×

பரமத்திவேலூர் அருகே வீடுகளை இடித்து ஆக்கிரமிப்பு அகற்றம்-எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்

பரமத்திவேலூர் : பரமத்திவேலூர் அருகே சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள், நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டன. வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையோர புறம்போக்கு நிலத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், சாலையோர புறம்போக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை அகற்றக்கோரி, நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், சாலையோர புறம்போக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டது. 10 ஆண்டுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஜூலை 11ம் தேதிக்குள்(நேற்று) வீடுகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, அப்பகுதியில் வசிப்பவர்களிடம் ஒரு வாரத்திற்குள் வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கினர். இதனை கண்டித்தும், மாற்று இடம் ஒதுக்கி தர வலியுறுத்தியும், கடந்த 9ம் தேதி குடியிருப்புவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வீடுகளை காலி செய்ய மறுத்து அங்கேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் ேநற்று காலை, வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் போலீசாரின் உதவியுடன், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கதறி துடித்தவாறு வீடுகளை காலி செய்ய அவகாசம் கேட்டனர். ஆனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் கட்டாயத்தில் உள்ளதால், அவகாசம் கொடுக்க முடியாது எனக்கூறி பொக்லைன் கொண்டு அதிகாரிகள் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியைச்சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்று வீடுகளை காலி செய்ய அவகாசம் கேட்டு கண்ணீர் மல்க மனு அளித்தனர். …

The post பரமத்திவேலூர் அருகே வீடுகளை இடித்து ஆக்கிரமிப்பு அகற்றம்-எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Paramativelur ,Paramativelore ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்