அங்காரா: துருக்கியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக கிடைத்த உளவுத்தகவலின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 115 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைநகர் இஸ்தான்புல் அருகே யலோவா மாகாணத்தின் எல்மாலி மாவட்டத்தில் ஒரு வீட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 2 மணி அளவில் சம்மந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் வெளியேற்றப்பட்ட பிறகு உள்ளே இருந்த தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடந்ததாகவும் இதில் 6 தீவிரவாதிகளும் 3 போலீசாரும் பலியானதாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகயா கூறி உள்ளார். தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையேயான துப்பாக்கி சண்டை வீட்டுக்கு வெளியே தெருவிலும் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
