ யாராக இருந்தாலும் சரி!அவர்கள் தங்கள் மனக்குறையையோ, மன மகிழ்ச்சியையோ, ஆத்மார்த்தமாகப் பகிர்ந்து கொள்வது தாயிடம் மட்டும்தான். தந்தையிடம் அல்ல! அசோகவனத்து சீதை, தன் மனத் துயரத்தையும் அதன் விளைவான சாதக பாதகங்களையும் பகிர்ந்து கொண்டது திரிசடையிடம் மட்டும்தான். தாயாரென்றால் பெற்ற உரிமை - கடமை என ஏதாவது சொல்லி விடலாம். ஆனால், திரிசடை, சீதையைப்பெற்ற தாயல்ல; சீதைக்குக் காவலாக வைக்கப்பட்டவள்.

காவலாக வைக்கப்பட்ட உத்தமியான இந்தத் திரிசடையிடம்தான், சீதாதேவி தன் எண்ணங்களை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறாள். ‘‘தோழி! எனக்குக்கூட, இனிமேல் நல்ல காலம் வரப் போகின்றதா? இன்று எனக்கு இடது பக்கம் துடிக்கின்றதே ! விஸ்வாமித்திர முனிவரும் எனது நாயகரும் இளையவரும் மிதிலை வந்த அந்த நாளில், இன்றுபோல எனக்கு இடம் துடித்தது’’ என்று தனக்கு வந்த நல்ல நிமித்தங்களைச் சொல்ல ஆரம்பித்த சீதை, பழைய தீய நிமித்தங்களையும் நினைக்கிறாள்; சொல்லவும் செய்கிறாள். “மறந்துபோய் விட்டேனே! தர்ம மூர்த்தியான என் நாயகர், தன் அரசைத் தம்பிக்குக் கொடுத்து, எங்களுடன் காட்டிற்குப் புறப்பட்டாரே! அன்று எனக்கு வலம் துடித்தது. அதனால்தான் இவ்வளவு துயரங்கள் ஏற்பட்டன போலும்” என்கிறாள், சீதை.
                
மறந்தனன் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்
அறந்தரு சிந்தை என் ஆவி நாயகன்
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத்
துறந்து கான்புகுந்த நாள் வலந்துடித்ததால்
- கம்பராமாயணம்

பெண்களுக்கு இடந் துடிப்பதும் ஆண்களுக்கு வலம் துடிப்பதும், நன்மைக்கான அறிகுறிகள். ராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதை, தனக்கு நேர்ந்த தற்போதைய நல்ல நிமித்தங்களைச் சொல்லும்போது, முந்தைய தீய நிமித்தங்களும் நினைவில் வருகின்றன, அவளுக்கு. அதையும் மறைக்காமல் திரிசடையிடம் அதைக்கூற வேண்டுமானால், திரிசடை எந்த அளவிற்கு சீதையின் மனதில் இடம் பெற்றிருந்தாள் என்பது தெரிகிறதல்லவா? என்னதான் நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் துயரத்தில் ஆழ்ந்த மனம், பழைய தீய அனுபவங்களை எண்ணி மேலும் துயரத்தில் ஆழும்.

அப்படிப்பட்ட நிலையில் இருந்த சீதை, தன் மனத் துயரத்தை வெளிப்படுத்த, திரிசடை அதற்குப் பதில் சொல்கிறாள். அந்தப்பதில், துயரத்தில் இருப்பர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல வேண்டும் என்பதை, பாடமாக நடத்துகிறது. திரிசடை தொடங்குகிறாள். ‘‘உன் கணவரை நீ அடையப் போகிறாய்.தேவி! உன் முகத்தில் ஓர் அசாதாரணமான ஔி தெரிகிறது. உன்காதில் ஒரு பொன்வண்டு வந்து, ஊதிச் செல்கிறது. ஆகையால், காதிற்கு இனிமையான ஏதோ ஒரு தகவலை, நீ கேட்கப் போகிறாய் எனத் தோன்றுகிறது’’ என்றாள்.

