×

ரூ.58 கோடி சொத்து குவித்த வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு: தமிழகம் முழுவதும் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

சென்னை: உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறையில் அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது 2 மகன்கள், உறவினர்களுக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம் ரொக்கம், 963 சவரன் தங்க நகைகள், 23.09 கிலோ வெள்ளி பொருட்கள், கணினி, பென் டிரைவ் மற்றும் பினாமிகள் பெயரில் வாங்கி குறித்துள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல் நடந்ததாக தொடர் புகார்கள் வந்தன. அதற்கான ஆதாரங்களுடன் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து வழங்கப்பட்டது. ஆனால் அப்போது அதிமுக ஆட்சி என்பதால் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் செய்த அனைத்து அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் தேர்தலின் போது உறுதியளித்தார்.அதன்படி திமுக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. பின்னர் பொதுமக்களிடம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி ஊழல் செய்த அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சொத்துக்கள் குவித்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் வீடுகள், நிறுவனங்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல கோடி ரூபாய் ரொக்க பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெளிநாட்டு முதலீடுகள், கிரிப்டோ கரன்சி முதலீடுகள் எனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பான வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக ஊழலில் சிக்கிய 7வது முன்னாள் அமைச்சர் காமராஜ். அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவும், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான காமராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தது. ேமலும் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது பாமாயில், பருப்பு ஆகியவற்றை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும், நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு தொடர்ந்து கொள்முதல் அனுமதி வழங்கியதாகவும் புகார்கள் வந்தன. மேலும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி உணவுத்துறையில் தானியங்கள் மற்றும் பழங்கள் குளிர்சாதன கிடங்குகள் கட்டியது. குறிப்பிட்ட ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு மட்டும் தனது துறையில் உள்ள கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஊழலை உறுதிப்படுத்தும் வகையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி காமராஜ் 500 சதவீதம் அளவிக்கு அதாவது, ரூ.58.44 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததற்கான அனைத்து ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது.அதனடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ், இவரது மூத்த மகனான டாக்டர் இனியன், இளைய மகன் டாக்டர் இன்பன், இனியனின் மாமனாரான சந்திரசேகரன், காமராஜ் நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி, வக்கீலான உதயகுமார் உட்பட 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சித்ரா நேற்று முன்தினம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். அதில் 1.4.2015ம் ஆண்டு முதல் 31.3.2021 வரை உணவுத்துறை அமைச்சராக காமராஜ் பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு ஊழல்கள் செய்து தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252க்கு அசையும், அசையா சொத்துகளை வாங்கி 500 சதவீதத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.அதைதொடர்ந்து நன்னிலம் எம்எல்ஏவான காமராஜ் வீடு, அலுவலகம் என திருவாரூர், திருச்சி, தஞ்சை, சென்னை, கோவை உள்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிகாலை முதல் மாலைவரை அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், தனித்தனி குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணிக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ஜெயசீலன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். பின்னர் வெளியே நிறுத்தியிருந்த 2 சொகுசு கார்களிலும் சோதனை நடத்தினர். காமராஜ் வீட்டில் நடந்த சோதனையில் வருமானத்துக்கு அதிகமாக பல மடங்கு சொத்து வாங்கி குவித்ததற்கான முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள், ரொக்கம் கைப்பற்றினர்.இதேபோல் காமராஜின் வீட்டின் பின்புறம் உள்ள ராமநாதன் தெருவில் உள்ள அவரது மனைவி லதா மகேஷ்வரியின் தங்கை ஆண்டாள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதேபோல், நன்னிலம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், இவரது சகோதரரான ேபரளத்தில் உள்ள மெட்ரிக் பள்ளி உரிமையாளருமான வெற்றிச்செல்வம் ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது.மேலும், காமராஜின் நண்பரான மன்னார்குடி பைபாஸ் சாலையில்உள்ள மாவட்ட ஜெயலலிதா பேரவையை சேர்ந்த பைங்காநாடு ராதாகிருஷ்ணன் வீடு, மன்னார்குடி மூவாநல்லூரில் ஒன்றிய கவுன்சிலர் லோக அறிவழகன், அவரது நண்பர் சம்பத்குமார் வீடு, கோட்டூர் அருகே செட்டியமூலையில் உள்ள காமராஜின் மைத்துனரான பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் (அதிமுக ஒன்றிய செயலாளர்), காமராஜின் நண்பரான திருத்துறைப்பூண்டி அருகே கொக்காலாடி சந்திரகாசன் ஆகியோர் வீடுகளில் அரியலூர் டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.இதேபோல் தஞ்சை பூக்கார வஸ்தா தெருவில் உள்ள காமராஜின் சம்பந்தியான டாக்டர் மோகன் வீட்டிலும் சோதனை நடந்தது. தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக காமராஜ் மகன்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் 7 மாடி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை வரை சோதனை நடத்தினர்.மேலும், காமராஜின்  நெருங்கிய நண்பரும், திருச்சி தில்லைநகரில் உள்ள பிளாசம் ஓட்டல் உரிமையாளருமான இளமுருகு வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் காலை 6.30 மணி முதல் மாலை வரை 7 லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு முக்கிய அவணங்களை கைப்பற்றினர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாசம் ஓட்டல், திருச்சி கே.கே.நகர் அய்யர் தோப்பில் உள்ள பிளாசம் ஓட்டல் நிர்வாக இயக்குனர் பாண்டியன் வீட்டிலும் 6 பேர் கொண்ட போலீசார் சோதனை நடத்தினர்.சென்னையை பொறுத்தவரையில் குறிப்பாக, முன்னாள் அமைச்சர் காமராஜிக்கு சொந்தமான கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.இன்டர்நேஷனல் சர்வீஸ், அடையாறு, சாஸ்திரி நகரில் உள்ள முத்துலட்சுமி என்பவரது வீடு, மயிலாப்பூர், ராயப்பேட்டை சாலையில் உள்ள ஜிபிஏ கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட், பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார் வசித்து வரும் போயஸ் கார்டனில் உள்ள நிறுவனம், மேற்கு அண்ணா நகரில் உறவினர் தேசபந்து என்பவருக்கு சொந்தமான பார்ஜே எனர்ஜி சொல்யூஷன் நிறுவனம், உறவினர் முத்துலட்சுமிக்கு சொந்தமான பனையூரில் மாடர்ன் பில்டர்ஸ் லே-அவுட் ஆகிய இடங்களில் காலை முதல் மாலை வரை தொடர் சோதனை நடந்தது.  காமராஜ்க்கு சொந்தமான சென்னையில் 6 இடங்கள், கோவையில் ஒரு இடம், திருச்சியில் 3 இடங்கள், தஞ்சையில் 4 இடங்கள், திருவாரூர் மற்றும் அந்த மாவட்டம் முழுவதும் 38 இடங்கள் என மொத்தம் 52 இடங்களில் இந்த சோதனை நடந்தது.  இந்த சோதனையில் காமராஜூக்கு சொந்தமான 52 இடங்களில் இருந்து ரூ.41.6 லட்சம் ரொக்க பணம், 963 சவரன் தங்க நகைகள், 23,960 கிராம் வெள்ளி பொருட்கள், ஐ-போன்கள், கணினிகள், பென் டிரைவ், ஹாட் டிஸ்க்கள், பினாமிகள் பெயரில் வாங்கி குவிக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம் ரொக்க பணம், வங்கி பெட்டக சாவி என வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், பினாமி பெயரில் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்காய்வு செய்து வருகிறன்றர். அதேநேரம் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், பினாமிகள் குறித்து முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது இரண்டு மகன்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 6 பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த வருகின்றனர்.ரூ.800 கோடி மருத்துவமனையில் ரெய்டுதஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே காமராஜின் உறவினர் பெயரில் 7 அடுக்குமாடி கொண்ட காமாட்சி மல்டி பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.800 கோடி மதிப்பில் பிரமாண்டமாக இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டிடத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்தது.ஓ.பி.எஸ் காரணமா? காமராஜ் காட்டம்இந்த சோதனையானது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இதனை சட்ட ரீதியாக எதிர்கொண்டு முறியடிப்போம்.  இதற்கு நான்  பயப்படமாட்டேன். எனது மகன்கள் இருவரும் மருத்துவர் என்ற நிலையில் வங்கியில் கடன்பெற்று தான் தஞ்சையில் மருத்துவமனையை கட்டி வருகின்றனர். இது மட்டுமின்றி நானே கடனில் தான் இருந்து வருகின்றேன். முறைகேடு செய்துள்ளதாக கூறப்படும் இந்த தொகையை விட கூடுதல் கடன்தொகை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என 2 தினங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் தெரிவித்ததாலே இதுபோன்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடைபெறுகிறதா என கேட்டதற்கு, சொன்னவர் ஒன்றும் யோக்கியவர் அல்ல என காட்டமாக பதில் அளித்தார்….

The post ரூ.58 கோடி சொத்து குவித்த வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு: தமிழகம் முழுவதும் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,-minister ,Kamaraj ,Tamil Nadu ,Chennai ,minister ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...