×

மேஷ ராசி ஆண் - மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்

என்னோட ராசி நல்ல ராசி 2

முனைவர் செ. ராஜேஸ்வரி


மேஷ ராசி என்பது செவ்வாயின் ஆதிக்கத்தில் இருப்பதால் பொதுவாக முன் கோபமும் அதிக பாசமும் கொண்டிருப்பது இயல்பு. இந்த ராசி நெருப்பு  ராசி என்பதால் மேஷ ராசி ஆண் சற்று சூடாகவே இருப்பார். பேச்சிலும் செயலிலும் மற்றவர்களைத் தெறிக்க விடுவார். அன்புக்கு கட்டுப்படும் இவர்  சூடான இரும்பில் தண்ணீர் தெளித்ததுபோல குளிர்ந்து விடுவது சகஜம்.மேஷ ராசி ஆண் ஒரு குழந்தையை போன்றவர். பெண்களிடம் மிகுந்த  பாசத்தையும் பாதுகாப்பையும்  எதிர்பார்ப்பார். தாரமாகட்டும் நண்பராகட்டும் இவர்கள் அவர்களை மிகவும் சார்ந்து இருப்பார். இவர் படிப்பில் அல்லது  வேலையில் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமும் அறிவும் சுறுசுறுப்பும் தன்மான வெறியும் தன்னைப்பற்றி சற்று மிகையான  கருத்தும் அதீத நம்பிக்கையும் முரட்டுக் கோபமும் அசட்டுத்  துணிச்சலும் கொண்டவர்.

இலட்சியப் பற்று உடையவர்: மேஷ ராசி இலட்சியவாதி. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கைப்படி வாழ்வார். பணம் பதவி அந்தஸ்து  அதிகாரம் ஆகியவற்றிற்காக வளைந்து கொடுத்துப் போவதை சற்றும் விரும்பாதவர். இதனால் சிலர் இவரைப் பிழைக்கத் தெரியாதவர் என்பர். இவரது   இலட்சியப் போக்கு சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறதே என்று சிலர் கணடனம் தெரிவிப்பர். இந்தக் கண்டனங்களோடு போராடி வாழ்க்கையைப்  புரிந்துகொண்டு இவர் வாழத் தொடங்கும் போது இவரது வாழ்நாளில் பாதி கடந்துவிடும்.இலட்சியவாதிகளாக வாழ்க்கையை அணுகும் இவர் ஏதேனும்  ஒன்று சரியில்லை எனத்  தோன்றினால் உடனே மாற்ற முயற்சி எடுப்பார். இதனால் பலரது பகையை சம்பாதித்துக் கொள்வார். குறைகளோடு கூடிய  வாழ்க்கையை தொழிலை மனிதர்களை இவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. வாழ்க்கையின் யதார்த்தத்தை இவர் புரிந்துகொண்டு மற்றவர்களை  அட்ஜஸ்ட் செய்து வாழ்வது இவருக்கு பிரம்மப் பிரயத்தனமாகி விடும். சில காலம் முயற்சி செய்வார்; ஆனால் முடிவில் வெளியேறி விடுவார்.   ஊரோடு ஒத்து வாழத் தெரியாதவர் என்றும் சொல்லலாம். நியாய தர்மம் பேசியே வாழ்க்கையை கழித்துவிடுவார். ஆனால் இவரின் தனிப்பட்ட  வாழ்க்கை வசதிகளில் எதையும் குறைத்துக் கொள்ள மாட்டார்.

விலக்கிவிடும் மனப்பான்மை ; மேஷ ராசிக்கு பத்து, பதினொன்றாம் இடத்தின்  அதிபதி சனியாக இருப்பதால் எதையும் வேகமாக தூக்கி எறியும்  சுபாவம் இவருக்கு இருக்கும். உறவுகளையும் வேலையையும் இவர்கள் விரைவில் வெறுத்து ஒதுக்கினாலும் இவருக்கு புதுப்புது உறவும் நட்பும்  வேலையும் கிடைத்துக் கொண்டே இருக்கும் . இவர் தினமும் இன்று புதிதாய் பிறந்தோம் என்ற நம்பிக்கையில் புதிய வாழ்வு வாழவே விரும்புவர்.மேஷ ராசிக்காரர் வேலை மற்றும் நட்பு போலவே திருமணத்திலும் கட்டுப்பாடு வைக்க மாட்டார். மனைவி தன் எதிர்பார்ப்பின் படி இல்லையென்றால்  உடனே அவரை விட்டு விலகிவிடுவார். பிள்ளைகள் சரியில்லை என்று தோன்றினால் அவர்களை விட்டும் விலகி விடுவார். தாய், தந்தை சகோதரர்,  நண்பர் உறவினர் யாராக இருந்தாலும் இவருடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டால் ‘யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க’ என்று பாடியவாறு  சட்டென்று விலகி விடுவார். எல்லோரிடமும் இதே கதைதான்.

சுறுசுறுப்பு திலகம்: உற்சாகத்தின் ஊற்றாகத் திகழும் இவர் எப்போதும் தன்னைச்  சுற்றி பத்து பேர் இருக்கும் வகையில் புதிய விஷயங்களைப் பற்றி  பேசிக் கொண்டிருப்பார். மந்தமாக சோம்பேறியாக  இருப்பவர்களை இவருக்கு பிடிக்காது. அப்படி மந்த புத்தியும் செயல்பாடும் உள்ளவர்களோடு இவர்  சேர மாட்டார். சில வேளைகளில் அவருக்கு புத்திமதி சொல்லியே ஓய்ந்து போவார். ஓடும் பஸ்ஸில் ஏறுவது; பஸ் ஓடிக்கொண்டிருக்கும் போதே  அதிலிருந்து குதிப்பது போன்ற வீரதீர சாகசச்  செயல்களைச்  செய்வதுமேஷ ராசிக்காரராகவே இருக்கும்.

எல்லாவற்றிலும் எல்லாம்: மேஷ ராசிக்காரர் விநோத குணம் படைத்தவராக இருப்பார். காதலிக்கும் போது அரசியல் பேசுவார். அரசியல்  பேசிக்கொண்டிருக்கும் போது காதல் விஷயங்களைப் பேசுவார். இவர் எதைப் பேசினாலும் சுவை பட  பேசுவார். மாறுபட்ட நோக்கில் பேசுவார்.  ஆனால் மாறிக்கொண்டே இருக்கும் இவருடைய பேச்சும் விவாதமும்  கூடப் பழகுவோருக்கு சில சமயம் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.  தீவிரமாக ஒன்றை விவாதித்துக் கொண்டிருக்கும்போது அதனுடன் தொடர்புடைய சினிமா விஷயத்தையோ அல்லது தன் வீட்டருகே நடந்த ஒன்றைப்  பற்றியோ எடுத்துக்கூறுவார். இது என்ன பிரமாதம்? இவ்வளவுதான் இது என்பது போல அந்த விவாதப் பொருளின் கனத்தைக் குறைத்து விடுவார்.மேஷ ராசிக்காரர் தனக்குத்  தெரிந்த பல துறை சார்ந்த விஷயங்களை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி பேசுவதில் வல்லவர். எல்லாவற்றிலும்  ஏதேனும் ஒன்றை வித்தியாசப்படுத்திப் பேசுவார். உடனிருப்பவர்களுக்கு தர்ம சங்கடமாகிவிடும்.

மாறியது நெஞ்சம்; மாற்றியவர் யாரோ;நட்பு , காதல், பழக்கம் போன்றவை முறியும் போது மிகவும் கவலைப்படும் இவர் வெகு விரைவில் அடுத்த நண்பர், அடுத்த காதலி என ஃபிரெஷ் ஆகி  வாழ்க்கையை சுவாரசியமாக்கி கொள்வார். இதனால் இவருக்கு அறுபது வயதிலும் புதிய காதலிகள் கிடைப்பதுண்டு. மேஷம் என்பது குழந்தை தானே;  எனவே யார் தன்னை தூக்கி கொஞ்சினாலும் அவர்களிடம் அன்பாக இருக்கும் குழந்தை போல மேஷ ராசிக்காரர் தன்னை வெறுத்த அல்லது வஞ்சித்த  உறவுகளை மறந்து விட்டு புதிய உறவுகளோடு இணைந்து கொள்வார். யாரிடமும் கோபித்துக்கொண்டு பேசாமல் இருப்பது வைராக்கியமாக இருப்பது  என்பதெல்லாம் இவரிடம் இருக்காது. இவரிடம் பேசுகின்ற பழகுகின்ற எல்லோரும் இவருக்கு நல்லவர் தாம்.

விசுவாசம் - நேர்மை: மேஷ ராசிக்காரர் யாரிடம் பழகினாலும் அவருக்கு நேர்மையாக  நன்மை அளிப்பவராக இருப்பார். ஹார்ட் டு ஹார்ட்  என்பார்களே அப்படி பழகுவார். ஈருடல் ஓருயிர் என்பதெல்லாம் மேஷ ராசிக்காரருக்கு என்றே சொல்லி வைத்ததுதான். சும்மா ஏனோ தானோவென்று  ஒப்புக்குப் பழக மாட்டார். பிடிக்கவில்லை என்றால் பணம் பதவி அந்தஸ்து பார்க்காமல் யாராக இருந்தாலும் தூக்கி எறிந்துவிடுவார். மத்திய அமைச்சர்  மகனாக இருந்தால் கூட ஒரு ‘குட் பை’ தான். ‘நோ மோர் கான்டாக்ட் வித் ஹிம்’ என்பதில் உறுதியாக இருப்பார். முதலாளியிடம் விசுவாசமாக இருப்பார்.

இவர் யாரையும் ஏமாற்ற மாட்டார். தன்னை யாரும் ஏமாற்றினால் அவரைக் கோபிக்க மாட்டார்; மாறாக மிகவும் வருத்தப்படுவார். அவருடைய  நட்புக்காக காதலுக்காக காலம் முழுக்க காத்திருப்பார். பொதுவாக மேஷ ராசிக்காரர் யாரையும் சபிப்பதோ திட்டுவதோ கிடையாது. துரோகம் என்பது  இவர் அகராதியில் இருக்காது என்பதால் இவர் எப்போதும் நம்பியவருக்கு விசுவாசமாகவே இருப்பார். போலியாக நடித்து காசு பறிப்பதோ காதலிப்பதோ  இவரிடம் இருக்காது. தன் மனதுக்கு [heart to heart]  நேர்மையானவராகவே இவர் எப்போதும் இருப்பார். சனி - சுக்கிரன் இவர் ராசியோடு  சம்பந்தப்பட்டு இருந்தால் மட்டுமே இவர்கள் தம் இயல்பான குணத்தில் இருந்து சிறிது மாறியிருப்பார்கள்.

சாதி மதங்கள் பார்ப்பதில்லை: மேஷ ராசிக்காரர் அந்தஸ்து பார்த்து பழகுவதில்லை என்பதால் இவருக்கு கீழ்நிலை மேல்நிலை என அனைத்து  மட்டத்திலும் நண்பர்கள் இருப்பார்கள். இவர் காதலியைக்கூட அந்தஸ்து பார்த்து தேட மாட்டார். தன் நண்பர் அல்லது காதலி என யாராக இருந்தாலும்  அந்தஸ்து பார்க்காமல் ஒரே தரத்தில் வைத்துத்தான் பழகுவார். இதனால் ஏழை நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பணக்கார நண்பர்கள் சங்கடத்துக்கு  உள்ளாகி விலகுவதுண்டு. அவர்களின் விலகல் குறித்தும் இவர் கவலைப்பட மாட்டார்.

உலகம் - அழகுக் கலைகளின் சுரங்கம்: இந்த உலகம் அழகானது என்று நம்பும் இவர்கள் பாசிட்டிவ் சிந்தனை உள்ளவர். இவரைச் சுற்றி இருப்பவரும்  சந்தோஷமாக வாழ்க்கையில் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும் என்று விரும்புவார். ஜாதி மதம் இனம் மொழி என்ற கட்டுப்பாடுகளுக்குள்  தன்னை ஒடுக்கிக்கொள்ள மாட்டார். இந்த இடம் இல்லை என்றால் இன்னோரு இடம்; இன்னோரு ஊர்; இன்னோரு நாடு; என்று தன் சிந்தனையை  விரிவாக்குவார். அது போல எந்த ஊருக்கும் சென்று பிழைக்கலாம்; எந்த நாட்டுப் பெண்ணையும் திருமணம் செய்யலாம் என்று நினைப்பார். அப்படி  போகவும் செய்வார். இவர் எந்த ஊருக்கு எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கும் இவருக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். இவர் ஒரு சர்வதேசக்  குடிமகன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையில் நம்பிக்கை உடையவர்.

