×

இந்தியாவில் ஆண்டுக்கு 62 பில்லியன் டன் குப்பை: ஐநா சபையில் பேசிய மாணவி தகவல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூரை சேர்ந்தவர் சத்யா ஆனந்த் (21). இவர் திருச்சி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் சட்டம் இறுதியாண்டு முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்ய காத்திருக்கிறார். இவர் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான குழுவில் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சத்யா ஆனந்த் கூறியதாவது: ஐநா சுற்றுச்சூழல் சபையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான குழுவில் இடம் பெற உலக அளவில் 2,500 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்தியாவில் இருந்து 2 பேர் கலந்து கொண்டோம். 5வது ஐ.நா சுற்றுச்சூழல் சபை கூட்டத்திற்கான முன்னேற்பாடு கூட்டம் கடந்த பிப்.28ம் தேதி கென்யா தலைநகர் நைரோபியில் நடந்தது. அதனைத்தொடர்ந்து மார்ச் 1, 2ம் தேதிகளில் கூட்டம் நடந்தது. இதில் 198 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் சுற்றுச்சூழல் மாசுபடுதலில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை முற்றிலும் ஒழிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பயோ டி கிரேட் பிளாஸ்டிக் குறித்து விவாதிக்கப்பட்டது. சட்டம் சார்ந்து எனது விவாதம் இருந்தது. இதில் கடந்த 2016ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, பிளாஸ்டிக் பொருட்களை யார் தயார் செய்கிறார்களோ, அவர்கள் தான் அப்பொருளின் மறுசுழற்சி மற்றும் அழிவுக்கு பொறுப்பாகும்.  உற்பத்தியாளர்கள் சுற்றுச்சூழல், வனம் மற்றும் களநிலை அமைச்சகத்தில் பதிவு செய்வது கட்டாயம். இந்த நடவடிக்கைகள் தற்போது தான் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இதனை இன்னும் வேகப்படுத்த வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு 62 பில்லியன் டன் குப்பை சேகரமாகிறது. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் மூன்றரை டன். பிளாஸ்டிக்கால் பிரச்னை இல்லை. அதனை மறுசுழற்சி செய்வதில் தான் பிரச்னை. இதற்கு மாற்றாக பயோடிகிரேடபுள் (biodegradable waste) பிளாஸ்டிக் கொண்டு வந்தால் அதன் மக்கும் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பிளாஸ்டிக்கை ஒழிக்கும்போது உற்பத்தியாளர்கள், அதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதற்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவாதம் செய்யப்பட்டது. காலநிலை மாற்றத்துக்கு ஏற்றார்போல, ஒரு சர்வதேச ஒப்பந்தம் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வந்தால் வளர்ந்த, வளரும் நாடுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை தர உதவியாக இருக்கும். மேலும், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு நிதியுதவி ஆதாரம் தரும். 2 ஆண்டுகளில் இந்த ஒப்பந்தம் வர வாய்ப்புகள் உள்ளன. அனைத்து நாடுகளிலும் சட்டம் தான் எல்லாம். சட்டத்திற்கு மேல் எதுவும் இல்லை என உள்ளது. அது போல சுற்றுச்சூழலிலும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்….

The post இந்தியாவில் ஆண்டுக்கு 62 பில்லியன் டன் குப்பை: ஐநா சபையில் பேசிய மாணவி தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,UN ,Satya Anand ,Kotdaiyur ,Karaikudi ,Sivagangai district ,National Law University ,Trichy ,
× RELATED 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார...