சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ‘கூலி’ என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த 2 படங்களில் இருந்து திடீரென்று விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டகோயிட்: எ லவ் ஸ்டோரி’ என்ற பான் இந்தியா படத்தில் ஒப்பந்தமாகி இருந்த ஸ்ருதிஹாசன், தனது கதாபாத்திரம் சம்பந்தமாக படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, இப்படத்தில் இருந்து தானாகவே விலகிவிட்டார். அதுபோல், ஆங்கில எழுத்தாளர் திமேரி என்.முராரி எழுதிய ‘அரேஞ்மெண்ட் ஆஃப் லவ்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஆங்கிலப் படத்தில் இருந்தும் ஸ்ருதிஹாசன் தானாகவே விலகிவிட்டார். ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் இதில், முதலில் சமந்தா ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், திடீரென்று அவருக்கு கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டதால் விலகிவிட்டார். அடுத்து ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அவரும் தனக்கு கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக சொல்லி விலகிவிட்டார்.