×

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பினர் மோதல் அதிமுகவினர் 400 பேர் மீது வழக்கு: 14 பேர் சிறையில் அடைப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே நடந்த மோதல் தொடர்பாக 400 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் வருவதை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், தி.நகர் சத்தியா, வேளச்சேரி அசோக், கந்தன், விருகை ரவி, இளைஞர் அணி மாநில இணை செயலாளர் டாக்டர் சுனில் ஆகியோரது தலைமையில் தொண்டர்கள் குவிக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து புறப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் எம்.எம்.பாபு தலைமையிலான ஆதரவாளர்கள் சிலர் அதிமுக அலுவலகம் வந்தனர். அவர்களை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் விரட்டி, விரட்டி அடித்தனர். கற்களாலும் தாக்கினர். அதில் பாபு உள்பட பலர் காயமடைந்தனர்.இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது வேனில் வந்தார். அவரது வேன் மீதும் கல் வீசப்பட்டன. அவருடன் வந்தவர்கள் மீதும் கல் வீசப்பட்டது. இதனால் அவர் வாகனம் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கட்சி அலுவலகம் வந்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல், செங்கல் மூலம் தாக்கிக் கொண்டனர். உருட்டுக் கட்டைகள், இரும்பு கம்பிகளாலும் தாக்கினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார், இரு தரப்பினரையும் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அவர்கள் சிதறி ஓடினர்.அதன்பின்னர்தான் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்குள் சென்றார். பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் வருவதை தடுப்பதற்காகத்தான் தொண்டர்களும், ரவுடிகளும் குவிக்கப்பட்டிருந்தனர். முன் கூட்டியே தகவல் சொன்ன பிறகும் கட்சி அலுவலகத்தை பூட்டி வைத்திருந்தனர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். அதேநேரத்தில் கட்சி அலுவலகத்தில் கொள்ளையடிப்பதற்காகத்தான் பன்னீர்செல்வம் வந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டியிருந்தனர்.ஆனாலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில், 3 முன்னாள் எம்எல்ஏக்கள், 2 காவலர்கள் உட்பட 45 பேர் படுகாயமடைந்தனர். இந்த ேமாதல் சம்பவத்தை தொடர்ந்து ராயப்பேட்டையில் பதற்றமான சூழல் நிலவியதால், காவல் துறை தானாக முன்வந்து கலவரத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 400 பேர் மீது 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இரு தரப்பிலும் தலா 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இதுதொடர்பாக மோதலில் ஈடுபட்டதாக எடப்பாடி ஆதரவாளரான ஆயிரம் விளக்கு அதிமுக பகுதி செயலாளர் பாசறை பாலசந்திரன் உட்பட 14 பேர் அதிரடியாக ராயப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மோதல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் மாவட்ட செயலாளர் சைதை பாபு ராயப்ேபட்டை காவல் நிலையத்தில் ேநற்று புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எடப்பாடி தரப்பை சேர்ந்த பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் படி ராயப்பேட்டை போலீசார் ஐபிசி சட்ட விரோதமாக கூடுதல்(147), ஆயுதங்களுடன் கூடுதல்(148), ஆபாசமாக பேசுதல்(294(பி), சட்டவிரோதமாக தடுத்தல்(341), சிறு காயம் ஏற்படுத்துதல்(324) கொலை மிரட்டல் (506)(2) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர். சீலை அகற்ற கோரி எடப்பாடி தரப்பு முறையீடுஅதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையே போர்க்களமாக காட்சி அளித்ததால், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அந்த தெருவுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த மோதல் குறித்து இரு தரப்பினரும் யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து வரும் 25ம் தேதி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளேன். அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும்’ என்று முறையீடு செய்தார். இதை கேட்ட நீதிபதி, ‘மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்’ என்றார்….

The post அதிமுக தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பினர் மோதல் அதிமுகவினர் 400 பேர் மீது வழக்கு: 14 பேர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi ,Chennai ,Palanichami ,O. Panneerselvam ,OPS ,Dinakaran ,
× RELATED காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: எடப்பாடி கோரிக்கை