×

ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை: பிரசாரத்தின்போது சுடப்பட்டார்; உலக தலைவர்கள் கடும் அதிர்ச்சி

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பிரசாரத்தின் போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொலையாளியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்துள்ளனர். ஷின்சோ கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஜப்பானில் நாடாளுமன்ற மேல்சபையின் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மேற்கு ஜப்பானின் நாரா நகரில், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) தனது லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். நாரா ரயில் நிலையத்திற்கு அருகே சாலையில் நின்றபடி அவர் பிரசாரம் செய்து கொண்டிருக்க, பாதுகாப்பு படையினர் அவரை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அபேக்கு சில அடி தூர இடைவெளியில் அவருக்கு பின்னால் நின்றிருந்த ஒரு நபர், திடீரென நாட்டு துப்பாக்கியால் அபேயை நோக்கி சுட்டான்.பாதுகாப்பு வீரர்கள் சுதாரிப்பதற்குள், அவன் 2 முறை துப்பாக்கியால் சுட்டான். அதில், 2வது குண்டு சுடப்பட்ட போது, ஷின்சோ அபே சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் அபேவை சுற்றி குவிந்தனர். அபேயின் மார்பில் குண்டு துளைத்து ரத்தம் வழிந்தது. மயக்க நிலையில் அவர் அசைவற்று கிடந்தார். அதே சமயம், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு வீரர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவனிடமிருந்து இரட்டை குழல் கொண்ட நாட்டு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.படுகாயத்துடன் இருந்த அபேயை, ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலமாக உடனடியாக நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அபேக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே, அபே மூச்சற்று, இதயத்துடிப்பு நின்ற நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுமார் 5 மணி நேரம் மருத்துவர்கள் தீவிரமாக போராடியும் அபேயை காப்பாற்ற முடியவில்லை. இறுதியில், மாலை 5 மணி அளவில் அபே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படுகொலை சம்பவம் ஜப்பானில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் ஷின்சோ அபே. கடந்த 2006ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டு வரை 4 முறை ஜப்பான் பிரதமராக பதவி வகித்துள்ளார். அபே சிறுவயதில் இருந்தே பெருங்குடல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இப்பிரச்னை காரணமாக கடந்த 2007ல் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதேபோல், கடந்த 2020ம் ஆண்டிலும் உடல் நலக்குறைவால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதோடு அரசியலில் இருந்தும் சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். தற்போது அவர் மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்கிய நிலையில், சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாக கருதப்படும் ஜப்பானில், பட்டப்பகலில் நடுரோட்டில், முன்னாள் பிரதமர், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பாகி உள்ளது. அபே மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர். பிடிக்கவில்லை கொன்னுட்டேன்ஷின்சோ அபேயை கொலை செய்ததாக கைதான நபர் டெட்சுயா யமாகமி. வயது 41. நாரா நகரில் வசிப்பவர். இவர் முன்னாள் ராணுவ வீரர். ஜப்பான் கடற்படையில் தற்காப்பு படை வீரராக 3 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 2005ல் ஓய்வு பெற்றவர். இவர் அபேயின் செயல்பாடுகளால் விரக்தி அடைந்ததாகவும், அவரை கொல்ல திட்டமிட்டதாகவும் விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ‘நெருங்கிய நண்பரை இழந்து விட்டேன்’ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அபே மறைந்து விட்டார் என்ற செய்தியை நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. சிறந்த அரசியல் தலைவரான அவர், துப்பாக்கி குண்டுக்கு பலியாகி இருப்பது, ஒட்டுமொத்த மனித குலத்திற்குமான சோகம். பிரதமர் மோடி: என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ஷின்சோ அபேவின் எதிர்பாராத மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனது துயரை பகிர்ந்துகொள்ள வார்த்தைகள் இல்லை. இந்தியா -ஜப்பான் உறவில் பெரும் பங்காற்றிய அவருக்காக ஒட்டு மொத்த இந்தியாவே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.