×

கேன்ஸில் சாதித்த ராணா தயாரித்த படம் தியேட்டர்களில் வெளியானது!

பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் செப்டம்பர் 21 முதல் கேரளாவில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் இந்திய திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் வரலாறு படைத்தது. அங்குள்ள மதிப்புமிக்க கிராண்ட் பிரிக்ஸை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றது. ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தப் படத்தின் இந்திய விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. ஜிகோ மைத்ரா, சாக் அண்ட் சீஸ் பிலிம்ஸ் மற்றும் ரணபீர் தாஸ், அனதர் பர்த் ஆகிய படங்களைத் தயாரித்தவர்களே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளனர்.

இந்த படம் வரும் வாரத்தில் இந்திய மொழிகளில் ஒன்றான மலையாளத்தில் வெளியாகிறது. கேரளாவில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதையடுத்து இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் படம் வெளியாகவுள்ளது. படத்தின் மலையாள பெயர் ’பிரபய நினச்சதெல்லாம்’.

இந்திய திரையரங்குகளில் படம் வெளியாவது பற்றி பாயல் கபாடியா கூறுகையில், “கேரளாவில் இருந்து மும்பைக்கு தங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடைய இரண்டு பெண்கள் வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கரு. எனவே, படத்தை திரையரங்குகளில் பார்க்கும் முதல் மாநிலம் கேரளாவாக இருக்க வேண்டும் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இதற்கடுத்து, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் படம் பார்க்க இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

இந்தியாவில் விநியோகத்திற்காக படத்தை வாங்கி இருக்கும் ஸ்பிரிட் மீடியா, நடிகர் ராணா டகுபதி கூறுகையில், “இந்தப் படத்தை இந்திய பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்திய சினிமா கதை சொல்லலில் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மும்பை போன்ற பெரிய நகரங்களில் பல மொழிகள் பேசும் மக்கள் தங்கள் கனவை நோக்கி வருவதையும் அங்கு அவர்கள் பெறும் அனுபவத்தையும் இந்தப் படம் தெளிவாகக் காட்டியுள்ளது” என்றார்.

கடந்த 30 ஆண்டுகளில் கேன்ஸ் திரைப்பட விழாவின் முதன்மைப் போட்டியில் கலந்து கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும். மேலும் இந்த போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் இயக்குநர் என்ற பெருமையையும் பாயல் பெற்றார். ஆண்ட்ரியா அர்னால்ட், பிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா, ஜியா ஜாங்-கே, பாவ்லோ சோரெண்டினோ, சீன் பேக்கர் மற்றும் அலி அப்பாஸி போன்ற திறமை மிக்க இயக்குநர்களுடன் பாம் டி’ஓர் விருதுக்கு போட்டியிட்ட 22 படங்களில் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மட்டுமல்லாது டெல்லுரைடு திரைப்பட விழா, டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா, நியூயார்க் திரைப்பட விழா மற்றும் சான் செபாஸ்டியன் திரைப்பட விழா என உலகளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அகாடமி விருதுகளில் சர்வதேச திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ஆஸ்கர் பண்டிட்களில் இந்த படம் முன்னணியில் உள்ளது.

மலையாள-இந்தி திரைப்படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் மற்றும் அஜீஸ் நெடுமங்காட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நர்ஸ் பிரபாவின் கதை. இந்த படம் இந்தியாவிலிருந்து சாக் மற்றும் சீஸ் பிலிம்ஸ் மற்றும் பிரான்சின் பெட்டிட் கேயாஸ் ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ இந்தோ-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பாகும்.

 

The post கேன்ஸில் சாதித்த ராணா தயாரித்த படம் தியேட்டர்களில் வெளியானது! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Saditha Rana ,Payal Kapadia ,Kerala ,77th Cannes Film Festival… ,Cannes ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தமிழ்நாடு முட்டைகளுக்கு நுழைவு...