×

வழித்துணையாம் பெருந்தன்மை வல்லானே!

திருமூலர் மந்திர ரகசியம்

வழித்துணை! நூல்கள் பலவும் வழித்துணையைப்பற்றி, விரிவாகவே சொல்லியிருக்கின்றன. ‘துணையோடல்லது நெடுவழி போகேல்’ எனும் ஔவையின் வாக்கு தெரிந்தது தானே? வழித்துணை இல்லாமல் பயணம் மேற் கொள்ளக்கூடாது அந்த வழித்துணையும் நல்ல அறிவுள்ள துணையாக இருக்க வேண்டும்.  செல்வந்தர் ஒருவர், ஊர் ஊராகப் போய்ப் பணம் வசூல்  செய்து வருபவர்; ஒருசமயம், அவர் ஓர் ஊரிலிருந்து பணம் வசூல் செய்து கொண்டு திரும்பத்தொடங்கியபோது,  இருட்டத் தொடங்கி விட்டது; அவசரம் வேறு. ஆதலால் செல்வந்தர் அவ்வூரிலிருந்த ஒருவரை வழித்துணையாக வைத்துக் கொண்டு புறப்பட்டார். வழித்துணையாக வருபவருக்குக் கூலியாகக் கால் பொன், நாணயமும் கொடுத்தார் செல்வந்தர். அதை வாங்கிய வழித்துணைக்காரர்,தன் இடுப்பில் முடிந்து கொண்டார்.

இருவருமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். நள்ளிரவு தாண்டி,சற்று நேரமானது. ஒரு காட்டுப்பக்கமாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில், “அப்பா!வழித்துணைக்காரா! அந்த மேட்டுப்பக்கமா, கொஞ்சநேரம் படுத்திருந்து விட்டுப்போகலாம். வா! படு!” என்றார் செல்வந்தர். இருவருமாக வழிநடையை விட்டு விலகி, ஒதுக்குப் புறமாக மேடான ஒரு பகுதியில் படுத்தார்கள் தூங்கினார்கள். கொஞ்சநேரம் ஆனதும், தூங்கிக்கொண்டிருந்த வழிப்போக்கர், அப்படியே புரண்டு கீழே வழிநடைப் பாதைக்கு வந்து விட்டார்.  அந்தநேரத்தில், கள்வர் கூட்டம் ஒன்று அந்தவழியாக வந்தது. அதில் ஒருவர் காலில் வழியில் கிடந்தவர் பட்டார்.  உடனே அக்கள்வர், “ஏய்! பாத்து வாங்கப்பா! இங்க ஏதோ, கட்டை கெடக்குது” என்றார்.

அதற்குள் தூக்கம் கலைந்த  வழித்துணைக்காரர், “ என்னப்பா! என்னப்போயி கட்டைங்கிறியே! கட்டை  மடியில  கால்பவுனு காசு இருக்குமா?” என்று சத்தமாகப்பேசி  எடுத்துக்காட்டினார். கள்வர் தலைவர் அதிசயித்து, வழித்துணைக்காரரிடம்  இருந்து  கால் பவுன்காசை வாங்கிப் பார்த்தார். வழித்துணைக்காரர்,  “என்ன பாக்குற? செல்லுமா  செல்லாதான்னு  பாக்குறியா?  செல்லுஞ்  செல்லாததுக்கு, அங்க மேட்டுல ஒருத்தர் படுத்திருக்கார்.  
நெறய வெச்சிருக்கார். அவர்கிட்ட  வேணாக்கக் கேட்டுக்க!”  என்றார். பிறகென்ன? செல்வந்தர் கையிலிருந்த வசூல் பணம் எல்லாம்,கள்வர் வசமானது இலவச இணைப்பாக அடியும் உதையும் வேறு கிடைத்தன. வழித்துணை என்பது, நல்லதாக அமைய வேண்டும் , இல்லையேல், ஆபத்து தான்! இப்படிப்பட்ட வழித் துணையைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்? பார்க்கலாம்!

வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன்
கழித்துணையாம் கற்றிலாதவர் சிந்தை
ஒழித்துணையாம் உம்பராம் உலகேழும்
வழித்துணையாம் பெருந்தன்மை வல்லானே
(திருமந்திரம் - 297)

கருத்து: தெளிந்த நல்லறிவு பெற்றவர்கள், பிறவித்துயரைப் போக்கவல்ல துணையாக,  பிறவிப் பிணிக்கு  மருந்தாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களைத் துணையாகக் கொள்ளாதவர்கள், விலக்கி ஒதுக்கப்பட வேண்டியவர்களே. மனதை ஆக்கிரமித்துப் பிடித்திருக்கும், மன இருளை அழிக்க வல்லவரும்; வானுலகம் உட்பட அனைத்துலகங்களும் வணங்கி வழிபடும் பெருமைக்குரிய பேரறிவாளனுமாகிய இறைவனே, வழித்துணையாக இருப்பவர்! துணையாக அமைபவர், நல்ல துணையாக  அமைய வேண்டும். தெய்வம் தேடிவரும்.  நல்லவைகள் எல்லாம் தாமாகவே அணிவகுத்து வந்து சேரும். உதாரணம், ஆஞ்சநேயர் சூரியபகவானிடம், அனைத்துக் கலைகளையும் கற்றார்; கற்று முடித்ததும் குருதட்சணை கொடுக்க முன் வந்தார்.

சூரியபகவான் மறுத்தார். ஆஞ்சநேயர் விடவில்லை, “குருதட்சணை கொடுக்காவிட்டால், தங்களிடம் அடியேன் கற்ற கலைகள் பலனளிக்காது. ஆகையால் தயவுசெய்து தாங்கள், குருதட்சணை பெற்றுக் கொள்ளத் தான் வேண்டும்” என்று நிர்ப்பந்தித்தார். சூரியபகவான் ஒப்புக் கொண்டார்; “அப்படியென்றால் , ஒன்று செய்!என் மகன் சுக்கிரீவனுக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்! அதுவே உன் குருதட்சணையாக இருக்கட்டும்” என்றார்.

அதன்படியே ஆஞ்சநேயர், சுக்கிரீவனுக்கு உறுதுணையாக இருந்தார். மனைவியை இழந்து, எந்தவிதமான வசதியும் இன்றி, காட்டிலும் மலைமேட்டிலும் படாதபாடு பட்டுத்தவித்துக் கொண்டிருந்த சுக்கிரீவன், ஆஞ்சநேயர் அருந்துணையால், இழந்த அனைத்தையும் திரும்பப்பெற்றார். அதே சமயம்,  வேதங்களில் வல்லவர், கைலாச மலையையே அசைத்தவர், மாபெரும் வீரனை மகனாகப் பெற்றவர், தலைசிறந்த கற்புக்கரசியை மனைவியாகப் பெற்றவர், திசை யானைகளோடு பொருது வென்றவர் எனப்பலவிதப் பெருமைகளைப் பெற்றிருந்தும் - ராவணன் நல்ல உறு துணை அமையாததால், அனைத்தையும் இழந்தார்.

ஆகையால் உறுதுணை என்பது மிகவும் அவசியம். அதுவும் அறிவுள்ள துணையாக அமைவது மிக முக்கியம். துணையாய் அமைவதும் தெளிவு பெற்றதாக இருக்க வேண்டும்; மருந்தாக இருந்து மனமயக்கத்தைத் தீர்க்க வேண்டும்.  இதை அழுத்தந்திருத்தமாக உணர்த்துவதற்காகவே, ‘வழித்துணையாய் மருந்தாய்’ என்றார் திருமூலர். அப்படிப்பட்ட அருந்துணையை, துணையாகக் கொள்ளாதவர்கள், ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்பது திருமூலர் வாக்கு.