என்ன அணுகுமுறை! எவ்வளவு இனிமையான - தைரியமூட்டும் வார்த்தைகள்! இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகத் திரிசடை தொடர்கிறாள். ‘‘தேவி! நீ தூங்கவில்லை. நான் தூங்கினேன். கனவு வந்தது; கனவில் கண்டதைச் சொல்கிறேன். கேளம்மா! உடல் முழுதும் எண்ணெயைப்பூசி, சிவந்த ஆடை அணிந்து, கழுதையும் பேயும் பூட்டப்பட்ட தேரில் ஏறி, சுற்றத்தார் எல்லோருடனும் ராவணன் தென்திசை நோக்கிச் சென்றான். மண்டோதரியின் கூந்தல், தீப்பிடித்து எரிந்தது’’ என்கிறாள் திரிசடை.

ராவணனுக்கு வரக்கூடிய அமங்கலங்களின் தீக்குறிகள் அப்படியே, திரிசடையின் வார்த்தைகளில் வெளிப்படுகின் றன. தொடர்கிறாள் திரிசடை. ‘‘இன்னும் கேள்! தேவி! ஒரு காடு. அக்காடு முழுதும் மதம் பிடித்த யானைகளின் கூட்டம். அந்த இடத்திற்கு இரண்டு சிங்கங்களின் தலைமையில் ஒரு புலிக் கூட்டம் வந்து, அங்கிருந்த யானைகள் அனைத்தையும் கொன்று விட்டன. யானைகளின் நடுவில் இருந்த ஒருமயில் புறப்பட்டு, சிங்கங்களிடம் போய்ச் சேர்ந்தது’’ என்றாள் திரிசடை.

வரம்பிலா மதகரி உறையும் அவ்வனம்
நிரம்புற வளைந்தன நெருங்கி நேர்ந்தன
குரம்பறு பிணம்படக் கொன்ற மாறிலாப்
புரம்புக இருந்ததோர் மயிலும் போயதால்

இலங்கையில் இருக்கும் இரக்கமற்ற அரக்கர்கள் எனும் யானைக்கூட்டத்தை, இரு சிங்கங்களான ராம-லட்சுமணர்களின் தலைமையில், புலிக் கூட்டமான வானரப் படைகள் வந்து அழித்தன. அங்கிருந்த சீதையெனும் மயில் தப்பி, ராம - லட்சுமணர்களுடன் போய்ச் சேர்ந்தது என்பதே திரிசடை கண்ட கனவின் விளக்கம். பின்னால், ராவணன் முதலானவர்களுக்கு நேரப் போவதையும். சீதாதேவியின் விடுதலையையும் கனவில் கண்ட படி, அப்படியே விவரித்திருக்கிறாள் திரிசடை. அது மட்டும் அல்ல! கனவின் மீதியையும் விவரித்தாள் திரிசடை.

“ஆயிரம் திரு விளக்குகளை ஏற்றி வைத்ததைப்போல, ஒருசிவப்பு விளக்கைக் கையில் ஏந்தியபடித் திருமகள், என் பெரிய தந்தை (ராவணன்) மாளிகையை விட்டு, என் தந்தையின் மாளிகைக்குப் போனதாகவும் கண்டேன்” என்றாள். இலங்கையின் ராஜ்ஜிய லட்சுமி, ராவணனை விட்டு விலகி, விபீஷணரிடம் செல்லப்போகிறாள் என்பது, திரிசடையின் கனவில் வெளிப்பட்ட நிகழ்வு இது. சீதைக்கு இவ்வாறெல்லாம் ஆறுதலும் ஊக்கமும் அளித்த திரிசடை,இதைவிட இக்கட்டான நேரத்தில் சீதைக்குச் சொன்ன தகவல்கள் மிகமிக அற்புதம். இதுவரை பார்த்தவை, சுந்தர காண்டத்தில் நடந்த நிகழ்வுகள்.