மேஷ ராசிக்காரரின் காதலி: மேஷ ராசிக்காரரை காதலிக்கும் பெண்கள் ‘நானே  இந்த உலகத்தின் தலை சிறந்த பெண், எனக்கு நிகரான குணவதி  இவ்வுலகில் வேறு எவரும் இல்லை’ என்பதை அடிக்கடி இவரிடம் உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் இவருக்கு மிகச் சிறந்தவர்களை மட்டுமே  பிடிக்கும். இவருக்கு உடல் ரீதியான காதலை விட மனரீதியான காதலே மிகவும் பிடிக்கும். இவரை ஒரு ரோமான்டிக் ஹீரோ என்று சொல்லலாம்.  காதலை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்துவது இவருக்கு மிகவும் பிடிக்கும்.

கேலி கிண்டல் ஆகாது: மேஷ ராசிக்கார்ருக்கு தான் என்னும் அகந்தை சற்று தாராளம். இவர் ஈகோ நிரம்பியவர் என்பதால் இவரை யாரும் கொஞ்சம்  மட்டம் தட்டி பேசினாலும் கேலி செய்தாலும் மிகவும் கோபப்படுவார். உடனே அந்த நபரின் தொடர்பை முறித்துக்கொள்வார். ஓட்டுவது, கலாய்ப்பது,  கிண்டல், கேலி என்பதெல்லாம் இவருக்கு பிடிக்காத விஷயங்கள் ஆகும். தன்னை மட்டுமல்ல தான் விரும்பும் அல்லது  மதிக்கும் எவரையும் யாரும்  கேலி செய்யக்கூடாது; அது இவருக்கு கொஞ்சமும் பிடிக்காது. தன் நண்பர்களின் கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலும் இவர்  கவனமாக  இருப்பார். தான் சம்பந்தப்பட்ட விஷயங்களை யாருக்கும் எதற்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்.

தனித்துவமும் முதன்மையும்: மேஷ ராசிக்கார ஆண் தான் வாங்கிய சட்டை போல இன்னொருவர் வாங்கிவிட்டால் அந்த சட்டையை யாருக்காவது  கொடுத்துவிடுவார். அதை அவர் போட மாட்டார். தான் எப்போதும் எதிலும் முதலாவதாக இருக்க வேண்டும்; தனித்துத் தெரியவேண்டும் என்று  விரும்புவார். டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டால் முதலாவதாக டைவர்ஷன் எடுப்பவர் இவராகத் தான் இருக்கும். எல்லோரும் கால் மணி நேரம்  காத்துக்கிடப்பார்கள்; இவர் அங்கு வந்ததும் வேறு ‘ரூட்டை’க் கண்டுபிடித்து சந்து பொந்துக்குள் போய் நினைத்த இடத்திற்கு முதல் ஆளாக  வந்துவிடுவார். மற்றவரைப் பின்பற்றுவதை விட தான் புதிய தடம் அமைக்க வேண்டும்; தன்னைப் பலர் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படுவார்.  அதற்கான தகுதியும் துணிவும் திறமையும் இவரிடம் இருக்கும். மற்றவர்கள் ஒரு காரியம் செய்யலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் இவர் துணிந்து  அதைச் செய்துவிடுவார். முரட்டு துணிச்சலும் அவசர புத்தியும் இவரிடம்  நிறைய இருக்கும். இவரை சிம்ம ராசிக்காரர் மட்டுமே கொஞ்சம் அடக்கி  வைக்க முடியும். மேஷமும் சிம்மமும் சரி ஜோடி.

தோல்வி நிலையென நினைத்தால்: தோல்வி என்பது மேஷ ராசிக்காரருக்கு பிடிக்காத விஷயம் ஆகும் எனவே இவர் பெரும்பாலும்விளையாட்டுகளில்  கலந்துகொள்ள மாட்டார். மற்றவர்கள் விளையாடுவதை இவர் வேடிக்கை பார்ப்பார். தான் வெற்றி பெறக்கூடிய துறைகளையே தேர்ந்தெடுப்பார்.  வெற்றிக்காக முழுமூச்சாக பாடுபடுவார். இரவு பகல் பார்க்காமல் உழைப்பார். அனைவரிடமும் அன்பாக நேர்மையாகப் பழகுவார் மனதில் பட்டதை  பட்டென்று சொல்லுவார். உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாக பழக மாட்டார். முகஸ்துதி செய்ய மாட்டார். அதாவது காக்கா பிடித்து காரியத்தை  சாதித்துக் கொள்வதை விரும்ப மாட்டார். அதனால் மிகவும் கவனமாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து யோசித்து யோசித்து செய்வார். வெற்றி  ஒன்றே இவரது குறிக்கோளாக இருக்கும்.

தானே ராஜா தானே மந்திரி: மேஷ ராசி ஆண் உயர்வு மனப்பான்மை [சூப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்] உள்ளவர். தன்னை விட புத்திசாலி திறமைசாலி  இந்த உலகில் யாரும் இருக்க முடியாது என்று நம்புவதால் இவரிடம் பொறுமையாகச் சொன்னால் மட்டுமே சில செயல்களைச் செய்யவைக்க  முடியும். இல்லையென்றால் இவரிடம் வேலை வாங்குவது கடினம். இவரிடம் இருந்து வேலை வாங்க முதலாளிக்கு தனித் திறமை இருக்க  வேண்டும். இவர் மற்றவர்களை அதிகாரம் செய்வார். ஆனால் வேறோருவரின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிய மாட்டார். மிகச் சிறந்தவர்; படிப்பாளி;  திறமைசாலி என்று ஒருவரை இவர் மனமாற ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர் சொல்லுக்குக் கண்மூடித்தனமாகக் கீழ்ப்படிவார். வேலை பார்க்கும்  இடத்தில் யாரையும் எதிர்த்துப் பேசியே தனக்குப் புதிய புதிய  பிரச்சனையை உருவாக்கிக் கொள்வார்.

இவரோடு இணங்கியிருப்பது எப்படி?

மேஷ ராசிக்காரருடன் இருப்பவர் நண்பரானாலும் காதலியானாலும் இவருக்கு முரண்பட்ட கருத்துக்களை அவர் கொண்டிருக்கக் கூடாது. இவருக்குப்  பிடித்தவையே நண்பருக்கும் பிடிக்க வேண்டும். இவருக்கு பிடிக்காதவை இவருடைய நண்பருக்கும் காதலிக்கும் மனைவிக்கும் பிடிக்கக் கூடாது.  கோவா படத்தில் தன் காரை பத்திரமாக ஐந்து இளைஞர்களிடம் இருந்து மீட்க ஃபாத்திமாபாபு தன் கணவரிடம் பேசுவது போலப் பேசத் தெரிந்திருக்க   வேண்டும்.மேஷ ராசிக்காரர் கோபமாக இருந்தால் எதிர்த்துப் பேசி சண்டை போடலாம். ஆனால் அமைதியாக இருந்தால் அவரிடம் இருந்து  சம்பந்தப்பட்டவரின் உறவையோ பொருளையோ காப்பாற்ற முடியாது. அவரது அமைதி வெறுப்பின் குறியீடு ஆகும். அந்த அமைதி அவர் முற்றிலும்  ஒருவரை ஒதுக்குகிறார் அல்லது அவரை விட்டு ஒதுங்குகிறார் என்பதற்கு அர்த்தமாகும். இனிப் பேசி பயனில்லை.

பதுங்குவதும் பாய்வதும்: மேஷ ராசிக்கார்ருக்கு உள்ளுக்குள் பயம் இருக்கும். “அஞ்சுவது அறிவார் தொழில்’’ என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க  இவர் தவறானவர்களை கண்டு விலகுவார். அவர்களிடம் பேசுவதைக் கூட தவிர்ப்பார். யாரைப் பற்றியும் மற்றவரிடம் மோசமாகவோ தவறாகவோ  பேச மாட்டார். சபிக்க மாட்டார். அவரவருக்கு ஒரு நியாயம் உண்டு என்பதை எடுத்துச் சொல்வார்.. இவர் தலைக்கனம் பிடித்தவர் என்று யார்  சொல்கிறார்களோ அவர் செய்யும் தவறுகளுக்காக இவர் அவருக்கு யாரிடமாவது வக்காலத்து வாங்கிப் பேசிக் கொண்டிருப்பார். ஆனாலும் இவரைப்  பற்றி தவறான அபிப்பிராயங்களே ஊருக்குள் இருக்கும்.

மேஷ ராசி ஆண் நெருப்பு சார்ந்த தொழில், விவசாயம், போலீஸ், ராணுவம் வெகு சிலர் மருத்துவம் போன்ற துறைகளில் பணி செய்வார்கள்.  பொதுவாக இவர்  அரசியல், சினிமா,  போலீஸ், ரவுடி, கோர்ட், கட்டப் பஞ்சாயத்து போன்ற விஷயங்களை விட்டு விலகியே இருப்பார். இவ்வாறு  பிரச்னையானவர்களைக் கண்டு இவர் ஒதுங்கினாலும்  பிரச்னை என்று வந்துவிட்டால் இவர் ஓடி ஒளிய மாட்டார். அப்போது இவரது அசட்டுத்  துணிச்சலும் முரட்டு குணமும் முன்வந்து நிற்கும். ஜல்லிக்கட்டில் “நின்று விளையாடும்’’ காளையைப் போல நிதானமாக அப்பிரச்னையை  அணுகுவார். தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் ஆலோசனை பெற்று சுயமாக முடிவெடுப்பார். வெற்றியும் பெறுவார்.. மேஷ ராசிக்காரர் வம்புச்   சண்டைக்கு போக மாட்டார் ஆனால் வந்த சண்டையை விட மட்டார். எதிர்த்து நின்று ஜெயிப்பார்,

நோ சர்ப்ரைஸ் கிஃப்ட்: மேஷ ராசிக்காரரைக் காதலிக்க அவரோடு வாழ விரும்பும் பெண் அவரை முந்திக்கொண்டு தான் எதுவும் அதிகப் பிரசங்கியாகப்  பேசக்கூடாது. எந்த முடிவும் சொந்தமாக எடுக்கக்கூடாது. அவரிடம் எதையும் எப்போதும் கேட்டுச்செய்ய வேண்டும். அவர் எந்நேரமும் இந்தப்  பெண்ணை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார். இவளுடைய நன்மை தீமைகளை தன்னுடையவையாகக் கருதியிருப்பார். இச்சூழ்நிலையில் தன்  காதலி தானாக முடிவெடுப்பது அவருக்கு விரோதமான செயலாகத் தோன்றும். அப்படியென்றால் அடிமையாக இருக்க வேண்டுமா என்றால் இல்லை  தன் விருப்பத்தை சொல்லி அவரது சம்மதம் கேட்ட பிறகு எதுவும் செய்ய வேண்டும். ஆனால் “சர்ப்ரைசாக’’ இருக்கட்டும் என்று ஏதாவது செய்தால்  அது பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக முடிந்த கதையாகிவிடும். தன்னைச் சார்ந்தவர்கள் தன்முனைப்பாக எதைச் செய்தாலும் அது மேஷ  ராசிக்காரருக்கு ஒழுங்கீனமாகவே தோன்றும். அவர் தன் காதலிக்காக என்ன வேண்டுமாலும் செய்வார். ஆனால் அதற்காகக் கடன் வாங்கி எதையும்  செய்ய மாட்டார். அவர் தனது தேவைகளை நிறைவேற்றிய பிறகு மிச்சம் ஏதாவது இருந்தால் அதைக்கொண்டு நிறைய செய்வார்.

மேஷ ராசிக்காரரின் மனைவி: மேஷ ராசிக்காரருக்கு வீட்டில் வேலை பார்க்காமல் சோம்பியிருக்கும் மனைவியை அறவே பிடிக்காது. அதைப் போல  வேலை பார்க்கும் இடத்தில் தன் மனைவி மற்ற ஆண்களுடன் அரட்டை அடிப்பதும் பிடிக்காது. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையை  வீட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் இவர் மட்டும் சில தனக்கான விதிவிலக்குகளைக் கொண்டிருப்பார்.  அதை  நியாயப்படுத்த தனக்குள் சில காரணங்களையும் வைத்திருப்பார். ஆனால் தன் மனைவி உட்பட வேறு எவரும் தன்னை விமர்சிக்க இடமளிக்க  மாட்டார். அதை விரும்பவும் மாட்டார். அவர்கள் நியதிப்படி தான் வாழ வேண்டும் என்று விரும்புவார்.

தந்தையாக மேஷ ராசி ஆண்கள்: மேஷ ராசி ஆண்  தன் குழந்தைகளை இவ்வுலகத்தின் உயர்ந்த பிறவிகளாகக் கருதுவார். தெய்வப்பிறவி போல  வளர்ப்பார். எங்கள் வீட்டு குடும்பக் குத்துவிளக்கு; மகாராணி; இளவரசன்; என்று பிள்ளைகளை உயர்வாகப் போற்றுவார்.  செல்லம் கொடுக்காமல்  கண்டித்து வளர்ப்பார். பல உயர்ந்த இலட்சியங்களைச் சிறு வயதிலேயே அவர்கள் மனதில் புகுத்தி விடுவார். அவர்களுக்கான பாதையை செம்மையாக  அமைத்துத் தருவார். அப்பாதை மாறினால் கண் மண் தெரியாமல் அடித்து உதைப்பார். தன் கண் பார்வையில் இருந்து அவர்கள் விலகிப் போவதை  எந்த வயதிலும் சகித்துக்கொள்ள மாட்டார். ஒழுக்கம் மற்றும் கண்டிப்பில் காட்டும் அக்கறையை இவர் அவர்களின் படிப்பு, வேலை வாய்ப்பு  போன்றவற்றில் காட்ட மாட்டார். வயதான பிள்ளைகள் தன் தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்றால் அந்தத் தந்தை மேஷ ராசிக் காரராக  இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மேஷ ராசி தந்தை தன் பிள்ளைகளுக்கு  தெய்வ பக்தி மற்றும் வாழ்க்கை அழகானது என்று அதீத நம்பிக்கையை  ஊட்டுவார். உலகின் சிறந்த  குடிமகனாக வளர வேண்டும் என்று ‘மோட்டிவேட்’ செய்வார். பெரிய பெரிய பரிசுகள் விருதுகள் வாங்கவேண்டும் என்று உற்சாகப்படுத்துவார்.பொதுவாக மேஷ ராசி ஆண் மனைவிக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருக்கத்  தவறுவதில்லை. படிக்காதவர் கூட  உலக விஷயங்கள் பலவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். அவற்றைக் குழந்தைகளுக்கு அவ்வப்போது எடுத்துக்கூறுவார். கென்னடி, லிங்கன், ஒபாமா, வள்ளுவர், ஜாக்கிசான் என்று உலகப்புகழ் பெற்றவர்களைப் பற்றி பிள்ளைகளிடம் அடிக்கடி பேசுவது உண்டு.  பக்கத்து வீட்டுக் கதை, ஓடிப்போனவள் கதை, ஏமாந்தவன் கதை, ஏமாற்றியவன் கதை போன்றவற்றை இவர் பிள்ளைகளிடம் சொல்லவும் மாட்டார்,.  தானும் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டார் ஒருவரை பற்றிப் புறம் பேசுவதும் மற்றவர்களின் பலவீனங்களைச்  சொல்லி சிரிப்பதும்  இவருக்கு அறவே பிடிக்காது. அப்படிப் பேசும் குழுவில் இவர் இடம் பெற மாட்டார்.

சொல்லிக் காட்டுதல்:  மேஷ ராசிக்காரரிடம் ஒரு உதவியோ பொருளோ கேட்டால் சந்தோஷமாக செய்து தருவார். ஆனால் பிறகு ஏதோ ஒரு  சமயத்தில் அவரை ஏதேனும் கடுமையாக பேசிவிட்டாலோ கேலி செய்தாலோ  தான் செய்த உதவியை அல்லது கொடுத்த பொருளை பலர்  முன்னிலையில்  சொல்லிக்காட்டி பேசுவார். அது அவரது பழக்கம்.அழகான அரிய பரிசு  ஒன்றை தன் காதலிக்கு தருவார். பிறகு தினமும் அந்த  பொருளின் சிறப்பை எடுத்துச் சொல்லி மகிழ்வார். அவர் அவ்வாறு கூறுவது பிடிக்கவில்லை என்றாலும் அந்தக் காதலி அதை சகித்துக்கொள்ளத் தான்  வேண்டும். இல்லையென்றால் அந்த பரிசைப் பாராட்டும்  வேலையை அந்த காதலி தினமும்  செய்ய வேண்டும். அதாவது அந்த பரிசின் சிறப்பை  அதன் அழகை அதன் மதிப்பை தினமும் அவரிடம் சொல்லி மகிழ்ந்தபடி இருக்க வேண்டும். தான் செய்த செயலுக்கு ‘ரெகக்னிஷன்’ எதிர்பார்க்கும்  சிறுபிள்ளைக்குணம் அவருடையது. குழந்தையைக் கொஞ்சி உற்சாகப்படுத்தி படிக்க வைப்பது; சாப்பிட வைப்பது போலவே மேஷ ராசி ஆண்களிடம்  அவரது காதலி அல்லது மனைவிமார் அடிக்கடி ஏதாவது அவர் மனம் மகிழ பேசி உற்சாகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தன்னைக்  கவனிக்காமல்  உதாசீனப்படுத்துவதாகக் கருதி கோபித்துக்கொள்வார்.

வேலைக்காரரா? முதலாளியா?
மேஷ ராசி ஆண் சுய தொழில் செய்தால் நல்லது, அல்லது இவர் தான் வேலை பார்க்கும் இடத்தில் தன்னை ஒரு வேலைக்காரன் போல  நடத்தப்படுவதை விரும்ப மாட்டார். ஒரு குட்டி முதலாளி போலவே செயல்படுவார். முதலாளிக்கு விசுவாசமாக அதிகம் உழைப்பார். மற்றவர்களும்  அவ்வாறு உழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இவ்வளவு விசுவாசமாக இருந்தாலும் எந்த வேலையிலும் இவர் நிலைத்து நிற்பதில்லை. திறமை  மிக்கவர் என்பதால் ஒரு வேலை போனாலும் இவருக்கு வேறு ஏதோ வேலை கிடைக்கும்; வருமானம் வரும்; தன் மனைவி மக்களை கண்  கலங்காமல் கவனித்துக்கொள்வார்.

இவருக்கு சொத்து எது?
மேஷ ராசிக்காரருக்கு அவரது தன்மானமும் கொள்கைப் பற்றுமே அழியா சொத்துக்கள் ஆகும். பொதுவாக இவர் வீடு, வயல், இடம், கார், பங்களா,  தொழிற்சாலை போன்ற  சொத்துக்களை விரும்புவதில்லை; அவை இருந்தாலும் அதனால் இவருக்கு பெரிய லாபம் வராது. இவரும் தன்  வருமானத்தில் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்ட மாட்டார். ஆனால் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும். எப்படி மிச்சம் பிடிக்க  வேண்டுமே என்று பல விளக்கங்கள் கொடுப்பார். ஆனால் அத்தனையும் ஊருக்கு உபதேசம் தான் தனது  வாழ்க்கையில் அதனைப் பின்பற்ற மாட்டார்.  இவரது யோசனையை கேட்பவர் பிழைத்துக் கொள்ளலாம்.  பணம் நிலையில்லாதது என்று தத்துவம் பேசியே இளமையைக் கழித்துவிடுவார்.நமக்கு வேண்டிய வசதிகள் எல்லாம் எங்கிருந்தோ கடவுள் நமக்கு கொண்டுவந்து தரும் என்று நினைத்துக்கொண்டே காலத்தை கழித்திருப்பார்.

முதுமைக் காலத்தில் பணத்தை சேர்க்காமல் தவறு செய்துவிட்டோமோ என்று இவர் நினைக்கும்போது இவர் செய்தது சரிதான் என்பது போல  இவரால் பலனடைந்த நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் இவரைப் பாராட்டுவர். வேலை மாறிக்கொண்டே இருந்ததால் முதிய வயதில் இவருக்கு  பென்ஷன் இருக்காது; சுய தொழிலை லாப நோக்கம் இல்லாமல் நடத்தியதால் பெரும்பாலும் வங்கியிலும் இவர் கணக்கில் பணம் இருக்காது.  ஆனாலும் இவர் தன் வாழ்நாளில் பல நல்ல உள்ளங்களை சம்பாதித்து வைத்திருப்பார். இவரது நண்பர்கள், மனைவி மக்கள் இவரை அன்பாக  கவனித்துக்கொள்வார்கள்.மேஷ ராசிக்காரருக்கு பொதுவாக எந்நாளும் கௌரவக் குறைவு ஏற்படாது. அப்படி ஏற்பட்டால் அது அவர் வாழ்க்கையின்  கடைசி நாள் என்று உறுதியாகக் கூறலாம். “மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்’’ போன்ற தன்மானம் மிகுந்தவர்கள்  மேஷ ராசிக்கார ஆண்கள்  என்று தைரியமாகக் கூறலாம்.

(தொடரும்)

Tags : Masha razi ,survivor ,
× RELATED கொரோனாவை வென்ற 97 வயது முதியவர் :...