×

ஒரே நாளில் தினையை விளைவித்த சிவக்கொழுந்தீசர்

பெரியான் என்ற தம் அடியவருக்காக, அவர்தம் நிலத்தில் சிவபெருமான் அடியவர் வடிவில் வந்து உழவுத் தொழில் புரிந்து அருட் பாலித்த திருத்தலம்.
பெரியான் அடியவர் விதைத்த தினை அன்றே விளைவித்து அருள் பெற்றதால் திருத்தினை நகர் என்ற பெயர் பெற்றது. திருமுறைகளில் திருத்தினை நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தீர்த்தனகிரி என்று அழைக்கப் பெறுகிறது. நடுநாட்டுத் திருத்தலங்களில் ஐந்தாவதாக அமைந்த திருத்தலம். இத்தல இறைவன் சிவ கொழுந்தீசர் என அழைக்கப் பெற்றாலும், சிவாங்கரேஸ்வர், திருந்தீஸ்வரர் என்ற திருப்பெயர்களால் போற்றப் பெறுகின்றார். இறைவி  நீலாயதாட்சி அம்பிகை எனவும் ஒப்பிலா நாயகி எனவும் இளம் கொம்பனாம்பாள் எனவும் வழங்கப் பெறுகின்றாள்.

ஒரு முறை கைலாயத்தில் துர்வாசர் மகரிஷி, சிவ பெருமானை தரிசிக்க போனார். அதை சிவ கணங்களுக்கு தலைவனும், வாயிற் காப்பாளருமான பிருங்கி மகரிஷி மறுத்தார். இதனால் துர்வாசர் மகரிஷி கோபம் கொண்டு பிருங்கி மகரிஷியை சபித்தார். அந்த சாப விமோசனம் பெற, பிருங்கி மகரிஷி சிவனை வேண்டினார். சிவ பெருமான் அந்த விமோசனத்திற்கான வழியை துர்வாசர் மூலமே தெரிந்து கொள் என கூறினார். இதனால் பிருங்கி மகரிஷி, துர்வாசர் மகரிஷியை அணுக, அவர், திருத்தினை நகர் சென்று அங்குள்ள சரக் கொன்றை மரத்தடியில் சிவபெருமான் அங்குரம் ஆக (கூர்மை) சுயம்பு லிங்க வடிவில் அமர்ந்து அருட்பாலிக்கும் சிவக் கொழுந்தீசர் ஆலயத்தில் மூன்று மாதம் அல்லது முப்பது நாளாவது கடுந்தவமிருந்து விமோசனம் பெறுக என கூறினார். அதன்படி இத்தலம் வந்து பிருங்கி மகரிஷியானவர் சாப விமோசனம் பெற்றார்.

இதுபோல் பிரம்மனுடைய குமாரனான ஜாம்புவான் இத்தலத்தில் குளம் அமைத்து வழிபட்டார். மகா விஷ்ணு இத்தலத்திற்கு வந்து ஏழு நாட்கள் இத்தல ஈஸ்வரனை வழிபட்டு பலம் பெற்று முராசூரனை வதைத்து முராரி என சிறப்பு பட்டம் பெற்றார். விசால நாட்டு அரசன் விஸ்வபதி தான் அடைந்த பிரமகத்தி தோஷத்தை அவர் குமாரர் வீரசேன மகாராஜா இத்தலம் வந்து ஈசனை வழிபட்டதன் காரணமாக நிவர்த்தி பெற்றார். இவ் ஆலயமானது நான்கு யுகங்கள் இருந்து திரேதாயுக கடைசியிலும், கலியுக முதலிலும் அந்நியர்களால் சிதைக்கப்பெற்றது. பெரியான் என்ற சிவனடியாரால் புதிய பொலிவுடன் மீண்டும் உருவாக்கப்பட்டது. இப்பெரியான் என்ற சிவனடியார், தான் உன்மீது கொண்ட பக்தி உண்மை என்றால் தம் நிலத்தில் விதைக்கும் தினை இன்றே விளையட்டும் என்றார். அதன்படி சிவனருளால் அன்றே விளைந்தது. இதனால் திருத்தினை நகர் என்று வழங்கப் பெறலாயிற்று.

தில்லையிலிருந்து (சிதம்பரத்திலிருந்து) பதஞ்சலி வியக்கிர பாத முனிவர் இத்தலத்தில் வந்து திருமணக் கோலத்துடன் வந்திருந்த சிவபெருமானை பூர்ண கும்பத்துடன் அழைத்து போய் திரேதாயுகம் மனு ஆதிபராபசு வருடம் வைகாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதியன்று சிவபெருமானின் திருநடன தரிசனம் கண்டு களித்தும், சமயக்குரவர் நால்வரில் ஒருவரின் சுந்தர மூர்த்தி சுவாமிகளால் திருப்பதிகம் பெற்றதும், திருநாவுக்கரசர் சுவாமிகள், திருஞான சம்பந்தர் முதலானோர் மனமுருக தரிசித்த திருத்தலம் என்பதும் மிகவும் சிறப்புகளுக்குரிய செய்தியாகும். இத்தலத்தில் ஆகம விதிகளின் ஆறுகால பூஜைகளும், பிரதோஷம், சோமவாரம் போன்ற விசேஷ நாட்களிலும், பிரம்மோற்சவ நாட்களிலும் மகா சிவராத்திரி போன்ற மிகச்சிறந்த சிவனுக்குகந்த விசேஷங்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து தரிசிப்பது உண்டு.அடியவர் துன்பம் எதுவாயினும் சூரியனைக் கண்ட பனிபோல அகன்று பதினாறு பேறும், பதினாறு முறை காசிக்கு சென்று வந்த புண்ணியத்தை இத்தல ஈஸ்வரனை ஒருமுறை தரிசித்தாலே கிடைத்திடும் என்பது ஐதீகம்.

இறைவன் ஸ்ரீ சிவக்கொழுந்தீசர்
இறைவி  ஸ்ரீ கருந்தடக் கண்ணி
தலவிருட்சம் சரக்கொன்றை
தலத்தீர்த்தம் ஜாம்பு தீர்த்தம்.

கடலூர் சிதம்பரம் சாலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து இறங்கி 6 கிலோ மீட்டர் மேற்கே செல்லும் பாதையில் இத்திருத்தலம் இனிய இயற்கை சூழலில் அமைந்துள்ளது.
 
கவிஞர் சீனு. செந்தாமரை

Tags : Sivakandan Chinnar ,
× RELATED காமதகனமூர்த்தி