இனி பார்க்கக் கூடியவை, யுத்த காண்ட நிகழ்வுகள். சுந்தர காண்டத்தில் திரிசடை சீதைக்கு ஆறுதல் சொன்ன நிகழ்வுகள், அசோகவனத்தில் தரையில் நடந்தவை. அதே திரிசடை, சீதைக்கு மறுமுறை ஆறுதல் சொல்லித் தைரியம் ஊட்டியது, ஆகாயத்தில். அந்த நிகழ்வில் ராவணனின் நுண்ணிய அறிவும்; அதையும் மீறிய திரிசடையின் அறிவாற்றலும் வெளிப்படுகின்றன. போர்க்களத்தில், இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை வீசி, அதன்மூலம் லட்சுமணன் முதலான அனைவரையும் வீழ்த்தி விடுகிறான்.

அஸ்திர பூஜை முடித்துக் களத்திற்கு வந்த ராமர், களத்தில் வீழ்ந்து கிடந்தவர்களைக்கண்டு பலவாறு புலம்பி, லட்சுமணனுடைய பணிவிடைகள் ஒவ்வொன்றையும் நினைத்து, வாய்விட்டுச் சொல்லிப் புலம்பி, துயரம் தாளாமல் மூர்ச்சையாகி அப்படியே லட்சுமணன் மீது விழுந்துவிடுகின்றார். அந்த நேரத்தில் வந்த ராவண தூதர்கள், ராமரும் இறந்து விட்டாரென்று தவறாக எண்ணி, அப்படியேபோய் ராவணனிடம் சொல்லி விடுகிறார்கள்; ‘‘இளவரசர் எய்த பிரம்மாஸ்திரத்தால் லட்சுமணன் உயிரிழக்க, அதைத் தாங்க முடியாத ராமனும் இறந்தான். மன்னா! உங்கள் பகை முடிந்து போனது’’ என்கிறார்கள்.
      
பின் வந்தவன் உயிரிழந்த பிழையை நோக்கி
முன் வந்தவன் முடிந்தனன் உன்பகை போய் முடிந்தது
- கம்பராமாயணம்

அதைக்கேட்ட ராவணன், மகிழ்ச்சியில் ஆழ்ந்தான்; உடனே மருத்தனைக் கூப்பிட்டு, ‘‘நீ போய், போர்க்களத்தில் இறந்து கிடக்கும் அரக்கர்களின் உடல்களை எல்லாம் எடுத்துக்கடலில் போட்டு விடு! யாருக்கும் தெரியக் கூடாது. சொன்னால், உன்னை ஒழித்து விடுவேன்’’ என்றான். ராவணன் இவ்வளவு தெளிவாகத் தீர்மானிக்கக் காரணம் என்ன? இறந்து கிடப்பதாகத் தான் தீர்மானிக்கும் ராம- லட்சுமணர்களை, சீதையின் பார்வையில் படும்படியாகக் காட்டப் போகிறான்; அப்போது இறந்துபோய்க் கிடக்கும் அரக்கர்க ளின் உடல்கள் சீதையின் பார்வையில் படக்கூாது என்பதே, ராவணனின் எண்ணம்.

இவ்வளவு தெளிவாகத் திட்டம் போடத் தெரிந்த ராவணனுக்கு, சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்பது தெரியவில்லையே! சரி! சரி! ராவணன் திட்டம் பலித்ததா? அரக்கியர் புடை சூழ சீதையை விமானத்தில் ஏற்றி, போர்க்களத்தில் கீழே விழுந்து கிடக்கும் ராம-லட்சுமணர்களைக் காட்ட, ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போர்க்களத்தில் கீழே விழுந்து கிடக்கும் ராம-லட்சுமணர்களைக் கண்டதும், அரக்கியர் சூழ விமானத்தில் இருந்த சீதை கதறினாள். தான் பட்ட துயரங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி கதறினாள். கடைசியில், கீழே கிடக்கும் ராமன், திருமேனியில் விழுந்து இறப்பேன் என்று சீதை முயன்ற போது, தடுக்கிறாள், திரிசடை. இந்த இடத்தில் கம்பர், அற்புதமான ஒரு புதுப் பெயரை திரிசடைக்குச் சூட்டுகிறார்; ‘‘ முற்பிறப்பிலே சீதாப்பிராட்டி தேடிவைத்த தவம் போன்ற திரிசடை’’ என்பது கம்பர் வாக்கு.
           
