×

கருத்துருக்களை தயாரித்து அனுப்பாத நெடுஞ்சாலை துறையால் கிடப்பில் போடப்பட்ட சாலை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: வனத்துறை அனுமதி கொடுக்க தயாராக இருந்தும் கருத்துருக்களை தயாரித்து அனுப்பாத நெடுஞ்சாலை துறையால் அருங்கால்-காட்டூர் சாலை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் முடிவடையும் ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலை 14 கிலோ மீட்டர் கொண்டது. இச்சாலை மாநில ஊரக நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், காட்டூர் முதல் பெரிய அருங்கால் வரையில் 700 மீட்டரும், இதேபோல் சின்ன அருங்கால் முதல் கீரப்பாக்கத்தில் உள்ள தேசிய எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் வரை உள்ள 300 மீட்டர் கொண்ட சாலையும், மேலும் நல்லம்பாக்கம் கிராமம் முதல் நல்லம்பாக்கம் கூட்ரோடு வரையிலான 2 கிலோ மீட்டர் கொண்ட சாலையும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 12அடி தார் சாலையாக அமைக்கப்பட்டது. இந்நிலையில் கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் மற்றும் ஊனமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிரஷர்களுக்கு சென்று வரும் கனரக வாகனங்களால் மேற்படி சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்து வந்தது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் நாற்று நடும் போராட்டம், அங்கப்பிரதட்சனம் போராட்டம், மண் சோறு சாப்பிடும் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம்  சாலையை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இதில் குண்டும், குழியுமான சாலைகள் இயங்கி வந்த அரசு பேருந்துகள் மற்றும் மாநகர பேருந்துகள் சரிவர இயங்குவதில்லை. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தியும் இதுவரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.  இதனால் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அன்றாட வேலைக்கு சென்று வருவோர்  என அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேற்படி சாலையை சீரமைக்க வனத்துறை சார்பில் அனுமதி வழங்க தயாராக உள்ளோம். ஆனால் அதற்கான கருத்துருக்களை தயாரித்து எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி நெடுஞ்சாலை துறையனரிடம் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் அதற்கான கோப்புகளை இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் எங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை என்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகடம் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டனர்….

The post கருத்துருக்களை தயாரித்து அனுப்பாத நெடுஞ்சாலை துறையால் கிடப்பில் போடப்பட்ட சாலை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kootuvancheri ,Arunkal-Katur Road ,Highway Department ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே சாலை சீரமைப்பு பணியின் தரம் ஆய்வு