×

வெற்றியை தருவார் வெயிலுகந்த விநாயகர்

* முத்தாலங்குறிச்சி, தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி கிராமத்தில் ஊரின் நடுவே எழுந்தருளி அருட்பாலிக்கிறார் முக்குறுணி அரிசி பிள்ளையார்.  ஊரில் உள்ள ஊருணிக்கு செல்லும் சந்து(முக்கு) அருகே மரத்து நிழலில் கோயில் கொண்டமையால் இந்த பிள்ளையார் முக்கூருணி பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார். முக்கு+ஊரூணி+பிள்ளையார் என்பதன் சுருக்கமே அது. இக்கோயிலை சுற்றி பல குடியிருப்புகள் இருந்துள்ளது. இவரை முக்குறுணி அரிசி பிள்ளையார் என்றும் அழைப்பார்கள்.  முக்குறுணி அரிசியில் கொழுக்கட்டை செய்து இவருக்கு படைத்தால் வேண்டும் வரம் தருவார் என்று சொல்கிறார்கள். ஆகவேதான் முக்குறுணி அரிசி பிள்ளையார் என்றும் அழைக்கப்பட்டாராம். முகில் வண்ண நாதர் என்ற வீரபாண்டீஸ்வரர் கோயில் வலதுபுறம் முக்குறுணி பிள்ளையார் மிக அம்சமாக இருக்கிறார். பிள்ளையார் சந்நதிக்கு நேராக பின்புறம் லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது.பிள்ளையாரின் அருளால் பெருவாழ்வு கிடைக்கப் பெற்றவர்கள் பிள்ளையாருக்கு தனிக்கோயில் கட்ட முன் வந்தனர்.

ஆனால் இந்த பிள்ளையார் எனக்கு கோயிலும் வேண்டாம், கூரையும் வேண்டாம். மரத்து நிழலே போதுமானது என்று கோயில் கட்ட நினைத்த பக்தர்களின் கனவில் தோன்றி அருள் மொழி கூறினார். இருப்பினும் ஒரு சமயம் இவருக்கு கூரை போடமுயற்சி செய்தார் ஒரு பக்தர். அந்த பக்தரை படாத பாடு படுத்தி விட்டார். அன்று முதல் யாரும் இவருக்கு கூரைபோட முன்வரவில்லை. தற்போதும் கூட இவருக்கு  கூரை போட எழுப்பப்பட்ட 4 கல் தூண் அப்படியே  உள்ளது. திறந்த வெளியில், வேப்பமரத்தடியில் ஒய்யாரமாய் இருக்கிறார் பிள்ளையார். இந்த பிள்ளையாருக்கு எண்ணெய் சாத்த வேண்டும் என்றால் குறைந்தது 10 லிட்டர் எண்ணெயாவது  சாத்த வேண்டும். சுமார் 5 அரை அடி உயரத்தில் உள்ள இந்த பிள்ளையார் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளார். இவரது வயிற்றில்  செல்லும் நரம்பு மற்றும் பூணூல் கூட தெரியும் அளவிற்கு மிக அழகாக இந்த பிள்ளையாரின் விக்ரஹம் செதுக்கப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள இந்த பிள்ளையார் மிக பிரமாண்டமாக உள்ளார். அவருக்கு 8 முழம்  வேஷ்டியைதான் கட்ட முடியும்.

இந்த வேஷ்டியை கூட ஒருவரால் கட்ட முடியாது. இரண்டு பேர் தான் சேர்ந்து தான் கட்ட வேண்டும். இந்த மாதிரி பிரமாண்டமான பிள்ளையார் ஒருசில இடங்களில் மட்டுமே இருப்பார். திருச்செந்தூர், சிதம்பரம், திருநெல்வேலி சிவன் கோயில்களில் இதே போல்  பிரமாண்டமான பிள்ளையார் உள்ளார். இந்த பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசியில் கொழுக்கட்டை செய்து வைத்து மனம் உருக வேண்டினால் வேண்டும் வரம் தருவார். ஒரு காலத்தில் இந்த பிள்ளையாரை திருட்டுத்தனமாக  தூக்கி கொண்டுச்செல்ல  வேண்டும் என்று ஒரு சிலர் முயன்றுள்ளார்கள். இரவு முழுவதும் இவரை  சுற்றி தோண்டினர். அந்த காலத்தில் பாறை கல்களை தூக்கக் கூடிய வீஞ்சி என்று சொல்லப்படும் இயந்திரத்தினை கொண்டு  வந்தனர். அந்த வீஞ்சி மூலம் லாரியில் ஏற்ற முயற்சி செய்திருக்கிறார்கள்.  அதற்காக இரவு முழுவதும் முயற்சி செய்தும் அதை தூக்க முடியவில்லை. ஆகவே பொழுது விடிந்தவுடன் பிள்ளையாரை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் விட்டனர். தற்போது இந்தப் பிள்ளையாரை வணங்க பல இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். நெல்லை - திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள முத்தாலங்குறிச்சியில் முக்குறுணி விநாயகர் வீற்றிருக்கிறார்.

- முத்தாலங்குறிச்சி காமராசு.

Tags : successor ,Vinayaka ,
× RELATED கழுகுமலை அருகே கோயில் கொடை விழா:...