×

வேலை இல்லை, திருமணமும் ஆகாததால் விரக்தி 24வது மாடியில் இருந்து குதித்து பெண் இன்ஜினியர் தற்கொலை: கேளம்பாக்கம் அருகே பரபரப்பு

சென்னை: வேலை இல்லாததாலும், திருமணம் ஆகாததாலும் விரக்தியடைந்த பெண் இன்ஜினியர் ஒருவர், 24வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேளம்பாக்கம் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூரில் ஓ.எம்.ஆர். சாலையில் 30 மாடிகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மன்னார்குடியைச் சேர்ந்த  ஒப்பந்ததாரர் வில்லியம் ஜேம்ஸ் என்பவர் தனது மகள் ஜெனிபர் (35) என்பவருடன் 24வது மாடியில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளராக இருந்த ஜெனிபருக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை பறிபோனது. பின்னர் பல்வேறு  தனியார் மென்பொருள் நிறுவனங்களில் முயற்சி செய்து பார்த்தும் சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு திருமண ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, கடும் மன அழுத்தத்தில் இருந்த ஜெனிபர் கடந்த இரு நாட்களாக வீட்டில் யாருடனும்  பேசாமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது படுக்கை அறையின் ஜன்னல் கதவின் வழியாக 24வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெனிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post வேலை இல்லை, திருமணமும் ஆகாததால் விரக்தி 24வது மாடியில் இருந்து குதித்து பெண் இன்ஜினியர் தற்கொலை: கேளம்பாக்கம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kerambakam ,Chennai ,Camelambakam ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...