×

விபத்தில் இருந்து காக்கும் தெய்வம்: நாகதோஷம் போக்கும் தர்மபுரி சாலை விநாயகர்

தர்மபுரி-சேலம் சாலையில் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது பல நூற்றாண்டுகள் தொன்மைவாய்ந்த சாலை விநாயகர் கோயில். இக்கோயில் திருவுண்ணாழி, மகாமண்டபம் ஆகிய வற்றை கொண்ட சிறிய கோயிலாகும். கோயிலின் முதன்மை தெய்வமான விநாயகருக்கு இரு புறங்களிலும் நாகர் உருவங்கள் உள்ளன. விநாயகர் நாற்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கோயிலில், திருச்சுற்றில் தென்மேற்கில் துர்க்கை, மேற்கில் பாலசுப்ரமணியர், சிவலிங்கம், லட்சுமிதாயார் அருள்பாலிக்கின்றனர். விநாயகர் புராணங்களில் முமு முதற்கடவுளாக போற்றப்படுகிறார். பண்டைக்காலத்தில் மன்னர்கள், நல்லகாரியங்களை செய்யும்போதும், போருக்கு செல்லும்போதும் விநாயகரை வழிபட்டுச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

இப்படி மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அதியவனமாக இருந்த இப்பகுதியில் வழிபாட்டுக்காக கட்டப்பட்டது தான் இந்த விநாயகர் கோயில். குறிப்பாக போர்க்காலங்களில் இந்த விநாயகரை வழிபட்டு செல்லும் ேபாது உயிர் பலிகள் குறைந்துள்ளது. காலத்தின் சுழற்சியால் இந்த இடம் நகரமாக மாறியது. ஆனால் விநாயகர் அதே இடத்தில் அப்படியே அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். அன்றைய காலக்கட்டத்தில் போரில் உயிர்பலிகள் நடக்காமல் காத்தவர், இப்போது சாலை விபத்துகளில் இருந்து மக்களை காக்கும் சர்வ வல்லமை படைத்த கடவுளாக அருள்பாலிக்கிறார் என்பது தலவரலாறு. இதை மனதில் கொண்டே தர்மபுரியில் புதிதாக வாகனம் வாங்குவோர், இந்த கோயிலில் வைத்து பூஜை செய்த பின்னரே அதை ஓட்டத் தொடங்குகின்றனர். இதேபோல் வெளியூர் பயணம் மேற்கொள்வோரும் சாலை விநாயகரை வழிபட்ட பின்னரே புறப்படுகின்றனர்.

கோயிலின் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள், திருமண நிகழ்ச்சிகளில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியை இங்கு வைத்தே செய்து வருகின்றனர். புதுமணத்தம்பதிகள், மணமுடித்தவுடன் இங்கு வந்து வழிபடுவதும், குழந்தை பிறந்த நாட்களில் வந்து வழிபடுவதும் ஒரு ஐதீகமாகவே கருதப்படுகிறது.
இதேபோல் நாகதோஷத்திற்கு சிறந்த பரிகாரத் தலமாகவும் சாலை விநாயகர் கோயில் திகழ்கிறது. நாகதோஷம் என்றாலே, அதை ராகு, கேது விஷயமாகவே பார்க்கிறோம். ராகு கேதுவுக்கு உரிய நாளான தீபாவளி அன்று, நாகர் உருவங்களுடன் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வணங்கி, வழிபடுவது மிகவும் சிறந்தது என்று புராண நூல்கள் கூறுகிறது.

இந்த வகையில் இடமும், வலமும் நாகருடன் அருள்பாலிக்கும் சாலை விநாயகரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும் என்பதும் பல்லாண்டு காலமாய் வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நவராத்திரி உற்சவம், மார்கழி மாத விடியற்காலை பூஜை போன்றவை வெகுவிமரிசையாக நடக்கும். விநாயகர் சதுர்த்தி விழா, 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது சிறப்பு. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச சாத்துபடி, தினமும் மாலை நேரங்களில் நாடகம், கலைநிகழ்ச்சிகள் களை கட்டும். சதுர்த்தி நாளன்று விநாயகரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்படும். 100 கிலோ கடலை மாவு, சர்க்கரை 1.5 டன், எண்ணெய் 7 டின் மற்றும் நெய் ஆகியவை மூலம், பக்தர்களே லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

Tags : Goddess Dhammapuri Road Vinayagar ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்