×

ஊட்டி அருகே தும்மனட்டி செல்லும் சாலையில் பட்டர் கொம்பையில் தடையை மீறி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

ஊட்டி : ஊட்டி அருகே தும்மனட்டி செல்லும் சாலையில் பட்டர்கொம்பை பகுதியில் தடையை மீறி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நீலகிரி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பேரிடர் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஜேசிபி., பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்களை கொண்டு மலையை குடைவது, பாதை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாறைகள் வெடி வைத்து உடைப்பதற்கும் தடை உள்ளது. இதுதவிர சரிவான பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடையை மீறி இப்பணிகளை மேற்கொள்பவர்கள் மீது வருவாய்த்துைற மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பேரிடர் அபாயமுள்ள பகுதிகளில் தடை விதிக்கப்பட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு வரை ஆழ்துளை கிணறு அமைக்க எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரிக் லாரிகள் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சுற்றுசூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டது.வருவாய்த்துைறயினரும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் ஊட்டி அருகே தும்மனட்டி செல்லும் சாலையில் பட்டர்கொம்பை அருகே எம்ஜிஆர்., காலனி செல்லும் பாதையில் தேயிலை தோட்டத்தை ஒட்டி தனியார் இடத்தில் தடையை மீறி ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று அதிகாலை முதலே நடைபெற்று வருகிறது. ரிக் வாகனம் சத்தம் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது. நீலகிரியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி வர வேண்டும் என்றால் சமவெளி பகுதியில் இருந்து தான் குன்னூர் அல்லது கோத்தகிரி வழியாகவே வர வேண்டும். இந்நிலையில் தற்போது தும்மனட்டி பகுதியில் போர்வெல் அமைக்கப்பட்டு வரும் நிலையில், லாரி ஊட்டிக்கு வரும் வரை அதிகாரிகளிடம் சிக்காமல் போனது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல் ஊட்டி நகரத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் அதிகரட்டி கோலனிமட்டம் பகுதிகளில் தடையை மீறி பாறைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. இவற்றையும் வருவாய்த்துைறயினர் கண்டும் காணாமலும் உள்ளனர். எனவே பேரிடர் பாதிப்புகள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு விதிமீறல்கள் தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது….

The post ஊட்டி அருகே தும்மனட்டி செல்லும் சாலையில் பட்டர் கொம்பையில் தடையை மீறி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Tummanati ,Ooty ,Battarkombai ,
× RELATED கடந்த ஒரு வாரத்திற்கு பின்பு ஊட்டி...