சோனியா காந்தி, (காங். தலைவர்): அபே கொல்லப்பட்டது அதிர்ச்சியாக இருக்கிறது. நீண்ட காலமாக இந்தியாவின் சிறந்த நண்பராகவும், நலம் விரும்பியாகவும் அபே இருந்துள்ளார். அவரது மறைவு, ஜப்பானுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் மிகப்பெரிய துரதிஷ்டம்.ராகுல் காந்தி, காங். முன்னாள் தலைவர்: இந்தியா- ஜப்பான் உறவை வலுப்படுத்துவதில் அபேவின் பங்கு பாராட்டத்தக்கது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நீடித்த பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.சீனாவில் கொண்டாட்டம்ஷின்சோ அபே மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு அதிர்ச்சி அளிப்பதாக சீனா வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்துள்ளது. அதே சமயம், சீனாவின் வீசேட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலர், அபேயின் மறைவை கொண்டாடி வருகின்றனர். அபேவை சுட்டுக் கொன்ற நபரை ஹீரோவாக புகழ்கின்றனர். இன்று துக்க நாள்அபேவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் தேசிய கொடியை அரைகம்பத்தில் பறக்க விட ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.மெட்ரோ, புல்லட் ரயில் திட்டங்களுக்கு உதவியவர்ஷின்சோ அபே இந்தியாவின் உற்ற நண்பராக இருந்துள்ளார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஜப்பானின் கடன் உதவியுடன் டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமானது. அதே போல், மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கும் அபே ஆட்சியில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்தின் படி, ஜப்பான் தனது புல்லட் ரயிலுக்கான தொழில்நுட்பங்களை வழங்குவதோடு கடன் உதவியும் வழங்கும். கடந்த 2017ல் அபேயின் தலையீட்டுக்குப் பிறகுதான் இந்தியா, ஜப்பான் இடையே ஆக்கப்பூர்வமான பணிகளுக்கான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2020ம் ஆண்டில் இந்தியாவில் 4வது பெரிய முதலீட்டாளராக ஜப்பான் இருந்துள்ளது. மேலும், 1,455 ஜப்பான் தனியார் நிறுவனங்களில் கிளைகள் இந்தியாவில் உள்ளன.துப்பாக்கி வாங்குவது எளிதல்லஜப்பானில் துப்பாக்கி வாங்குவது, வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஜப்பானியர்களில் பெரும்பாலானவர்கள் நிஜ துப்பாக்கியை தொட்டுக் கூட பார்த்திருக்க மாட்டார்கள், அந்தளவுக்கு கெடுபிடி அதிகம். அங்கு குற்றச் செயல்களில் ஈடுபடும் வன்முறை தாதா கும்பல் கூட துப்பாக்கியை எடுக்க பயப்படுவார்கள். போலீசாரும் அரிதினும் அரிதாகத்தான் துப்பாக்கியை பயன்படுத்துவார்கள்.ஒவ்வொரு ஆண்டும் மிக மிக சொற்பமான அளவிலேயே துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் பதிவாகும். 12.5 கோடி மக்கள் வாழும் அந்நாட்டில், கடந்த ஆண்டில் துப்பாக்கி தொடர்பான குற்ற வழக்குகள் வெறும் 10 மட்டுமே. பெரும்பாலும் இது ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே இருக்கும். கடந்த ஆண்டு நடந்த 10 சம்பவத்தில் ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். 4 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 8 வழக்குகள் தாதா கும்பல்கள் தொடர்பானவை.   ஜப்பானில் சாதாரணமாக யாரும் துப்பாக்கி வாங்கி விட முடியாது. ஒருவர் சொந்தமாக துப்பாக்கி வாங்க வேண்டுமெனில், அவரது பின்புலம் குறித்து போலீஸ் கடுமையான விசாரணைகளை நடத்துவார்கள். சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தால், அதற்கு மிக மிக அதிக அபராதம் விதிக்கப்படும். இதனாலேயே யாரும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தும், ஜப்பானில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது….

The post ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை: பிரசாரத்தின்போது சுடப்பட்டார்; உலக தலைவர்கள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Shinzo Abe ,Japan ,Tokyo ,Dinakaran ,
× RELATED மாநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வால்...