தேடிய தவமேயன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள்
- கம்ப ராமாயணம்

சீதாதேவியைச் சுற்றியிருந்த அரக்கியர்களை எல்லாம் விலக்கிய திரிசடை, சீதையின் காதோடு காதாகச் சொல்லத் தொடங்குகிறாள். அவள் பேச்சில் சீதை சொல்லி அழுத தகவல்களுக்கு எல்லாம் விடைகள் இருந்தன. ‘‘சீதையே! மாரீசன் எனும் மாய மானை விடுத்தது, மாயா சனகனைக் காட்டிப் பேச வைத்து உன்னை ஏமாற்ற முயன்றது, பிணித்த நாகபாசம் விலகிப் போனது ஆகியவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்காமல், நீ இறக்க நினைக்கலாமா? தீய வழியில் செல்லும் அரக்கர்களின் மாயங்களைச் சிறிதும் உணராதவளாக இருக்கிறாயே!

நான் கண்ட கனவுகளும், உனக்கு வந்த நல் நிமித்தங்களும், உன் பதிவிரதாத் தன்மையையும் தருமத்தை நிலை நாட்டுவதற்காக அவதரித்துள்ள ஸ்ரீராமரின் வீரத்தன்மை யையும் மறக்காதே! செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களை உடைய ஸ்ரீராமருக்கு, தீயவர்களான இந்த அரக்கர் கையால் முடிவு உண்டாகுமா? ஸ்ரீராமரின் திருமேனியில் அம்புக்காயங்கள் இல்லை. லட்சுமணன் முகத்தில், பிரேதக் களையின் சாயலே இல்லை. நன்றாகப் பார்! அவர்கள் இருவரும் உயிருடன்தான் இருக்கிறார்கள். உத்தமர்களான அவர்களுக்குத் தீங்குவராது.

பூமா தேவியின் மகளே! மயங்காதே! “ஸ்ரீராமருக்கு ஆபத்து வந்தால், உலகம் தாங்குமா? சூரியன்தான் இயங்குமா? தேவி ! என் கண்களால் நான் காணும் மற்றவற்றையும் சொல்கிறேன் கேள்! அதோ! தேவர்களெல்லாம் கைகளைத் தலைக்குமேல் கூப்பி,பக்தி பூர்வமாகத் தரிசிக்கிறார்கள் ஸ்ரீராமரை. அந்தத் தேவர்கள் முகத்தில் சிறிதும் வருத்தம் இல்லை. ஸ்ரீராமருக்கு ஆபத்து என்றால், தேவர்கள் இப்படி இருப்பார்களா?” bஎன்றெல்லாம் பேசி ஆறுதல் சொல்லி வந்த திரிசடை, முத்தாய்ப்பாக ஒன்று சொல்லத் தொடங்குகிறாள்.

‘‘தேவி ! கணவர் இறந்து (அதன் காரணமாக) மங்கல நாண் இழந்தவர்களை, தெய்வத் தன்மையுள்ள இந்த விமானம் தாங்காது. (இப்போது உன்னைத் தாங்கி இருப்பதால், உன் கணவரான ஸ்ரீராமர் இறக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்!) இதுவரை நான் சொன்னவையெல்லாம் உண்மை. ஆராய்ந்து தெளிவை அடை! துயரப்படாதே!” என்கிறாள் திரிசடை. அப்பப்பா! துயரத்தில் உள்ள ஒருவருக்கு, எந்தெந்த விதங்களில் எல்லாம் உண்மையைச் சொல்லி, ஆறுதல் ஊட்ட முடியுமோ, அவ்வளவு செயல்களையும் திரிசடையின் செயல்களிலும் வாக்கிலும் காணலாம்.

