×
Saravana Stores

சேவகர் விமர்சனம்

தனது நண்பர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார், பிரஜின். இதையடுத்து, ஊர் மக்களிடம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்து செல்வாக்கு அதிகரிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டு கோபப்படும் அமைச்சர் ‘ஆடுகளம்’ நரேன், அவரை அடக்க போலீசாரை வைத்து தொல்லை கொடுக்கிறார். அப்படியும் அடங்க மறுக்கும் பிரஜினைப் பழிவாங்க, போலீசாரை வைத்தே அவரது குடும்பத்துக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறார். தங்கையைச் சீண்டியதால் ஆவேசமடையும் பிரஜின், காவல்துறை அதிகாரியையும், மற்ற போலீசாரையும் சுட்டுக்கொல்கிறார்.

இதனால் அவரை சமூக விரோதி என்றும், தீவிரவாதி என்றும் பழிசுமத்தி ஓடவிடுகின்றனர். அவரைப் பிடிக்க போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட் வருகிறார். இந்நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் போலீசாரால் தேடப்படும் பிரஜின், தன்னை நிரபராதி என்று நிரூபித்து, அமைச்சருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா என்பது மீதி கதை. வேலைக்குச் செல்லாமல், ஊராரின் நலனே தனது நலன் என்று நினைத்து சமூகப் பணிகளில் ஈடுபடும் பிரஜின், அரசியல்வாதிகள் மற்றும் போலீசாருடன் ஆவேசமாக மோதி, படத்தில் தனது இருப்பை பலமாகப் பதிவு செய்துள்ளார்.

ஓரிரு காட்சிகளில் வரும் ஹீரோயின் சஹானாவுக்கு அதிக வேலையில்லை. நேர்மையான போலீஸ் அதிகாரியாக போஸ் வெங்கட், தில்லுமுல்லு அமைச்சராக ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர், தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். மற்ற கேரக்டர்களில் தோன்றும் அனைவரும் இயக்குனர் என்ன சொன்னாரோ அந்த மாதிரி நடித்துள்ளனர்.

குற்றாலத்தின் குளிர்ச்சியான, பசுமை யான அழகை ஒளிப்பதிவாளர் பிரதீப் நாயர் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். ஆர்.டி.மோகன் இசை அமைத்திருக்கிறார். பின்னணி இசை காட்சிகளுடன் இணைந்து பயணிக்கவில்லை. சந்தோஷ் கோபிநாத் எழுதி இயக்கியுள்ளார். நம் சமூகத்துக்கு நல்லது செய்ய நினைக்கும் இளைய தலைமுறையினரை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் துன்புறுத்தி மிரட்டுகிறது என்று சொன்ன அவர், டெக்னிக்கல் விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்திஇருந்தால், அவரது நோக்கம் முழுமையாக நிறைவேறியிருக்கும்.

Tags : Brajin ,Naren ,
× RELATED ஸ்ருதிஹாசனின் ஆங்கிலப் பாடலை கமல் வெளியிட்டார்