ஞானிகள் பலரும், சொன்னதும் இதுவே.
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதும் நன்றே

- என ஔவையார் கூறியதும் இதுவே. இதையே, ‘உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என மற்றொரு விதமாகச்சொல்வார் வள்ளலார்.  இதை அறியாதவர்களைத் துணையாகக் கொள்ள கூடாது என்கிறார் திருமூலர். அப்படியென்றால், துணையாகக்கொள்ள வேண்டியது யாரை? அதையும் சொல்கிறார் திருமூலர்.‘‘இறைவனைத் துணையாகக் கொள்ளுங்கள்’’ என்கிறார்

திருமூலர்,  இவ்வாறு சொன்ன திருமூலர் இறைவனின் தன்மைகளை விவரிக்கிறார் மேலும்  மன இருளை நீக்கும் வலிமை படைத்தவராம் இறைவன். உண்மை தானே! நமக்குத் துணையாக யார் வந்தாலும், அவர்கள் நமக்கு வழித்துணையாக - உறுதுணையாக இருக்கலாமே தவிர, நம் மன இருளை நீக்கக் கூடியவர்களாக இருப்பார்கள் அவர்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஆனால் இறைவனோ? நம் மன இருளை நீக்கும் வலிமை பெற்றவர், தேவாதி தேவர்களும்  வணங்கும் புகழ்பெற்றவர், பேரறிவாளர், ஆகையால் அப்படிப்பட்ட இறைவனை வணங்குங்கள்! வழித்துணையாகக் கொள்ளுங்கள்! என்கிறார் திருமூலர். இது ஏதோ, வழித்துணையாக என்பது மட்டும் பொருளல்ல! வாழ்க்கை எனும் பயணத்தில் வழித்துணையாகக் கொள்ள வேண்டும் என்பது பொருள்.

இதை உணர்த்துவதே கல்வி இதை உணர்வதுவே கல்வி. அதைச் சொல்லி, மேலும் நம் மனதில் பதிய வைக்க முயல்கிறார் திருமூலர். அக் கல்வியைத் தான் பெற்றது எப்படி  என்கின்ற விவரங்களையும் விவரிக்கிறார் அடுத்த பாடலில் !

அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம்  கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம்   கேட்டும் பொன்னுரை மேனி எம் ஈசன்
திறம்  கேட்டும் பெற்ற சிவகதி தானே
(திருமந்திரம் - 300)

கருத்து: அறங்கள் கூறும் நல் உபதேசங்களைக் கேட்டும், அறிவிற்சிறந்த பெரியோர்கள் கூறும் புத்திமதிகளைக்  கேட்டும், நல்லது எது - தீயது எது - எவையெல்லாம் செய்வது பாவம் என்பதைக் கேட்டும், தேவர்களின் மந்திர மொழிகளைக் கேட்டும், இவற்றிற்கெல்லாம் அயலாக உள்ளவைகளைக் கேட்டும்  எல்லாவற்றிற்கும் மேலாகப் பொன்போலும் திருமேனி கொண்ட - சிவபெருமானின் பேரருள் திறத்தை அறிந்து கொண்டவர்க்கே சிவகதி கிட்டும்.

அப்பப்பா! எவ்வளவு கேட்டிருக்கிறார்! கேள்வி ஞானத்திற்குத் திருமூலர், முக்கியத்துவம் கொடுத்த பாடல் இது திருமூலர் முதலில் சொல்வது, ‘அறம் கேட்டும்’. ஆம்! கண்டதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நாம், முதலில் நல்லவைகளைக் கேட்க வேண்டுமாம், திருமூலர் சொல்கிறார். நல்லவைகளைக்  கேட்கக் கேட்க, கெட்டவைகளைக் கேட்பது குறையும். காலகட்டத்தில், கெட்டவைகளைக் கேட்பது முழுவதுமாக விலகிப்போய் விடும். பிறகென்ன? இதே தகவலைத் திருவள்ளுவரும் சொல்கிறார்.