மங்கல நீங்கினாரை ஆருயிர் வாங்கினாரை  
நங்கையிக் கடவுள் மானந் தாங்குறு
நவையிற்றன்றால்
இங்கிவை அளவையாக இடர்க்கடல்
கடத்தியென்றாள்
சங்கையள் ஆய தையல் சிறிதுயிர் தரிப்பதானாள்.
- கம்ப ராமாயணம்

திரிசடையின் ஆத்மார்த்தமான வார்த்தைகளிலுள்ள உண்மையை உணர்ந்த சீதை உயிர்விடும் முயற்சியைக் கை விட்டாள். அது மட்டுமல்ல! திரிசடையிடம் மனம் திறந்து பேசவும் செய்கிறாள் சீதை.

அன்னை, நீ உரைத்த தொன்றும் அழிந்திலதாதலாலே
உன்னையே தெய்வமாக் கொண்டித்தனை காலமுய்ந்தேன்
இன்னம் இவ்விரவுமுற்றும் இருக்கின்றேன் என்பால் முன்னமே
முடிந்ததன்றே என்றனள் முளரி நீத்தாள்.
- கம்ப ராமாயணம்

சீதையின் வாக்காக அமைந்த இப்பாடல், திரிசடையைப் பற்றிய சீதையின் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறது. திரிசடையிடம் தேவி பேசுகிறாள். கேட்கலாம் வாருங்கள்! ‘‘தாயே! இதுவரையிலும் நீ சொன்னது எதுவும் பழுதாக வில்லை. ஆகையால் உன்னையே தெய்வமாக நினைத்து, இத்தனை காலம் உயிர் வாழ்ந்தேன். இன்னும் இந்த இரவு முடியுமட்டும் உயிரை வைத்திருக்கிறேன். இறத்தல் என்பது என் விஷயத்தில் முன்னமே முடிந்துபோய் விட்டது’’ என்கிறாள் சீதை.

திரிசடையை அன்னையாகவும் தெய்வமாகவும் கொண்டிருக்கிறாளாம் சீதை. இறப்பையே தவிர்த்த திரிசடைக்கு, சீதாதேவீ சூட்டிய நாமங்களை விவரித்த கம்பர், சீதை யார்? என்பதையும்சொல்லிப் பாடலை நிறைவு செய்கிறார். ‘தாமரை மலரை விட்டு ஜனகன் மகளாக வந்து அவதரித்த சீதை’ என்கிறார். லட்சுமியான சீதா தேவீ, இத்துடன் நிறுத்தவில்லை. போர் முடிந்து அயோத்திக்குப் புறப்படும்போது, ‘‘நீ சிறிதும் துன்பமின்றி, இந்த இலங்கைக்குத் தெய்வப்பெண் போல் இருப்பாயாக’’ என்று வாழ்த்தினாள் சீதை.

ஓர் இடரின்றி இலங்கைக்கு அணங்குதான் என இருத்தி
- கம்ப ராமாயணம்

நற்குணங்களையே மூலதனமாகக்கொண்ட குடும்பத்தில் பிறந்து, துயரத்திலிருந்த சீதாதேவிக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னதோடு சீதாதேவிக்கு உண்மையை உணர்த்தி சீதையின் உயிரைக் காத்து, சீதாதேவியாலேயே அன் னையென்றும் தெய்வமென்றும் போற்றிப் பாராட்டப்பட்ட திரிசடை ஓர் உன்னதமான  பாத்திரம். திரிசடை செய்ததைப்போல, கஷ்டத்தில் இருப்பவர்க்கு ஆறுதலாகச் சில வார்த்தைகளாவது சொல்லுவோம்! தீமைகளை வெல்லுவோம்!

பி.என்.பரசுராமன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?