×

போர்க்களத்தில் ஒரு வசனம்


‘போர் தர்மங்கள்’ குறித்து இஸ்லாமிய வாழ்வியல் விரிவாகப் பேசுகிறது. எதிரிகளுடன் போரிடும்போது இஸ்லாமியப் படைகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான சட்டதிட்டங்களை இறைவனும் இறைத்தூதரும் வகுத்தளித்துள்ளார்கள். பெண்களைக் கொல்லக் கூடாது, குழந்தைகளைத் துன்புறுத்தக் கூடாது, பயிர் பச்சைகள், மரம் செடிகொடிகளை அழிக்கக் கூடாது, தேவாலயங்கள், மடங்களின் புனிதம் காப்பாற்றப்பட வேண்டும், மதத் தலைவர்களுக்கும், குருமார்களுக்கும், துறவிகளுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்தச் சட்டங்கள் நீளுகின்றன. மும்முரமாகப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிரிகளின் படையைச் சேர்ந்த  ஒருவர் மார்க்கத்தை அறிய விரும்புகிறார். அப்போது அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

திருமறை குர்ஆன்  வழிகாட்டுகிறது. “இணைவைப்பாளர்களில் எவரேனும் அடைக்கலம் கோரி உம்மிடம் (இறைவேதத்தைச் செவியுறுவதற்காக) வந்தால் அப்போது இறைவனின் வேதத்தைச் செவியுறும் வகையில் அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக. பிறகு அவரை அவருடைய பாதுகாப்பிடத்தில் சேர்த்து விடுவீராக. இவ்வாறு ஏன் செய்ய வேண்டும் எனில் அவர்கள் அறியாத சமூகத்தினராய் இருக்கிறார்கள்” (குர்ஆன் 9:6) அதாவது போர் நடந்துகொண்டிருக்கிறது. அப்போது பகைவர்களில் ஒருவர் முஸ்லிம்களிடம் வந்து, “நான் மார்க்கத்தை அறிய விரும்புகிறேன்” என்று விரும்பிக் கேட்கிறார் எனில், “ஆஹா... எதிரி தானாக வந்து மாட்டிக் கொண்டிருக்கிறார்.. உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவோம்” என்கிற ரீதியில் முஸ்லிம் வீரர்கள் செயல்படக் கூடாது.

மாறாக, போர்க்களமாகவே இருந்தாலும் மார்க்கத்தை அறிந்துகொள்ள வந்த சகோதரரை அன்புடன் வரவேற்று அவருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும். அவருக்கு இறைவேதத்தை ஓதிக்காட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் கேட்கும் ஐயங்களுக்கும் வினாக்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். இதனால் அவர் மனநிறைவு பெற்று இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டால் நல்லது. அவர் ஏற்கவில்லை எனில் அப்போதும் அவருக்கு உரிய மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். அவர் தங்கியிருக்கும் இடம் அல்லது பாசறைவரை அவரைப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க
வேண்டும். ஒன்பதாம் அத்தியாயத்தின் ஆறாம் வசனத்திற்கு இதுதான் பொருள். போர்க்களத்திலும் மனிதநேயத்தை வலியுறுத்தும் அழகிய மார்க்கம் இஸ்லாம் ஆகும்.

இந்த வார சிந்தனை

“வானங்கள், பூமியின் ஆட்சியதிகாரம் இறைவனுக் குரியதாகும். வாழ்வும் மரணமும் அவன் கைவசமே உள்ளன. இறைவனைத் தவிர உங்களைப் பாதுகாப்பவரும் உதவி புரிபவரும் யாரும் இல்லை.”(குர்ஆன் 9:116)

 சிராஜுல்ஹஸன்

Tags : battlefield ,
× RELATED முதலீடு எடுக்கப்பட்டுவிட்ட நிலையில்...