×

லக்கி பாஸ்கர் விமர்சனம்

1992ல் மும்பை மகதா வங்கியில் அசிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜராக இருக்கும் பாஸ்கர் (துல்கர் சல்மான்), திடீரென்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். சம்பவம் 1989க்கு மாறுகிறது. கேஷியராக இருக்கும் பாஸ்கர், தனது மனைவி சுமதி (மீனாட்சி சவுத்ரி), மகன் கார்த்திக் (மாஸ்டர் ரித்விக்), தந்தை, தம்பி, தங்கையுடன் கூட்டுக்குடும்பமாக, மிடில் கிளாஸ் வாழ்க்கையை தொடர்கிறார். தனது குடும்ப அந்தஸ்தை உயர்த்த கடுமையாக உழைக்கும் பாஸ்கரை பொருளாதார கஷ்டங்களும், கடன் பிரச்னைகளும் கழுத்தைப் பிடித்து நெருக்குகின்றன.

அப்போது நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு மறுக்கப்பட்டு, அவரது நேர்மையை சந்தேகித்து குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் கொதிக்கும் பாஸ்கர், சட்டவிரோதமாக அதிக பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில், சிபிஐ பிடியில் இருந்து அவர் தப்பித்தாரா என்பது மீதி கதை. நரியின் தந்திரமும், ஓநாயின் புத்திசாலித்தனமும் கொண்ட கேரக்டரில் புகுந்து விளையாடி இருக்கிறார், துல்கர் சல்மான். மிடில் கிளாஸ் மக்களின் வருத்தத்தையும், ஆதங்கத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ள அவர், பணம் கிடைத்த பிறகு மாறும் திமிரையும், அலட்சியத்தையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சிபிஐ வளையத்தில் சிக்கி, அதிலிருந்து லாவகமாக மீண்டு வரும்போது வியக்க வைக்கிறார். குடும்பப்பாங்கான கேரக்டரில் மீனாட்சி சவுத்ரி ஆழமாகப் பதிகிறார். நண்பராக ஹைப்பர் ஆதிக், அந்தோணியாக ராம்கி, சிபிஐ அதிகாரியாக சாய் குமார் மற்றும் மாஸ்டர் ரித்விக், சச்சின் கடேகர், சுதா, டினு ஆனந்த் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். வங்கி மோசடிகளை அழுத்தமாகவும், சுவாரஸ்யமாகவும் கிரைம் திரில்லர் பாணியில் படமாக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு பாராட்டு.

1989 முதல் 1992 வரையிலான காலத்தை திரையில் இயல்பாகவும், நேர்த்தியாகவும் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவிக்கு கலை இயக்குனர் பங்லான் உதவியிருக்கிறார். பின்னணி இசையில் அழுத்தமான முத்திரை பதித்த ஜி.வி.பிரகாஷ் குமார், பாடல்களை கதைக்கேற்ப சிறப்பாக வழங்கியுள்ளார். வங்கி ஒன்றில் நடக்கும் தில்லுமுல்லுகள், பங்குச்சந்தை, ஹவாலா மணி லாண்டரிங் போன்ற சிக்கலான பொருளாதார விஷயங்கள் கையாளப்பட்டுள்ளன. 1992ல் வங்கியில் 100 கோடி ரூபாய் இருக்குமா என்பதும், துல்கர் சல்மானின் தில்லுமுல்லுகளை அவரது நண்பர் வட்டாரம் கண்டுபிடிக்காததும் நெருடுகிறது.

Tags : Bhaskar ,Dulquer Salmaan ,Mumbai ,Magada Bank ,CBI ,Sumathi ,Meenakshi Chaudhary ,Karthik ,Master… ,
× RELATED வெள்ளகோவில் அருகே கைத்தறி ரக...