×

பிரசித்தி பெற்ற கோயில் பூட்டை உடைத்து அம்மன் கிரீடம் உட்பட 12.5 கிலோ வெள்ளி திருட்டு-பட்டப்பகலில் மர்ம ஆசாமி துணிகரம்

திருமலை : அனந்தபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அம்மன் கிரீடம் உட்பட 12.5 கிலோ வெள்ளி ஆபரணங்களை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் உரவகொண்டா மலைநகரில் பிரசித்தி பெற்ற உரகாத்ரி சவுடேஸ்வரிதேவி கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் பூசாரிகள் கோயிலில் பூஜை செய்து விட்டு மதியம் 12 மணியளவில் நடை அடைத்து விட்டு சென்றனர்.மாலை 4 மணியளவில் கோயிலுக்கு மீண்டும் வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கோயில் கருவறையின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், அம்மன் தலையில் அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி கிரீடம், கழுத்தில் இருந்த ஆபரணங்கள் என மொத்தம் 12.5 கிலோ வெள்ளி நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.இதுகுறித்து பூசாரிகள் உரவகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், மர்மநபர் ஒருவர் கோயிலுக்குள் சென்று நகைகளை திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து அம்மன் அணிந்திருந்த நகைகளை திருடிச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மஆசாமி 12.5 வெள்ளியை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post பிரசித்தி பெற்ற கோயில் பூட்டை உடைத்து அம்மன் கிரீடம் உட்பட 12.5 கிலோ வெள்ளி திருட்டு-பட்டப்பகலில் மர்ம ஆசாமி துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Ananthapuram district ,
× RELATED வேங்கடவனை நினைக்க வினைகள் அகலும்!