×

குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு அதிகரிப்பு : தொழிற்சாலைகளில் உற்பத்தி தீவிரம்

மஞ்சூர் :  குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. இதையொட்டி மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது. இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்களுக்கு சொந்தமான  தொழிற்சாலைகளும் உள்ளன. நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து 4 மாதங்களுக்கும் மேலாக மழை அறவே பெய்யாததால் கடும் வறட்சி நிலவியது. இதனால் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வறட்சியின் தாக்கத்தால் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்து போனது. இதனால் தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக குந்தா பகுதியில் பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகளும் தங்களது தேயிலை தோட்டங்களில் உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக தற்போது தோட்டங்களில் தேயிலை மகசூல் பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் நாளொன்றுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து காணப்பட்ட நிலையில் தற்போது தினசரி 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து உள்ளதாக தொழிற்சாலைகள் தரப்பில் கூறப்படுகிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் உற்பத்தி திறனுக்கும் மேலாக பசுந்தேயிலை வரத்து காணப்படுவதால் தேயிலைத்தூள் உற்பத்தி மேற்கொள்வதில் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பசுந்தேயிலை கொள்முதலில் ‘கோட்டா’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் மூலம் விவசாய உறுப்பினர்களிடம் இருந்து குறிப்பட்ட அளவு பசுந்தேயிலை மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இதனால் தேயிலை தோட்டங்களில் இருந்து அதிகப்படியான பசுந்தேயிலை பறிக்க முடியாமல் வருவாய் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தார்கள்….

The post குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு அதிகரிப்பு : தொழிற்சாலைகளில் உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kunta ,Kunda ,
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...