×

சிதம்பரம் கோயிலில் அவமதிப்பு விவகாரம்; நடராஜரும்…நானும்… இடையில் நாரதர்கள் வேண்டாம் கவர்னர் தமிழிசை பதிலடி

புதுச்சேரி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா நேற்று நடந்தது. இதில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கவர்னருக்கு தீட்சிதர்கள் செய்தி தாளில் வைத்து லட்டு பிரசாதம் வழங்கினர். அப்போது, பிரசாதம் வழங்கப்பட்ட பேப்பரில் கவர்னரிடம் புகைப்படத்துடன் கூடிய செய்தி இடம் பெற்றிருந்தது. மேலும், கோயிலில் கவர்னரை தீட்சிதர் ஒருவர் அவமதித்ததாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவங்கள் நேற்று பெரும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, லட்டு பிரசாரம் வழங்கிய பேப்பரில் கவனரின் படம் இடம் பெற்றிருந்த புகைப்படம் நேற்று சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த படத்தை பதிவிட்டு நெட்டிசன்கள் கவர்னரை கிண்டல் செய்யும் வகையில் பதிவுகளை வெளியிட்டனர். இவ்விரு சம்பவங்களுக்கும் பதிலடி தரும் வகையில் கவர்னர் தமிழிசை தனது பேஸ்புக் பக்கத்தில், நடராஜரும்…. நானும்… இடையில்… நாரதர்கள் வேண்டாமே!!! என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனம் தரிசனத்திற்கு  சென்றபோது நடந்த சுவையான சம்பவம்… 6ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்வதற்காக சென்றேன். திருக்கோவில் நிர்வாகத்தினர் என்னை கோயிலில் வெளியே வந்து உள்ளே அழைத்துச் சென்று திருமஞ்சனம் நிகழ்வை காண்பதற்காக கோயிலில் ஒரு இடத்தில் அமரச் செய்தார்கள். பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்று என்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளை ஓரமாக அமர வேண்டும் என்று சொல்லி நானும் பொதுமக்களின் தரிசனத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக அமர்ந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். இறைவனுக்கு நடைபெற்ற ஒவ்வொரு அபிஷேகத்திற்கு பின்பு இறைவனின் சந்தனம், மாலை போன்றவற்றை அளித்தார்கள்.  நானும் என்னருகில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் பிரசாதத்தை பகிர்ந்து கொண்டேன். மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். யாரும் எனக்கு இடையூறு செய்யவில்லை. நானும் யாருக்கும் இடையூறு செய்யவில்லை. தரிசனத்திற்கு இடையில் ஒருவர் என்னிடம் வந்து வேறு இடத்தில் அமர்ந்து கொள்கிறீர்களா? என்று கேட்டார். நான் அதற்கு அபிஷேகம் எனக்கு நன்றாக தெரிகிறது. நான் இங்கேயே அமர்ந்து கொள்கிறேன் என்று மட்டும்தான் கூறினேன். அதற்கு பின்பு  அபிஷேகம் முடிந்தவுடன் சந்தனம், மாலை கொடுத்தார்கள். நிறைவாக இறைவனுக்கு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. தங்க காசுகளால் நடைபெற்ற சொர்ணாபிஷேகத்தை மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். சொர்ணாபிஷேகம் நிறைவடைந்தவுடன் அப்போது தீட்சிதர் ஒருவர் எனக்கு இரண்டு லட்டுகளை கொடுத்தார். லட்டுகளை கொடுத்துவிட்டு தீட்சிதர் என்னிடம் இறைவனின் அருள் உங்களுக்கு முழுவதுமாக உள்ளது. இதை உங்களிடம் சொல்வதற்கு மிக ஆனந்தமாக உள்ளது என்றார். எனக்கு ஒன்றுமே புரியாமல் அவரை பார்த்தேன். அப்போது அவர் கூறினார் லட்டு மடித்திருக்கும் இந்த காகிதத்தை பாருங்கள் என்று கூறினார். நானும் பிரித்து பார்த்தேன் அதில் என்னுடைய வண்ணப்படம் இடம்பெற்றிருந்த ஒரு செய்தித்தாள். அப்போது தீட்சிதர் என்னிடம் கூறினார், கவர்னருக்கு லட்டு கொடுக்க வேண்டும் என்று ஒரு காகிதம் கொடுங்கள் என்று மற்றொரு தீட்சிதரிடம் கேட்டேன். அவர் கொடுத்த காகிதத்தில்  உங்கள் படம் இருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது.  ஆகையால் இந்த லட்டை உங்கள் படத்தோடு  உங்களுக்கு தருகிறேன். இது உங்களுக்கு நடராஜ பெருமான் அருளும் மானசீக ஆசிர்வாதமாக எனக்கு தோன்றியது என்றார். இது ஒரு சுவையான அனுபவம்… காலையில் முழுமன நிறைவோடு சிதம்பரம் நடராஜரின் ஆனி திருமஞ்சனம் விழாவில் இறைவனை தரிசனம் செய்து விட்டு இறை அருளோடு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பொதுநல வேண்டுதலுடன் கோயிலின் வெளியே வந்தால் வழக்கமாக சில வதந்திகளும், புரளிகளும் வருகிறது. அந்த புரளிகளை நான் புறந்தள்ளுகிறேன். சுவையான சம்பவங்களை நான் மனதில் எடுத்துக்கொள்வதும் நேர்மறையான சிந்தனைகளையே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை இறைவன் எனக்கு தந்திருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு மற்றவர்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்….

The post சிதம்பரம் கோயிலில் அவமதிப்பு விவகாரம்; நடராஜரும்…நானும்… இடையில் நாரதர்கள் வேண்டாம் கவர்னர் தமிழிசை பதிலடி appeared first on Dinakaran.

Tags : Chidambaram Temple ,Naradars ,Nataraja ,Naradar ,Tamil ,Nadu ,Ani Thirumanjana Veterisana Festival ,Chidambaram Natarajar Temple ,New Year ,Governor of ,Natarajan ,Governor ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...