×

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள்: விபத்து பீதியில் மக்கள்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சானடோரியம், கடப்பேரி, கிருஷ்ணா நகர், சிட்லபாக்கம், அஸ்தினாபுரம், செம்பாக்கம், பெருங்களத்தூர், பழைய பெருங்களத்தூர், சி.டி.ஓ காலனி, மாடம்பாக்கம், சேலையூர், பீர்க்கன்காரணை, அனகாபுத்தூர், பம்மல், திருநீர்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளது.இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்வாரியம் சார்பில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சரியாக பராமரிக்கப்படாததால் மின்கம்பிகள் முழுவதும் மரக்கிளைகள், செடி கொடிகள் சூழ்ந்தபடி காணப்படுகிறது. இதனால் லேசாக காற்று வீசினாலும் மரக்கிளைகள், மின் கம்பிகள் மேல் உரசி பயங்கர சத்தத்துடன் தீப்பொறி ஏற்படுவதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மரக்கிளைகள் மற்றும் மின் கம்பிகள் உரசும்போது தீப்பொறி ஏற்பட்டு சில சமயங்களில் மின் கம்பிகள் கீழே அருந்து விழும் நிலை ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையில் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் செடிகொடிகளை அவ்வப்போது வெட்டி அப்புறப்படுத்தி முறையாக பராமரிப்பதோடு மின் துண்டிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை முறையாக பராமரிப்பது இல்லை. இதனால் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் மரக்கிளைகள், செடி கொடிகள் சூழ்ந்த சிறிய காற்று அடித்தாலே ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப் படுவதுடன் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை ஏற்படுகின்றது.இதுபோன்ற மின் தடைகள் வெயில் காலங்களில் பெரும்பாலும் மதிய நேரங்களிலும், இரவு நேரங்களிலும் ஏற்படுகின்றது. இதனால் வீட்டில் குழந்தைகள், முதியோர்கள், பொதுமக்கள் நிம்மதியாக தூங்ககூட முடிவதில்லை. அதுமட்டுமின்றி பெரும்பாலான மின்கம்பங்களில் மின் விளக்கின் ஸ்விட்ச் பாக்ஸில் உள்ள மின்சார ஒயர்கள் ஆபத்தான நிலையில் வெளியே தொங்கியபடி உள்ளது. அவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ள ஒயர்களில் மின்வாரிய ஊழியர்கள் சிறிதளவில் மட்டும் டேப்பை போட்டுவிட்டு அப்படியே விட்டுவிட்டுள்ளனர். இதனால் மழை காலங்களில் அந்த ஒயர்களில் மழைநீர் படும்போது அதில் இருந்து தீப்பொறி ஏற்படுகின்றது.மேலும் அவ்வாறு உள்ள ஒயர்கள் தரைதளத்தின் மிக அருகில் இருப்பதால் தெருக்களில் விளையாடும் குழந்தைகள் அதில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகளில் உயர் மின்னழுத்தம் ஏற்படுவதால் வீடுகளில் உள்ள விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் பழுது ஆகின்றது. இதுபோன்ற உயர் மின்னழுத்தம் அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகம் ஏற்படுகின்றது. அவ்வப்போது பராமரிப்பு பணி என காலை முதல் மாலை வரை மின்தடை அறிவித்து பணி செய்வதாக கூறி வரும் மின்வாரிய ஊழியர்கள் எந்த ஒரு பணியையும் முழுமையாக செய்வதாக தெரியவில்லை.அவ்வாறு அவர்கள் பணிகளை முழுமையாக செய்திருந்தால் இதுபோன்ற மின்தடை பிரச்சனை ஏற்படாது. மின் பிரச்சினைகள் குறித்து மின்வாரிய அலுவலகங்களுக்கு தொடர்புகொண்டால் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அழைப்பை எடுப்பதே இல்லை, சில சமயங்களில் அழைப்பை எடுத்தாலும் அலட்சியமாக பதில் சொல்லி இணைப்பை உடனடியாக துண்டித்து விடுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் எங்கெங்கெல்லாம் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் மரக்கிளைகள், செடி கொடிகள் சூழ்ந்து இருக்கின்றதோ அவற்றை முழுமையாக அகற்றுவதோடு மின்கம்பங்களில் உடைந்த நிலையில் உள்ள சுவிட்ச்சிகளை புதிதாக மாற்றுவதோடு எங்கெல்லாம் மின்கம்பங்கள் சேதமடைந்து இருக்கின்றதோ அவற்றை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்கள் ஆக மாற்ற வேண்டும்.உயர் மின்னழுத்தம் ஏற்படுகின்ற பகுதிகளை கண்டறிந்து அவற்றை சரி செய்து பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததோடு, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து முறையாக இதுபோன்ற பராமரிப்பு பணிகளை செய்து வந்தால் மின்தடை என்பது நிச்சயம் இருக்கவே இருக்காது. இவ்வாறு தெரிவித்தனர்….

The post தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள்: விபத்து பீதியில் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,West Tambaram ,East Tambaram ,Pallavaram ,Crompet ,Sanatorium ,Kadapperi ,Krishna Nagar ,Chitlapakkam ,Asthinapuram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...