 ‘எனைத்தானும் நல்லவை கேட், அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்’  என்கிறார். சிறிதளவாவது  நல்லவைகளைக் கேட்க வேண்டும். அந்த அளவிற்கு அது மிகவும் பெருமையைத் தரும் என்பது, அக்குறளின் கருத்து.  நல்லவைகளைக் கேட்கலாம் சரி! அதை யாரிடம் கேட்க வேண்டும்? ‘‘திருடுவது மாபெரும் தவறு’’ என்று, திருடன் சொன்னால், செல்லுபடியாகுமா? எடுபடுமா? பிறகு? நல்லவைகளைச் சொல்பவரும் நல்லவராக இருக்க வேண்டுமல்லவா?

‘அந்தணர் வாய் மொழி கேட்டும்’ என்கிறார் திருமூலர். திருமூலரின் இச்சொற்கள், பிறப்பை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டதல்ல. இதற்கு விளக்கம் அல்லது விரிவுரை காண வேண்டுமானால், வழக்கப்படி வள்ளுவரிடம் தான் போக வேண்டும். வாகனம் ஓட்டினால் ‘ஓட்டுனர்’ நீதிமன்றத்தில் வாதாடினால் ‘வக்கீல் ‘ நீதிமன்றத்தில்  தீர்ப்பு சொல்பவர் ‘நீதிபதி ’  இவ்வாறு, அவரவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு அவரவரைச் சொல்கிறோமல்லவா? அதுபோல, எல்லா உயிர்களின் மீதும் தூய்மையான அருள்கொண்டு, அறம் செய்பவர் ‘அந்தணர்’ எனப்படுவர். இக்கருத்தைச் சொல்லும் திருக்குறள். ‘அந்தணர் என்போர் அறவோர், மற்றவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்’.

 இப்படிப்பட்ட தூய்மையான அருள் உள்ளம் கொண்டவர்கள் சொல்லும், அறிவுரைகளை/அறவுரைகளைக் கேட்க வேண்டும். பிறகு? நல்லது எது? தீயது எது? எவற்றையெல்லாம் செய்தால் பாவம் வரும்? - என்பவற்றைக் கேட்க வேண்டும்.    அப்போது தான்,தீமைகளில் இருந்து விலகி நிற்கமுடியும். அதன்பின் மந்திரங்களைக் கேட்க வேண்டும். மந்திரங்கள் என்பவை, மறைமொழிகள். நல்வாழ்விற்கு வழி காட்டுபவை.

நன்மை தீமைகளை உணர்த்தி, நன்மைகளில் செயல்பட வைப்பவை. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், மறைமொழிகள் என்பவை, வாழ்க்கையின் ‘சட்ட நூல்கள்’. அப்படிப்பட்ட மறைமொழிகளைக்  கேட்க வேண்டும். அடுத்து ? உலக அனுபவங்களைக் கேட்டு உணர வேண்டும். அடுத்து, சிவந்த திருமேனி கொண்ட சிவபெருமானின் பேரருள் திறத்தைக் கேட்க வேண்டும். அதாவது, தெய்வம் நமக்குத்  திருவருள் புரிவதைக் கேட்டு, உணர வேண்டும். இவ்வளவு தகவல்களை சொன்ன திருமூலர், தன் அனுபவத்தைச் சொல்லிப் பாடலை நிறைவு செய்கிறார்.‘பெற்ற சிவகதி தானே’.

ஆம்! சித்த புருஷர்களிலேயே, அருந்தமிழில் ஏராளமான பாடல்களை எழுதி, நமக்கு வழிகாட்டிய திருமூலர், தம் சொந்த அனுபவங்களையே பாடல்களாகப்பாடி அளித்துள்ளார். அவைகளை உணர்ந்து, இயன்ற வரை அனுபவத்தில் கொண்டு வந்து, வாழ்வில் உயர வேண்டியது நமது பொறுப்பு. அறிவோம்! உணர்வோம்! உயர்வோம்!
 
பி.என் பரசுராமன்

(நிறைந்தது)

Tags :
× RELATED சுந்தர வேடம்