×

அன்னூரில் பெய்த தொடர் மழையால் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி-தொகுப்பு வீடு கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை

அன்னூர் : கோவை அன்னூரில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார்.கோவை மாவட்டம், அன்னூர் அருகே அல்லிகுளத்தில் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தூரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக பல மணி நேரம் தூரல் மழை பெய்தபடி இருந்து வருகிறது. இந்த மழையால் பல வீடுகளின் மண்ணாலான சுவர்கள் கரைந்தும், ஈரத்தை ஈர்த்தும் வந்தன. இந்த பகுதியை சேர்ந்தவர் மாராள் (85). இவர் அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை மீண்டும் தனது வீட்டிற்கு புறப்பட்டார். அங்குள்ள பாலு என்பவரது வீட்டின் தெற்கு பகுதியில் வந்தபோது பாலு வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து மாறாள் மீது விழுந்து அமுக்கியது. சத்தம் கேட்டு உடனே அருகில் இருந்தவர்கள், ஓடி வந்து இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது மாறாள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளர் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் வேலைக்குச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். சம்பவ இடத்தில் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் தெற்கு வருவாய் ஆய்வாளர் நாகராஜ், விஏஓ அறிவுரை நம்பி ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இங்கு 50 வீடுகள் மண் சுவர்களால் கட்டப்பட்டு மோசமான நிலையில் ஈரத்தை ஈர்த்து மலையில் கரைந்து வருகின்றன. இதில் 20 வீடுகள் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. எனவே மழைக்கால முடியும் வரை நாங்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். மோசமான நிலையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும். இல்லாவிட்டால் மண் வீடுகள் இடிந்து விழுவதும் உயிரிழப்புகள் மேலும் தொடரும் அபாயம் உள்ளது’’ என்றனர். …

The post அன்னூரில் பெய்த தொடர் மழையால் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி-தொகுப்பு வீடு கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Annoor ,Annur ,Coimbatore ,Alligulam ,Annur, Coimbatore district ,
× RELATED அன்னூர் மாரியம்மன் கோவில் திருவிழா அழகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள்