×

ஆனந்தூரில் கழிவுநீரால் மாசடைந்த பெரிய ஊரணி-தண்ணீரை வெளியேற்ற கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆனந்தூரின் மையப்பகுதியில் உள்ள பெரிய ஊரணியில் மாசடைந்த தண்ணீரை வெளியேற்றிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் கிராமத்தின் ஊரின் நடுவில் பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த பெரிய ஊரணி என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை ஆனந்தூர் மற்றும் அருகேயுள்ள கிராம மக்களும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூய்வாராமலும், பராமரிப்பின்றி உள்ளது. குளத்தில் உள்ள தண்ணீரில் ஏற்கனவே சாக்கடை நீர் கலந்து குப்பையால் மாசடைந்து காணப்படுகிறது. கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக சரியான மழை இல்லாமல் ஊரணியில் தண்ணீர் தேங்காமல் போய் விட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் டேங்கர்கள் மூலமாக விற்பனைக்கு வந்த தண்ணீரை ஒரு குடம் தண்ணீர் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் இந்த ஊரணி நிரம்பியுள்ளது. ஆனால் நிரம்பி இருந்தாலும் பயன்படுத்த முடியாத  நிலைக்கு தண்ணீர் மாறியுள்ளது. முள்வேலி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளதால் காற்றில் பாலிதீன் கவர்களும், குப்பை கூழங்கள் உள்ளிட்டவை ஊரணிக்குள் சென்று தண்ணீர் மாசடைந்து வருகிறது. ஊரணியின் மேல் பகுதியில் ஊராட்சி தலைவரின் சொந்த செலவில் சுமார் 100 அடிக்கு மேல் முள்வேலி அமைத்துள்ளார்கள். அதே போல் எஞ்சிய மற்ற பகுதிகளிலும் முள்வேலி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். தற்போது ஊரணியில் உள்ள தண்ணீரை  பயன்படுத்தினால் நோய் தொற்று ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்  பொது மக்கள் தண்ணீரை பயன்படுத்தாமல் தவிர்த்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்கள் மூலமாக ஊரணி தண்ணீரில் மிதந்து வந்த பாலிதீன் கவர்கள், பாட்டில்கள், மற்றும் அடர்ந்து காணப்பட்ட புல், புதர்கள் ஆகியவற்றை அகற்றினர். ஆனால் மீண்டும் காற்றில் பறந்து வரும் பாலிதீன் கவர்கள் மற்றும் பாட்டில்கள் உள்ளிட்டவையும், புல் புதர்களும் சேர்ந்து ஊரணியில் உள்ள தண்ணீர் மாசடைந்து வருகிறது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி மழை காலம் வருவதற்கு முன்பாக அந்த ஊரணியில் மாசடைந்து உள்ள தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஆனந்தூரில் கழிவுநீரால் மாசடைந்த பெரிய ஊரணி-தண்ணீரை வெளியேற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : anandur ,Mangalam ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு