×

அட்சய திருதியை 7-5-2019

கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை

கர்நாடக மாநிலத்திலுள்ள பெண்கள்  அட்சய திருதியை நன்னாளில் ‘‘சுவர்ண கெளரி விரதம்’’ என்ற விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். இந்நன்னாளில்  கெளரி எனப்படும் பார்வதி தேவி தனது பெற்றோர்களின் இல்லத்திற்கு வருவதாகவும், விநாயகர் தன் அன்னையின் பாதுகாப்புக்காக அடுத்த நாள்  வருவதாகவும் ஐதீகம். அன்றைய தினம் கர்நாடக மாநிலப் பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து, அதில் கெளரியை எழுந்தருளச் செய்து  ஆராதனை செய்வார்கள். திருமணமான பெண்கள் இந்த நாளில் செல்வம், குழந்தை பாக்கியம், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும். உடல் நலத்துடன்  வாழவும் அன்று தான் தர்மங்கள் செய்கின்றனர்.

அட்சய திருதியையின் பெருமை

சித்திரை மாதம் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் ‘‘அட்சய திருதியை’’ கொண்டாடப்படுகிறது. அட்சயத்தின் பெருமையை விளக்கும் கதை இது.  ஒரு முறை கிருஷ்ண பரமாத்மா, அந்தப் புரத்தில் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அதே நேரத்தில் திருராஷ்டிரன் சபையில்  திரௌபதியின் வஸ்த்ராபரணம் நடந்து கொண்டிருந்தது. துச்சாதனன் துகில் உரித்தபோது, நிராதரவான நிலையில் இருந்த திரௌபதி, பகவான்  ஸ்ரீகிருஷ்ணனிடம் பூரண சரணாகதி அடைந்தாள். அவள் தன் இரு கரங்களையும் உயரே கூப்பி, ‘‘லோகநாதா, கிருஷ்ணா! இந்த நிலை அடைந்த  என்னை நீயும்

கைவிட்டு விடாதே! உன்னை சரணடைகிறேன்’’ என்று பிரார்த்தனை செய்தாள். அப்போது கிருஷ்ணன் தான் இருந்த இடத்தில் இருந்தபடியே, தன்  இரண்டு கைகளையும் உயர்த்தி ‘‘அட்சயம்’’ என்றார். அதனால் ஸ்ரீகிருஷ்ணனின் அருளால் துச்சாதனன் இழுக்க, இழுக்க திரௌபதியின் துகில் புதிது,  புதிதாகத் தோன்றிக் கொண்டே இருந்ததே. அந்த திவ்ய ஆடைகள் சபை முழுவதும் குவிந்தன.பகவான் ஸ்ரீகிருஷ்ணன் உச்சரித்த ‘‘அட்சயம்’’ என்ற  சொல் பெருமைக்கு உரியதாயிற்று.

அட்சய திருதியை நன்னாள்  

கும்பகோணத்தில் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை நன்னாளன்று பன்னிரெண்டு கருட சேவை உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்  நாளில் புண்ணிய நதிகளில் நீராடி, இறைவனை வணங்கினால் குறையாத வளங்கள் வாழ்வில் பெருகும்.

- டி. பூபதி ராவ்

Tags :
× RELATED எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!