×

கோரிய வரம் தரும் கோதண்டராமர்

வட நாட்டில் பத்ராசலம் என்ற இடத்தில் ஸ்ரீராமருக்குக் கோயில் கட்டினார் புகழ் பெற்ற ராம பக்தர் ராமதாசர். அவரது வம்சாவழியில் வந்தவர்கள் எனக் கூறப்படும் ஆதிநாராயண தாசர் என்பவர் சென்னை மேற்கு மாம்பலத்தில் கோதண்ட ராமர் கோயிலைக் கட்டினார். இத்திருக்கோயில் தமிழகத்தில் உள்ளதால் தட்சிணபத்ராசலம் என்றே அழைக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அருட்பாலிக்கவே இங்கு கோயில் கொண்டுள்ளார் கோதண்டராமர் என்கிறது தல புராணம்.
ஸ்ரீ மாபிலக்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட மேற்கு மாம்பலத்தில் பிரதான மூலவராக ஸ்ரீபட்டாபிராமர் எழுந்தருளி இருக்கிறார். உற்சவர் கோதண்டராமர் நின்ற திருக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். அவருக்கு வலப்பக்கம் சீதாப்பிராட்டியும் இடப்பக்கம் இலக்குவன் மற்றும் பரத, சத்ருக்கனனோடு குடும்ப சகிதமாகக் காட்சி அளிக்கிறார்.

உற்சவர் கோதண்டராமருக்கு பின்பாக ஸ்ரீ பட்டாபிராமர் எழுந்தருளியிருக்க அவருடைய இடப்பக்கம் மடியில் சீதாப்பிராட்டி அமர்ந்திருக்க, வலப்புறம் இளைய பெருமாள் குடைபிடிக்க சிறிய திருவடியான அனுமான் ராமரின் பாதங்களைத் தாங்கியிருக்க அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார் ராமர். ஸ்ரீ ராமன் பத்ராசலத்தில் காட்சி அளிக்கும் அதே திருக்கோலத்தை இங்கும் தாங்கி இருக்கிறார். கலியுக வரதனான எம்பெருமான், பக்தர் கனவிலே வந்து இங்கே கருவறை கொண்டான் என்கிறது தல புராணம். 1926-ம் ஆண்டு வங்காயல குப்பைய செட்டியார் என்பவர் இத்திருக்கோயிலைப் பெரிதாக உருவாக்கினார். இவர் சிறந்த ராமபக்தர். இவருக்கு நேர் வாரிசு இல்லாததால், இவரது பங்காளிகள் மெல்லக் கொல்லும் விஷத்தை உணவில் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதனை உண்டுவிட்ட தமது பக்தரின் உடலில் கலந்துவிட்ட விஷத்தை ராமர் முறித்துவிட்டார்.

பின்னர் இந்த கோதண்டராமர் தனது கோயிலைப் பெரிதாக எடுத்துக் கட்டும்படி கனவில் கூறினாராம். ஸ்ரீராமரின் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றிய வங்காயல குப்பையச் செட்டியார் கோயிலை எடுத்துக் கட்டி 30.04.1927அன்று கும்பாபிஷேகம் செய்தார். பின்னர் கோயிலை ஸ்ரீ சீதா லட்சுமண, பரத சத்ருக்ன அனுமத் சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு சமர்ப்பித்தார். இந்த மகா குடமுழுக்கு சமயத்தில் திருநீர்மலை ஸ்ரீரங்கநாதப் பெருமாள் இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்தார். கோதண்டராமர் சந்நதிக்கு வலப்புறமாக இந்தச் சந்நதி இருக்கிறது. ரங்கநாத பெருமாள் பாம்பணையில் சயனத் திருக்கோலத்தில் இருக்க ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி பெருமாளின் திருவடியருகே அமர்ந்திருக்க சதுர்முக பிரம்மா நாபிக்கமலத்தில் இருந்து தோன்றிய வண்ணமாகக் காட்சி அளிக்கிறார். இந்த ரங்கநாதப் பெருமானை ஸ்ரீபிருகு மகரிஷி சேவித்துக் கொண்டிருக்கிறார். யோக நரசிம்மர் சந்நதி, கோதண்ட ராமர் சந்நதிக்கு இடப்புறமாக அமைந்துள்ளது. இங்கு நரசிம்மப் பெருமாள் யோகப்பட்டத்துடன் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

இத்திருக்கோயிலில் பெருமாள் நின்றான், கிடந்தான், அமர்ந்தான் என மூன்று நிலைகளில் பெருமாள் சேவை சாதிப்பது மிகவும் விசேஷமாகும். தனிக்கோயில் நாச்சியாராக  ஸ்ரீ ரங்கநாயகி தாயார் அமர்ந்த திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார்.   சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஸ்ரீஆண்டாள் வழக்கம்போல் நின்ற திருக்கோலம். ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு நேர் எதிரே அமைந்துள்ளது அனுமன் சந்நதி. வலது திருக்கையில் சஞ்சீவி மலையை ஏந்தியிருக்க, இடது கையை அபய முத்திரையுடன் கொண்டு காட்சி அளிக்கிறார். குபேர மூலையான வடக்குப்புறமாகப் பார்த்துக் கொண்டிருப்பது விசேஷம். இவர் வரப்பிரசாதியாக பக்தர்கள் கோரியனவற்றை அருளுபவர் என்பது ஐதீகம். சேனை முதலியார், கருடன், நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கும் சந்நதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்:சந்திரசேகர்

Tags :
× RELATED முதல் பூஜை பசுவுக்கே!